Last Updated : 28 Apr, 2021 03:13 AM

 

Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

ஏன் தடுப்பூசி தவிர்க்க முடியாத ஆயுதம்?

ஒரு லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று ஒவ்வொரு நாளும் இந்தியாவில் அதிகரித்துவரும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையை உலகமே கவலையுடன் பார்க்கிறது. வூஹானில் தன் பயணத்தைத் தொடங்கிய இந்த வைரஸ், இப்போது 750-க்கும் மேற்பட்ட மாற்றுருக்களுடன் இந்தியாவில் வலம் வந்துகொண்டிருக்கின்றது.

முந்தைய அலையில் முதியோரும், இதய நோய், நீரிழிவுநோய் போன்ற தொற்றாநோய்களைக் கொண்டோரும் மட்டுமே அதிகம் பாதிப்புக்குள்ளாவோராக இருந்தனர். தற்போதைய கரோனாவின் மாற்றுருக்கள் இளைஞர்கள் மற்றும் வாழ்வியல் நோயில்லாதவரையும் தாக்கத் துவங்கியிருப்பதுதான் மருத்துவ உலகத்திற்குக் கூடுதல் சவால். இன்றைக்குத் தடுப்பூசி வந்துவிட்டது. ஆனாலும், அடுத்த அலைவீச்சில் கரோனா இன்னும் வேகமாகப் பரவுவதும், அதற்குத் தடுப்பூசி இயக்கத்தை முழு வேகத்தில் நாம் முன்னெடுத்துச் செல்லாததும் ஒரு காரணமாக இருப்பதும் பெரிய வேதனை.

முற்போக்கு தமிழகமா இது?

பொதுவாக, முற்போக்கான சிந்தனைக்குப் பேர்போன தமிழ்நாட்டில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இன்று மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஐயம், அச்சம், குழப்பத்துக்கு இரு முக்கியமான காரணங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன்.

வெகுசனத்துக்குப் புரியக் கூடிய அணுக்கமான மொழியையும், அரவணைக்கும் அணுகுமுறையையும் எங்கோ நவீன மருத்துவ உலகம் இழந்து நிற்கிறது. தடுப்பூசி தொடர்பான மக்களின் எல்லா சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முறையாகப் பதில் அளிப்பது முக்கியம். முழு வெளிப்படைத்தன்மையும், சரியான அறிவியல் தரவுகளை முறையாக வெளியிடுவதுமே இந்த விஷயத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கும். மாறாக, மேதமைப் போக்குடன் அணுகினால் மக்கள் விலகியே செல்வார்கள். இது முதலாவது.

அடுத்தது, மாற்று அறிவியலாளர்கள், மாற்று மருத்துவ முறைகளைக் கையாள்பவர்கள், மரபுசார் வாழ்வியல் செயல்பாட்டாளர்களில் ஒரு பகுதியினர் தடுப்பூசியை அச்சத்தோடும் சந்தேகத்துடன் பார்ப்பதும், அதுகுறித்து எதிர்மறையாக விவாதிப்பதும் ஆகும். நாம் மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை எதிர்ப்பதுபோல், தடுப்பூசிகளை எதிர்க்க முடியாது; எதிர்க்கவும் கூடாது. சூழலோடு இயைந்த வாழ்க்கை என்பது அறிவுக்கோ, அறிவியலுக்கோ எதிரி அல்ல.

நிராயுதபாணியாக நின்று மனித குலம் இன்று எதிர்கொள்ளும் போரில் கரோனாவை எதிர்கொள்ள நவீன அறிவியலின் துணை கொண்டு அது எடுக்கும் முக்கியமான ஆயுதம் தடுப்பூசி. இந்தத் தடுப்பூசிக்குப் பின்னுள்ள அறிவுக்கும் மிக நீண்ட ஒரு மரபு உண்டு. அம்மை நோயில் கொப்புளங்களிலிருந்து பாலைக் கீறி அடுத்தவருக்குக் குத்தூசி மூலம் தடுப்பூசி போட்ட மரபினர்தாம் நாம். எட்வர்டு ஜென்னருக்கு முன்னமேயே இந்தப் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கிறது.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் வங்கத்திலும் தொற்றுநோய்களை எதிர்கொள்ள என்னென்ன வழிமுறைகளையெல்லாம் கையாண்டார்கள், தடுப்பூசிக் கலாச்சாரம் இங்கு எப்படி வளர்ந்துவந்தது, தடுப்பூசிக்குப் பிந்தைய பத்தியத்தை எவ்வாறு கையாண்டார்கள் என்பதையெல்லாம் ‘ஹிஸ்ட்ரி ஆஃப் இனோக்யூலேஷன் அண்டு வாக்ஸினேஷன்’ நூல் (History of Inoculation and Vaccination) விலாவாரியாக விவரிக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல; சீனா, ஆப்பிரிக்கா என்று மரபார்ந்த பல சமூகங்களிலும் இப்பழக்கம் இருந்திருக்கிறது. இங்கிருந்தே கான்ஸ்டாண்டினோபிள் வழியே இந்த தடுப்புமுறை இங்கிலாந்தை எட்டியதை இந்நூலின் ஆசிரியர்கள் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளனர். ஆக, இந்த மரபின் நீட்சிதான் இன்றைய தடுப்பூசி.

காலம் நெடுகிலும் இப்படித்தான் நம் சமூகம் எல்லாச் சவால்களையும் அறிவியல் கண் கொண்டு சமாளித்துவந்திருக்கிறது. ஆக, தடுப்பூசியை எதிர்ப்பதானது அறிவியலை எதிர்ப்பது மட்டும் அல்ல; நம் மரபார்ந்த அறிவைப் புறக்கணிப்பதும் ஆகும்.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

ஒரு கீரையோ, கசாயமோ, அல்லது நவீன ரசாயன மருந்தோ சில நாட்களில் டைபாய்டு காய்ச்சலைக் குணப்படுத்துவதுபோல, காமாலையைக் குணப்படுத்துவதுபோல கோவிடைக் குணப்படுத்தும் நாளும் நிச்சயம் வரும். அந்தக் காலகட்டத்தில் நாம் தடுப்பூசியின் அவசியத்திலிருந்து விலகலாம். இப்போது தடுப்பூசியைத் தவிர்ப்பது நமக்கு மட்டும் ஆபத்து அல்ல; ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஆபத்து. ஏனென்றால், தடுப்பூசியின் வழியே ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் நாட்கள் தள்ளிப்போகப்போக வைரஸின் மாற்றுருக்கள் கூடிக்கொண்டே போகும். அந்த மாற்றுருக்கள் எல்லாமும் வீரியமும் ஆபத்தும் இன்றைய அளவைக் காட்டிலும் அதிகமானதாகவும் மாறலாம்.

நம் மக்களிடையே இப்போது உள்ள பிரதான கேள்வி, ‘எப்போதுதான் கோவிட்டிலிருந்து நம் சமூகம் முழுமையாக விடுபட முடியும்?’ நாம் பிற கிருமிகளுக்கு ‘திரள்நோய்க்காப்பு’ (ஹெர்ட் இம்யூனிட்டி) பெற்றதுபோல் கரோனாவுக்கும் பெறும்போதுதான் அது சாத்தியம். அந்நிலையை அடைய 80% மக்கள் தொற்றுக்குள்ளாகிக் கடக்க வேண்டும். கரோனாவின் நேரடித் தாக்குதலின் வழி அப்படித் தொற்றுக்குள்ளாகும் சூழல் வந்தால், இப்போதுள்ள நோய்ப்பரவல் கணக்கீட்டின்படி லட்சக்கணக்கானோரை நாம் தமிழகத்திலேயே பறிகொடுக்க நேரிடும். ஆகையால்தான், 80% மக்களுக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் திரள்நோய்க்காப்பை உருவாக்க முற்படுகிறோம். இந்தச் சூழலிலேதான் தடுப்பூசி தவிர்க்க இயலாத ஒன்றாய் இருக்கின்றது.

வெளிப்படை அணுகுமுறை

தடுப்பூசி அறிவியலை, அதன் அவசியத்தை மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய மொழியில் பட்டிதொட்டியெல்லாம் கொண்டுசெல்ல வேண்டியதுதான் இப்போதைய காலக் கட்டாயம். ‘தடுப்பூசி போட்டுக்கொண்டால், தொற்று முழுமையாகத் தடுக்கப்படும்’ என்ற எதிர்பார்ப்பு சற்றே மாறி, ‘தடுப்பூசி கொடுக்கும் அரணைத் தாண்டியும் கரோனாவின் மாற்றுருக்கள் தாக்கக்கூடும்’ என்ற செய்தி கவலை அளித்தாலும்கூட, ‘தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தொற்றுக்குள்ளானாலும், நோய் தீவிர நிலைக்குப் போகாமல் தடுப்பூசி தடுக்கிறது’ எனும் ஆய்வு முடிவுகள் ஆசுவாசப்படுத்தக் கூடியவைதான். இச்செய்தி முழுமையாய் வெகுசனத்திடம் கொண்டுசெல்லப்பட வேண்டும். மக்கள் முன்வைக்கும் கேள்விகள், சந்தேகங்கள் முறையாக எதிர்கொள்ளப்படுவதுடன் வெளிப்படையாகத் தடுப்பூசி தொடர்பான விவரங்களை மக்களிடம் அரசு விளக்க வேண்டும்.

- கு.சிவராமன், மூத்த சித்த மருத்துவர், தமிழக அரசின் கோவிட் கட்டுப்பாட்டு உயர்மட்டக் குழு உறுப்பினர், தொடர்புக்கு: herbsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x