Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

சிதைந்துபோகிறதா மக்களதிகாரம்?

கமல்ஹாசன்

பொருளியல் மேதை ஜே.சி.குமரப்பா சொன்னார்: ‘ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரு திட்டத்தை நிறைவேற்றும் முன்பு, அங்கே இருக்கும் ஏழைகளின் விலா எலும்புகளை எண்ணுவேன். அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு, அதே ஏழைகளின் விலா எலும்புகளில் ஏதேனும் சதைப்பற்று காணப்படுகிறதா எனப் பார்ப்பேன். அப்படிக் காணப்பட்டால் அந்தத் திட்டம் வெற்றி எனக் கருதுவேன்.’ காந்தி சொல்வார்: ‘மக்களின் குரல் என்பது கடவுளின் குரல். பஞ்சாயத்தின் குரல்தான் மக்களின் குரல்.’ மக்களின் குரலை உறுதிசெய்வதே பஞ்சாயத்து ராஜ். இந்த அருமையான நிர்வாக முறை இன்று என்ன நிலையில் இருக்கிறது?

கடந்துவந்த பாதை

அதிகாரப் பகிர்வு இன்றி நிர்வாகம் சாத்தியமில்லை என்பதை உணர்ந்த பிரிட்டிஷார் 1884-ல் ‘மெட்ராஸ் லோக்கல் போர்டு சட்டம்’ நிறைவேற்றினார்கள். இதன் பயனாக நகரங்களில் ஒன்றியங்களை ஏற்படுத்தி, உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஓரளவு சீரடைய இது வழிவகுத்தது. 1920-ல் கொண்டுவரப்பட்ட மதராஸ் கிராமப் பஞ்சாயத்துக்கள் சட்டத்தால்25 வயதுக்கு மேற்பட்டவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள். கிராமத் தன்னாட்சியைத் தொடர்ச்சியாக காந்தி வலியுறுத்தியபோதும் 1992-ல்தான் அதற்கான அரசியல் சாசன அங்கீகாரம் கிடைத்தது.

1994-ல்தான் 73-வது சட்டத் திருத்தத்தின்படி தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான், கிராமசபைகளுக்கு அங்கீகாரம், மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறை, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு, நிலையான பொருளாதார வளர்ச்சி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கட்டாய உள்ளாட்சித் தேர்தல், மாநிலத் தேர்தல் ஆணையம், நிதி ஆணையம், பஞ்சாயத்துகளுக்குரிய அதிகாரம், திட்டமிடும் அதிகாரம் அனைத்தும் கொடுக்கப்பட்டன. பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வரையறுக்கப்பட்டன. நிர்வாக அதிகாரம் மக்களுக்கு அளிக்கப்பட்டது.

கிராமசபைகளின் சக்தி

‘சுதந்திர இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசு அமைப்பாக இயங்க வேண்டும். கிராம சுயராஜ்யமே நாட்டின் அடிப்படை நிர்வாக அமைப்பாக இருக்க வேண்டும்’ என்பது காந்தியின் கனவு. கிராம நிர்வாகத்தில் மக்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். கிராமப் பஞ்சாயத்து மூலமே உள்ளூர்ப் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் அதிகாரம் கிராமசபைக் கூட்டங்களுக்கு உண்டு. ஆண்டுக்கு நான்கு நாட்களும், தேவையான நேரங்களிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

கிராமத்தின் தேவைகள், பிரச்சினைகள், வரவு செலவுக் கணக்குகளை அனைவரும் கூடி விவாதித்து முடிவெடுக்க முடியும். மாநிலச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதன் அதிகாரத்துக்கு உட்பட்டு எடுக்கும் முடிவுகளை யாராலும் மாற்ற இயலாது. கிராமத்தைப் பாதிக்கும் எந்த ஒரு விஷயத்துக்காகவும் மக்கள் ஒன்றுகூடி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். கிராமசபைக் கூட்டத்தில் மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது.

என்னென்ன சீரமைப்பு வேண்டும்?

ஆனால், இன்றைய கிராமசபைக் கூட்டம் ஏலம் விடும் நிகழ்வாக மாறிவிட்டது. எட்டுவழிச் சாலைத் திட்டம் முதல் ஹைட்ரோகார்பன் திட்டம் வரை மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுப் பின் முடிவுசெய்யப்படும் என அறிவித்த அரசு, பெரும்பான்மையான மக்கள் கலந்துகொள்ளாமல் பெயரளவில் நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டங்கள் மூலம் முடிவெடுத்துவிட்டது. அரசியலர்கள் தங்களுக்கு லாபம் கொழிக்கும் என்பதால், அதிகாரிகளை விலைபேசி திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு, நிர்வாக அதிகாரம், நியமன அதிகாரம் அளிக்கப்படுவதை உறுதிசெய்வதில் பக்கத்து மாநிலமான கேரளம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. தமிழகத்திலும் இது நிகழ வேண்டுமெனில், அரசியல் சாசனத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுவது அவசியம். வலுவான கிராமசபைகள், நகர்ப்புறங்களுக்கு ஏரியா சபை, வார்டு கமிட்டி உருவாக்குதல், ஆன்லைன் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு ஊதியம் வழங்குதல், உள்ளாட்சிப் பிரதிநிதியைத் திரும்பப் பெறும் உரிமையைக் கிராமசபைக்கு அளித்தல் போன்ற சீரமைப்புகள் வேண்டும்.

ஊழல்களால் நிரம்பி வழியும் தமிழக அரசு பல்வேறு வகைகளில் பஞ்சாயத்து ராஜ் எனும் மக்களதிகாரத்தைச் சிதைக்கிறது. மாநகராட்சி கமிஷனர் மாநில அரசுகளால் நியமிக்கப்படுகிறார். அதே மாநகராட்சியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவேளை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் என்றால், மன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் ஆகிவிடுகிறது. ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் அழுத்தத்துக்கு ஏற்பவே அதிகாரிகள் செயல்படுவார்கள். இதே நிலைதான் முனிசிபல் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் நிலைமையும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அதிகார வரம்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுவிடுகிறது.

மக்கள் குரல் ஒலிக்கட்டும்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அரசோ உள்ளாட்சித் தேர்தல்களிலிருந்து தப்பிக்க நினைக்கிறது. இது அப்பட்டமான அரசியல் சாசன மீறல். 1996-லிருந்து 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவந்த உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில், முழுமையாகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் ஐந்தாண்டுகளைக் கடத்தியது அதிமுக ஆட்சியில்தான். இது மாபெரும் வரலாற்றுப் பிழை. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் ஏற்படும் நிர்வாகக் கேடுகளைத் தமிழக மக்கள் ஐந்தாண்டுகளாக வேதனையுடன் அனுபவித்துவருகிறார்கள்.

இன்னமும் நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதன் காரணமாக 9 மாவட்டங்களில் கிராம உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமசபைகள் கூடுவதை விதவிதமான காரணங்களைச் சொல்லி ஒத்தி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவற்றை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி எனும் கோஷத்தோடு உள்ளாட்சியில் தன்னாட்சி என்பதும் ஓங்கி ஒலிக்க வேண்டும். பஞ்சாயத்து ராஜ் வலுப்படுவதை ஒரு மக்கள் இயக்கமாக அணிதிரண்டு உறுதிசெய்ய வேண்டும். ‘வன்முறையால் ஒருபோதும் செய்ய முடியாததை, பஞ்சாயத்து ராஜ் நிலைநிறுத்தப்படும்போது மக்களின் குரலே செய்து முடித்துவிடும்’ எனும் காந்தியின் சொற்களோடு நிறைவுசெய்கிறேன். மக்கள் குரல் ஒலிக்கட்டும்!

kamal

- கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்.

ஏப்ரல் 24: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x