Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

முதல்வர் 7: இன்னும் கிடைக்காத மொழியுரிமை

மொழிப்போர் தியாகிகள் தினத்தைத் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே அனுசரிக்கின்றன. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் ஜனவரி 25 அன்று ஒரே நாளில் இரண்டு கட்சிகளுமே பொதுக்கூட்டங்களை நடத்துகின்றன. எஜமானர் - அடிமைகள் என்று எதிர்க்கட்சி விமர்சனம் செய்துகொண்டிருந்த நிலையிலும் இந்த ஆண்டு அதிமுக அக்கூட்டங்களை நடத்தாமல் இல்லை. 1965-ல் மொழித் திணிப்புக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கிய தினம் அது. எண்ணற்ற உயிர்த் தியாகங்களின் விளைவாக, அதிகாரபூர்வமான இந்தித் திணிப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் ஆட்சிமொழி சார்ந்து ஒரு மாநில அரசுக்கான அதிகாரம் இன்னும் நமக்குக் கிடைத்தபாடில்லை.

திமுக, அதிமுக இரண்டுமே தங்களது தேர்தல் அறிக்கைகளில் ஆட்சிமொழி குறித்த வாக்குறுதிகளை அளித்திருக்கின்றன. ஒன்றிய அரசின் ஆட்சிமொழிகளில் தமிழையும் ஒன்றாக்குவது, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழைக் கொண்டுவருவது, ஒன்றிய அளவிலான போட்டித் தேர்வுகள் அனைத்தையும் தமிழில் நடத்த வலியுறுத்துவது, தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக்குவது ஆகிய வாக்குறுதிகள் இரண்டு கட்சிகளின் அறிக்கைகளிலுமே இடம்பெற்றுள்ளன. ஒன்றிய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் என அனைத்தும் தமிழிலும் செயல்படும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் கூறு 343-ல் திருத்தம் கொண்டுவருவதற்குத் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கை இந்தப் பிரச்சினையைச் சற்று விரிவாகவே விளக்கியிருக்கிறது.

ஒன்றிய அலுவலகங்களில் தமிழ்

கூறு 343, ஒன்றிய அரசின் ஆட்சிமொழி தொடர்பானது. பகுதி 17-ல் இடம்பெற்றுள்ள கூறு 343 தொடங்கி 351 வரையிலான அனைத்துக் கூறுகளுமே திருத்தி எழுதப்பட வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை. என்றாலும், 1965-ல் தீவிரமடைந்த மாணவர்களின் போராட்டத்தால் ஆட்சிமொழிச் சட்டத்தில் சில திருத்தங்களை மட்டுமே செய்ய முடிந்தது. அந்தத் திருத்தத்தின் காரணமாகவே ஆங்கிலம் இன்னும் துணை ஆட்சிமொழியாகத் தொடர்கிறது. ஆட்சிமொழிச் சட்டத் திருத்தங்களுக்காக 1967 டிசம்பரில் நாடாளுமன்ற விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது அன்றைய உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் ஆட்சிமொழித் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். ஆட்சிமொழிச் சட்டத்தில் திருத்தம் செய்துவிட்டதாகச் சொல்லிவிட்டு, கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சிதான் அந்தத் தீர்மானம். அதுவும் நிறைவேற்றப்பட்டது.

நான்கு அம்சங்கள் கொண்ட ஆட்சிமொழித் தீர்மானம், கூறு 351-ன்படி இந்தியை வளர்ப்பது ஒன்றிய அரசின் கடமை என்றும் இந்தி வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, நாடாளுமன்ற அவைகளிலும் சட்டமன்றங்களிலும் ஆண்டுதோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியது. எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அதன் இரண்டாவது அம்சத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது வெறும் பெயரளவுக்குத்தான். அனைத்து நிலைகளிலும் ஆட்சி மொழியாக இந்தியை வளர்த்தெடுப்பதே நோக்கம். மாநிலங்களில் மும்மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது அத்தீர்மானத்தின் உள்ளே ஒளிந்து உறங்கிய மூன்றாவது கங்கு. வேலைவாய்ப்பு நோக்கத்துக்காக ஒன்றிய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதித்தாலும் பணிக்காலத்தில் இந்தி மொழி அவசியம் என்பதைக் குறிப்பால் உணர்த்தியது நான்காவது அம்சம்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆட்சிமொழித் தீர்மானம் குறித்து 1968 ஜனவரியில் தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தபோதுதான் அத்தீர்மானத்துக்குத் திருத்தம் கோரும்விதமாக இருமொழிக் கொள்கையை அறிவித்தார் அண்ணா. சட்டமன்றத் தீர்மானம் மாநில அரசின் கருத்தைத் தெரிவிப்பதாக அமைந்தாலும் ஒன்றிய அரசைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்குச் சமீபத்திய புதிய கல்விக் கொள்கை வரையில் உதாரணங்கள் ஏராளம். அண்ணாவைத் தலைவராக ஏற்றுக்கொண்ட இரு கட்சிகளும் இருமொழிக் கொள்கையில் இன்றும் உறுதியாகவே நிற்கின்றன. ஆனால், ஒய்.பி.சவான் அன்று நிறைவேற்றிய தீர்மானம் இன்றும் மாநில எல்லைகளுக்குள் இந்தியைப் பரப்பும் பணியை செவ்வனே செய்துகொண்டுதான் இருக்கிறது.

வருடாந்திர அறிக்கை

கடந்த ஆண்டு மே மாதம் வெளிவந்த ஆட்சிமொழி தொடர்பான வருடாந்திர அறிக்கை ஒன்றிய அரசின் உயர் அதிகாரிகளில் பெரும்பான்மையினர் ஆங்கிலத்திலேயே பணியாற்றிவருவதற்கு அதிருப்தி தெரிவித்தது. இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அது அவர்களின் அரசமைப்புச் சட்டக் கடமை என்றும் வலியுறுத்தியது. இந்தியில் பணியாற்றுவதற்கான பயிற்சிகளை அளித்தாலும்கூட அவர்கள் ஆங்கிலத்தில்தான் பணிபுரிவதாகக் குறைபட்டுக்கொண்டது. மாநில மொழிகளில் போட்டித் தேர்வுகள் எழுதும் வாய்ப்பை வழங்குமாறு தமிழகம் குரல்கொடுத்தாலும் அது வேலைவாய்ப்பை வழங்குமே தவிர மொழியுரிமையைக் கொடுத்துவிடாது என்பதற்கு இந்த அறிக்கை ஓர் உதாரணம்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் தங்களுக்குள் 100%, இந்தி பேசும் மாநிலங்கள் தங்களுக்குள் 90%, இந்தி பேசாத மாநிலங்கள் தங்களுக்குள் 55% தொடர்புகளை இந்தியில் மேற்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய இலக்கு. அப்படியென்றால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத அம்மொழியைப் பேசாத தமிழ்நாட்டில் 55% அலுவலகப் பணிகள் இந்தியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அனைத்து மாநிலங்களுமே இந்தியில் வருகிற கடிதங்களுக்கு இந்தியிலேயே பதிலளிக்கவும் அலுவலகப் பணிகள் யாவும் இந்தியில் மேற்கொள்ளவும் வற்புறுத்தப்படுகிறது. எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்று ஒன்றிய அரசு முயற்சித்துவரும் வேளையில், தமிழகக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறக் கூடுமா எனத் தெரியவில்லை. ஆனால், அதற்காக மாநில அரசுகள் சும்மா இருந்துவிடவும் கூடாது.

உயர் நீதிமன்றத்தில் தமிழ்

உத்தர பிரதேசத்தில் மட்டுமல்ல... ராஜஸ்தானிலும்கூட உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் மாநில மொழிகளில் வாதாடுகிறார்கள். மாநில மொழிகளிலேயே மனுக்களைத் தாக்கல் செய்யவும் தீர்ப்புகளின் மொழிபெயர்ப்புகளைப் பெறவும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அத்தகைய ஒரு முயற்சி 2006-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் எடுக்கப்பட்டது. டிசம்பர் 6 அன்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் பரிந்துரையுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டக் கூறு 348(2)-ன் கீழ் ஒரு மாநில உயர் நீதிமன்றத்தின் கூடுதல் ஆட்சிமொழியாக அந்தந்த மாநிலத்தின் மொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அம்மாநிலத்தின் ஆளுநரால் குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதல் பெற்று அறிக்கை வெளியிடப்பட வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலித்த ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கோரியது. உயர் நீதிமன்ற நீதிபதிகளில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் அந்தக் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. இதே கோரிக்கையை வங்க மாநிலமும் விடுத்தது. அந்தக் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கோரிக்கைகள் மாநில மொழிகளுக்கு முதன்மை நிலையைக் கேட்கவில்லை, ஆங்கிலத்துக்குத் துணையாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு மட்டுமே. அதுவும்கூட மறுக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தில் மட்டுமல்ல, கீழமை நீதிமன்றங்களிலும் தமிழுக்கு உரிய இடமில்லை. கீழமை நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான அரசாணை எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் 1982-ல் வெளியிடப்பட்டது. குறைந்தபட்சம் கீழமை நீதிமன்றங்களிலாவது தமிழைப் பயன்படுத்துவதற்கான அந்த வாய்ப்பும்கூட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் இப்போது தடைப்பட்டு நிற்கிறது. எம்ஜிஆர் அரசு பிறப்பித்த அரசாணையைக் காப்பாற்றிட ஜெயலலிதாவின் பெயர்சொல்லி ஆளும் அரசு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. சட்டமியற்றும் அவை, நிர்வாகம் ஆகியவற்றுடன் நீதித் துறையும் அரசின் அங்கமே. இறையாண்மையுள்ள அரசுக்கான அதிகாரங்களை மாநில அரசுகளிடம் ஒப்புவிக்க மனம்வராத ஒன்றிய அரசு, நீதிமன்றப் பயன்பாட்டுக்கு மாநில மொழியை அனுமதித்துவிடுமா என்ன?

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்கப்பட்டதன் நோக்கமே அந்தந்த நிலப் பகுதியில் வாழும் மக்களின் மொழியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அந்த நோக்கத்துக்கு ஒன்றிய அரசே எல்லா வகைகளிலும் தடையாக இருக்கிறது. மொழிப் பற்று தேச ஒற்றுமையைக் குலைத்துவிடக் கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். மொழியுரிமை மறுக்கப்படுவதும்கூட அதே அளவுக்கு அபாயங்களைக் கொண்டதுதான்.

- செல்வ புவியரசன், puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x