Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

கரோனா சிகிச்சைக்குப் புதிய படை ஒன்றை உருவாக்கிப் பயிற்சி தருக!

வரவிருக்கும் மே மாதத்தில் கரோனா தொற்றின் எண்ணிக்கை மூன்று மடங்குகள் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கும் பின்னணியில், இப்போதைய எண்ணிக்கைக்கே திணறும் நம்முடைய கட்டமைப்பை அதற்கேற்பப் பலப்படுத்துவது முக்கியம். எல்லாப் பிரச்சினைகளுக்கு ஊடாகவும் தமிழக அரசு உடனடியாகப் புதிய படை ஒன்றை உருவாக்க வேண்டும்; முன்னனுபவம் இல்லாதவர்களையும் சிகிச்சைப் பணியில் களம் இறக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஈடுகொடுக்க ஏதுவாக இந்தப் படையைப் பயன்படுத்திட அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

கரோனா இரண்டாவது அலை அதன் உச்சத்தை நோக்கி நகரும்போது, தமிழ்நாடு ஒருசமயத்தில் 3 லட்சம் கரோனா நோயாளிகளைக் கையாளும் சூழல் வரலாம். இவர்களில் 5% பேருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று கணக்கிட்டாலும்கூட 15 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். இதற்குத் தேவையான ஆக்ஸிஜனும் கணிசமான அளவில் அதிகரிக்கும். அரசு, தனியார் மருத்துவமனைகள் இரண்டையும் சேர்த்து சுமார் 8 ஆயிரம் தீவிர சிகிச்சைப் படுக்கைகளையே கொண்டிருக்கும் தமிழகம், இந்த நெருக்கடியை எதிர்கொள்வது சாமானிய காரியமல்ல. புதிய சிகிச்சை மையங்களின் வழி படுக்கைகளை அதிகரிக்கும்போது ஆள் தேவை உருவாகும். கட்டமைப்பைப் பலப்படுத்த முன்னனுபவம் அல்லாத ஒரு படையைக் களம் இறக்கும் சூழல் அப்போது வரலாம். இதை முன்கூட்டித் திட்டமிட்டு அவர்களுக்கான பயிற்சியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். பணியின்றி வெளியில் இருப்பவர்களோடு, தேர்வுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் மருத்துவ, செவிலிய மாணவர்களுக்கும் தடுப்பூசி போட்டு, அவர்களை முறையான பயிற்சிக்குப் பின் இதில் பயன்படுத்தலாம்.

இப்போது பணியில் இருப்பவர்களுக்குமே சில விஷயங்களைக் கையாள்வதில் பயிற்சி தேவைப்படுவதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுக்கான காரணங்களில் ஆக்ஸிஜன் வீணாவதும் ஒன்றாக இருப்பதை இங்கே சுட்டலாம். ஜலந்தர் மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் பயன்பாட்டை ஆய்வுக்குள்ளாக்கிய பிறகு, அதன் சிலிண்டர்கள் தேவை 410 என்ற எண்ணிக்கையிலிருந்து 214 ஆகக் குறைந்திருப்பதை இங்கே குறிப்பிடலாம். ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கையாள்வதில் பல மருத்துவ ஊழியர்கள் மத்தியில் சிக்கல் இருப்பதை அறிய முடிகிறது. சில மணி நேரப் பயிற்சியில் சீரமைக்கப்படக் கூடியது இது. யாருக்கு ஆக்ஸிஜன் தேவை; எப்போது எந்த அளவுக்குத் தேவை என்று மருத்துவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வழிகாட்டலும் அப்படித்தான். இது ஓர் உதாரணம்.

தமிழ்நாடு அளவில் ஒருங்கிணைந்த திட்டமிடலும், அனுபவப் பகிர்தல்களும் அன்றாடம் நடக்க வேண்டும். கட்டமைப்புக்கு இது மேலும் வலுவூட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x