Published : 25 Apr 2021 05:34 am

Updated : 25 Apr 2021 05:34 am

 

Published : 25 Apr 2021 05:34 AM
Last Updated : 25 Apr 2021 05:34 AM

மூக்கையா: கலை மரபின் தொடர்ச்சி

mookaiah

தமிழகத்தில் 1960-களில் ஓவிய, சிற்பக் கலைகளில் ஒரு மலர்ச்சி உருவானது. மெட்ராஸ் கலை இயக்கம் (Madras Art Movement) என்று அறியப்பட்ட இதற்கு சென்னையிலுள்ள நுண்கலைக் கல்லூரிதான் ஊற்றுக்கண். இங்கே பயின்ற ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, பெருமாள் போன்ற கலைஞர்கள் இந்த மாற்றத்துக்குப் பங்களித்தார்கள். நவீன ஓவியத்தை அவர்கள் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர்தான் டி.ஆர்.பி.மூக்கையா (1934-2009). அந்தக் காலகட்டத்தில் அவரது பங்களிப்பு கண்டுகொள்ளப்படவில்லை.

தமிழகத்தில் அந்தக் காலகட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த கலைஞர்களுக்கு இந்தியக் கலை வேர்களில் ஆர்வம் உண்டானது. நம் கலை மரபுகளின் வேர்களைத் தேடும் இத்தகைய விழிப்பானது வங்கத்தில் முப்பதுகளிலேயே நந்தலால் போஸ் போன்ற ஓவியர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டது என்பதை மனதில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் சற்று காலம் தாமதித்தே இந்த உணர்வு தோன்றியது. ராய் சவுத்திரி, கே.சி.எஸ்.பணிக்கர் போன்ற முதல்வர்களின் முன்னெடுப்பில் நுண்கலைக் கல்லூரி இந்த இயக்கத்துக்கு உதவியது.


வாழும் கலை

தென்தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த மூக்கையாவுக்கு அந்தப் பகுதி மக்கள், மலைவாழ் ஆதிவாசிகள் இவர்களின் வாழ்க்கையுடன் இருந்த ஈடுபாடு அவரது கலை வாழ்க்கையில் ஒரு முக்கியப் பரிமாணமாக வெளிப்பட்டது. அவர்களது அழகியலைத் தன் படைப்புகள் மூலம் மீட்டெடுக்க முயன்றார். சென்னை வந்து நுண்கலைக் கல்லூரியில் சேர்ந்து முதலில் ஓவியத் துறையில் பயின்றார். பின்னர் சிற்பக்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். இந்தத் துறையில் இவருக்கு எஸ்.தனபால் வழிகாட்டியாக அமைந்தது நல்ல பயனைப் பின்னர் தந்தது. படித்து முடித்த பின்னர் அந்தக் கல்லூரியிலேயே பணியாற்ற ஆரம்பித்தார்.

மூக்கையாவின் படைப்புகளில் சிறப்பானவை சுடுமண் சிற்பங்கள் (terracotta) என்று நினைக்கிறேன். நம் நாட்டில் இந்தப் பாரம்பரியம் வெகு பழமையானது. நாட்டின் பல பகுதிகளிலும் இந்த வகைச் சிற்பங்கள் செய்யப்பட்டன. சிந்து வெளியில் கிடைத்த நாய் சிற்பமும் இந்த வகையைச் சார்ந்துதான். வங்கத்தின் பங்கூரா குதிரைகள் பிரசித்தமாயிற்றே. நம்மூர் அய்யனார் கோயில்களில் வேண்டுதலுக்காக வைக்கும் மண் சிற்ப உருவாரங்களைச் செய்யும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆகவே, இந்தச் சுடுமண் சிற்பக்கலை தமிழகத்தில் ஒரு வாழும் கலையாகப் பல நூறு ஆண்டுகள் தொடர்ந்திருக்கிறது. மூக்கையாவின் சுடுமண் சிற்பங்கள் உருவில் சிறியவை; ஒன்று அல்லது ஒன்றரை அடி அளவில்தான் உள்ளன.

சிற்பங்களான மாடுகள்

ஓவியர் ஆர்.பி.பாஸ்கரன் பூனைகளால் ஈர்க்கப்பட்டதுபோல, மூக்கையா மாடுகளைச் சித்தரித்துப் பல சுடுமண் சிற்பங்கள் செய்திருக்கிறார். இப்போது முட்டுக்காட்டில் உள்ள தட்சிணசித்திராவில் நடந்துகொண்டிருக்கும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மூக்கையாவின் சிற்பங்களில் பலவும் ஜல்லிக்கட்டைச் சித்தரிக்கின்றன. இந்தச் சிற்பங்களெல்லாம் மாடுபிடி விளையாட்டின் ஒரு வினாடியை உயிர்ப்புடன் உறைய வைத்தாற்போல் உள்ளன. ஜல்லிக்கட்டு மீட்பு இயக்கத்தார் இந்தச் சிற்பங்களைப் பற்றி அறிந்திருந்தால் இதில் ஒன்றைத் தங்கள் சின்னமாகத் தெரிந்தெடுத்திருப்பார்கள். குதிரைகளைச் சிற்பமாக வடித்த மரினோ மரினி (Marino Marini 1901-1980) என்ற இத்தாலியச் சிற்பியின் தாக்கம் மூக்கையாவுக்கு இருந்தது. சில குதிரைச் சிற்பங்களையும் மூக்கையா உருவாக்கியிருக்கிறார்.

தப்பாட்டம், பறை ஆட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைகளில் ஈடுபட்டிருப்பதுபோல கிராமப்புற மக்களை அவர் சுடுமண் சிற்பங்களில் சித்தரித்தார். அதில் ‘வறுமை’ என்று பெயரிடப்பட்ட, இரு குழந்தைகளுடன் நிற்கும் ஒரு பெண்ணின் சிற்பம், மனதை உலுக்கும் படைப்பு. இது எனக்கு பிரெஞ்சு சிற்பி ரோதான் (Rodin 1840-1917) உருவாக்கிய ‘தி பர்கெர்ஸ் ஆஃப் கலே’ (The Burghers of Calais) என்ற சிற்பத்தை நினைவூட்டியது. என்னைத் தொட்ட இன்னொரு சுடுமண் படைப்பு, தண்டி யாத்திரையைச் சித்தரிப்பது. ஒரு சிறிய சிற்பத்தில் அந்த வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்வின் தீர்க்கத்தை, சத்யாகிரகிகளின் ஈடுபாட்டை அருமையாகக் காட்டுகிறார். மூக்கையா படைத்த சில செப்புப் படிமங்களும் இந்தக் காட்சியில் இடம்பெற்றுள்ளன. இவரது ஓவியங்கள் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் நாட்டுப்புற வாழ்வைக் காட்டுகின்றன. காட்சியில் இருக்கும் படைப்புகளில் சிங்கங்களைச் சித்தரிக்கும் ஒன்றும், யானை மந்தையைக் காட்டும் ஒன்றும் அடங்கும்.

அழிந்துபோகும் பாரம்பரியம்

மெட்ராஸ் கலை இயக்கத்தைப் பற்றிக் கூறினேன். இந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள் நவீன ஓவியம், சிற்பம் இவற்றைத் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை. இசையும் நடனமும் பள்ளிக்கூடங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஓவியம் போன்ற கட்புலக் கலைகள் கல்விப் புலத்துக்குள் நுழைய முடியவில்லை. தமிழ்ப் பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் வெகு அரிதாகவே இந்தக் கலைகளுக்கு இடம்கொடுத்தனர். அரூப ஓவியங்களைப் பார்த்து “இது எதைக் காட்டுகிறது” என்று ஏளனமாகச் சிரித்தபடி கேட்பவர்கள் இன்றும் நம்முள் நிறைய இருக்கிறார்கள். இந்தப் பின்புலத்தில்தான் இம்மாதிரியான கண்காட்சிகளை நாம் வரவேற்க வேண்டும். இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, இந்தப் படைப்புகள் தட்சிணசித்ரா நிறுவனத்தாரால் பராமரிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

சந்தைமயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற பேரலைகளால் சிறு இனங்களின் தொன்மையான அழகியல் பாரம்பரியம் அழிந்துபோகும் வாய்ப்பு உண்டு. ஆகவே, மக்கள் சார்ந்த இம்மாதிரிக் கலைகளைப் பிரதிபலிக்கும் படைப்புகளைப் போற்றிப் பாதுகாப்பது அவசியம். மூக்கையாவின் படைப்புகளின் கண்காட்சி ஒன்று தட்சிணசித்ராவில் இப்போது நடக்கிறது. 38 சிற்பங்களும், 28 தைல ஓவியங்களும் அடங்கிய இந்தக் கண்காட்சியானது மே 31 தேதி வரை பார்வைக்கு இருக்கும். கலை ஆர்வலர்கள் அவசியம் செல்ல வேண்டிய கண்காட்சி.

- சு.தியடோர் பாஸ்கரன், ‘கையிலிருக்கும் பூமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com


மூக்கையாகலை மரபின் தொடர்ச்சிடி.ஆர்.பி.மூக்கையா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x