Published : 22 Apr 2021 03:14 am

Updated : 22 Apr 2021 05:26 am

 

Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 05:26 AM

உண்மைகளை மறைப்பதால் கரோனாவைத் தடுக்க முடியுமா?

coronavirus

கரோனா அலையின் வீச்சு அதிகரிக்கும் சூழலில், இந்திய அரசு இயந்திரம் வழக்கம்போல, மக்கள் பார்வையை மறைக்கும் திரையைக் கீழே இறக்கும் சமிக்ஞைகள் வெளிப்படலாகின்றன. பல முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட இந்தியாவில் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், இங்கு வெளியாகும் கரோனா தொற்று எண்ணிக்கைக்கும் உண்மையான பாதிப்புக்கும் இடையில் பெரிய இடைவெளி நிலவுகிறது. இந்தச் சூழலில் கரோனா மரணங்களை மறைக்கும் வேலையிலும் அரசுகள் இறங்கியிருப்பது வெட்கக்கேடான நிலையாகும். இது ஏற்கெனவே உள்ள தீவிரமான நிலையை மேலும் மோசம் ஆக்கிவிடும்.

கரோனா மரணங்கள் எப்படி மறைக்கப்படுகின்றன என்பதற்கான உதாரணமாக குஜராத் அரசின் ஏப்ரல் 16 செய்திக்குறிப்பைச் சொல்லலாம். அரசுக் கணக்கின்படி அன்றைய கரோனா மரணங்களின் எண்ணிக்கை 78. ஆனால், அகமதாபாத், சூரத் உள்ளிட்ட ஏழு நகரங்களில் மட்டும் அன்றைக்கு 689 சடலங்கள் ‘கோவிட்-19’ வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதைக்க அல்லது எரியூட்டப்பட்டிருப்பதை ஊடகங்களின் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் மின் மயானங்களில் தொடர்ந்து சடலங்கள் எரியூட்டப்படுவதன் காணொளிகள் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, மயானங்களை மக்கள் பார்வையிலிருந்து மறைக்கும் பொருட்டு தடுப்புகள் அமைக்கப்பட்ட செய்திகள் வெளியானதையும் இங்கே நினைவுகூரலாம். வைரல் நிமோனியாவால் ஏற்பட்ட இறப்புகள் மட்டுமே கரோனா மரணங்களாகவும், ஏனைய மரணங்கள் வெவ்வேறு காரணங்களாலும் எழுதப்படுகின்றன என்கிறார்கள். கரோனாவால் உயிரிழந்தோரின் சடலம் அதற்குரிய வழிமுறையோடு கொண்டுசெல்லப்படாமல், பலருடைய பங்கேற்புடன் இயல்பான இறுதிச்சடங்குகளோடு கொண்டுசெல்லப்படும்போது தொற்று மேலும் பலருக்குப் பரவுவதற்கு அதுவும் ஒரு வாய்ப்பாக மாறிவிடுவதோடு, நிலைமையின் தீவிரத்தை மக்கள் மத்தியில் சுருக்கியும்விடுகிறது.


கரோனாவை இந்தியா எதிர்கொள்ளத் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாகிறது. ஏற்கெனவே மோசமான சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்த மாநிலங்கள் தங்கள் கட்டமைப்பை வலுப்படுத்திக்கொள்ளவும், ஒரு பேரிடரை எதிர்கொள்ள முன்கூட்டித் தயாராகவும் போதுமான அளவுக்கு அவகாசம் இந்தியாவுக்கு இயல்பாகவே கிடைத்தது. ஏனென்றால், இத்தாலியைப் போன்றோ, அமெரிக்காவைப் போன்றோ கடுமையான நெருக்கடியை கரோனாவின் தொடக்கச் சீற்றத்திலேயே இந்தியா எதிர்கொள்ளவில்லை. தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் இருந்த அன்றைய நிலையிலேயே நம் சுகாதாரக் கட்டமைப்பின் போதாமைகள் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால், ஒன்றிய அரசும் சரி; பல மாநில அரசுகளும் சரி; ஓரளவுக்கு மேல் கரோனாவைத் தீவிரமாகக் கருதித் திட்டமிடவில்லை என்பதையே அதிகரிக்கும் மரணங்கள் வெளிப்படுத்துகின்றன. நிலைமை மேலும் மோசம் அடையும் முன் சுதாரிக்க வேண்டும் என்றால், மக்களை ஒருங்கிணைத்தே கிருமியை எதிர்கொள்ள வேண்டும். உண்மையை மக்களிடம் மறைப்பது கேடு விளைவிக்கும்.


Coronavirusகரோனாகரோனா அலைஇந்திய அரசுCovid 19

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x