Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

தடுப்பூசி சந்தேகங்கள் விலக வேண்டும்

கே.ஆர்.ஆண்டனி

இந்தியாவில் இதுவரை 10 கோடிப் பேருக்கும் மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மாபெரும் திட்டமானது அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பை ஏற்படுத்துகிறது, தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய தீங்குகளையும் உபவிளைவுகளையும் கண்காணிக்கும் பெரும் பொறுப்புதான் அது. தடுப்பூசியால் தனக்கு ஏற்படக் கூடிய எந்தத் தீங்குக்கும் எதிராக, எதிர்பாராத மரணம் உட்பட, பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் தன்னைக் காக்கும் என்று சாதாரண மனிதர் அதனைச் சார்ந்திருக்கிறார். மார்ச் இறுதிவரை தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து 617 மோசமான விளைவுகளும் 180 இறப்புகளும் ஏற்பட்டாலும் அவற்றில் எதுவும் கரோனா தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தப்படவில்லை. அப்படிப்பட்ட மரணங்களைப் பற்றி விசாரிப்பதற்கும் முன்னே, பிணக்கூறாய்வு செய்வதற்கும் முன்னே ‘தடுப்பூசிக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று முந்திக்கொண்டு கூறிவிடுவது வழக்கமாக உள்ளது. சுகாதாரத் துறையின் இணையதளம் வாயிலாக 15-க்கும் குறைவான இறப்புகள் பொதுமக்களுக்குத் தெரியவந்திருக்கின்றன. இறப்பின் நேரம், தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் இறப்புக்கும் இடையிலான நேரம் ஆகியவை குறிப்பிடப்படவில்லை. தடுப்பூசிக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நேரத்தைத் தெரிந்துகொள்வது முக்கியமானது.

ஆஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்டைப் போட்டுக்கொண்ட பிறகு ஏற்பட்ட இறப்புகளில் பலவும் மாரடைப்பு, மூளை சிரைக்குழாய் ரத்த உறைவு, பக்கவாதத்தால் ஏற்பட்டவை என்று ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியிலும் நார்வேயிலும் ஏற்பட்ட மரணங்களுக்கு ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு ரத்த உறைதல் ஏற்பட்டதும் காரணமாக இருந்தது. ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியைத் தடைசெய்த நாடுகளுள் அயர்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து போன்றவையும் அடங்கும்.

“இதுவரை கிடைத்த 71 பிணக்கூறாய்வு அறிக்கைகளுள் 38 இறப்புகளுக்குத் தடுப்பூசியுடன் உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இதுவரையிலான நிகழ்வுகள் எல்லாம் தற்செயல்களே” என்று தடுப்பூசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படும் எதிர்மறை விளைவுகளைக் கண்காணிப்பதற்கான தேசியக் குழுவின் ஆலோசகர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். அப்படியென்றால், பெரும்பாலான மாரடைப்பு மரணங்களும் பக்கவாத நிகழ்வுகளும் தடுப்பூசி போடப்படாமல் இருந்திருந்தாலும் ஏற்பட்டிருக்கக் கூடியவை என்று அர்த்தமாகிறது. முழுமையாக விசாரிக்கப்படும் வரை தற்செயல்களின் மீது வெறுமனே பழியைப் போட்டுவிட முடியாது.

திசுக்களில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றிய பரிசோதனை மட்டுமே அது தடுப்பூசியால் ஏற்பட்ட மரணமா அல்லது வழக்கமான மாரடைப்பு, பக்கவாதத்தால் ஏற்பட்ட மரணமா என்பதை உறுதிப்படுத்தும். அப்படிப்பட்ட முழுமையான ஆய்வு ஏதும் இந்தியாவின் மாவட்ட அளவுகளுக்கும் கீழே இருக்கும் பிரிவுகளில் நிகழும் இறப்புகளுக்குச் செய்யப்பட்டதாக எந்தச் சான்றுகளும் இல்லை.

ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 கோடிப் பேரில் 9 பேரின் மரணம், அது தடுப்பூசி தொடர்பானது இல்லை என்றால் நம்மிடையே கவலையை ஏற்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், அந்த மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் இடையே தொடர்பு இருந்தால், அந்த மரணம் தடுக்கக் கூடியதாக ஆகிறது. அதனால்தான், ஐரோப்பிய மருந்துகளுக்கான முகமையை (இ.எம்.ஏ.) பொறுத்தவரை அந்த மரணங்கள் தீவிரமான பிரச்சினையாக மாறின. இளைஞர்களிடையே தீவிரமாகவும், மரணத்தை ஏற்படுத்தும் விதத்திலும் ரத்த உறைவு ஏற்பட்ட பின் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை 15-க்கும் மேற்பட்ட நாடுகள் தடைசெய்தன. மிகத் தீவிரமான மறுஆய்வுக்குப் பிறகு ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை இ.எம்.ஏ. அனுமதித்தது. “கரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் இந்த மருந்து கொண்டிருக்கும் அனுகூலங்களுடன் அதன் பக்கவிளைவுகளை ஒப்பிட்டுப்பார்த்தால், அனுகூலங்களே பெரிதாகத் தெரிகிறது” என்று அந்த அமைப்பு கூறியிருக்கிறது. அதே நேரத்தில், “மிக அரிதாக அந்தத் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் ஏற்படலாம்” என்பதையும் அந்த அமைப்பு ஒப்புக்கொண்டிருக்கிறது.

உலக அளவில் முக்கியமான மருத்துவர்கள் பலரும் இ.எம்.ஏ.வின் இந்த முடிவை எதிர்த்து, அதன் செயல் இயக்குநர் எமெர் குக்குக்குக் கடிதம் எழுதியிருக்கின்றனர். “இந்த மருந்தின் தீய விளைவுகளெல்லாம் துரதிர்ஷ்டவசமானவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், இந்தத் தடுப்பூசியால் ஏற்படக்கூடிய தீமைகளை அல்லது இறப்பைக் குறித்துப் போதுமான அளவுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்துக் கவலை கொள்கிறோம். குறிப்பாக, பிணக்கூறாய்வு பரிசோதனைகள் நடத்தப்படாத சூழலில். தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த அடிப்படையான பிரச்சினைகள் மீது அந்த மருந்துக்கு அனுமதி கொடுத்தபோது இ.எம்.ஏ. போதுமான அளவுக்குக் கவனம் செலுத்தியதா என்று கேள்வி எழுப்புகிறோம்.”

மரபணுக்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தடுப்பு மருந்துகள் ‘‘ரத்த ஓட்டத்தில் சுற்றில் இருப்பதோடு எண்டோதெலியல் செல்களால் எடுத்துக்கொள்ளப்படும், குறிப்பாக, மெதுவான ரத்த ஓட்டம் நிகழும் இடங்களில், அதாவது சிறிய ரத்த நாளங்களிலும் ரத்தத் தந்துகிகளிலும்… எண்டோதெலியல் பாதிப்பும் அதைத் தொடர்ந்து ரத்தம் உறைதலும் உடல் முழுவதும் பல இடங்களில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அந்த மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

இதனால் “ரத்தத் தட்டுகள் குறைந்துவிடும் என்றும், நோயின் தீவிரத்தை உணர்த்தும் டி-டைமர் மூலக்கூறுகள் ரத்தத்தில் தோன்றும், மூளை, தண்டுவடம், இதயம் உட்பட உடல் முழுவதும் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் புண்கள் உருவாகின்றன. ரத்தக் கசிவும் ஏற்படலாம், ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசிவதால் பக்கவாதம் ஏற்படலாம்” என்றும் அவர்கள் கருதுகின்றனர். மேற்கண்ட எல்லா சாத்தியங்களும், விலங்குகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் பரிசோதனைக் கட்டத்திலேயே தவிர்க்கப்பட்டிருக் கின்றன என்பதற்கான சான்றுகளை அந்த மருத்துவர்கள் கேட்டிருக்கின்றனர்.

ஐரோப்பாவில் இப்படிப்பட்ட நிலைமை நிலவும்போது தடுப்பூசிகளால் ஏற்படக்கூடிய தீங்கு களையும் உபவிளைவுகளையும் கண்காணிக்கும் நமது குழுவானது, நாட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் 180 இறப்புகளுக்கும் மேல் நிகழ்ந்திருக்கும் நிலையில் அலட்சியமாக இருக்கலாகாது. கரோனா தடுப்பூசியால் நிகழ்ந் திருக்கிறது என்று சந்தேகப்படும் எந்த இறப்பிலும் பிணக்கூறாய்வு, திசுக்கூறாய்வு போன்றவை முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு மருத்துவப் பணியாளர்களுக்கும் அறிவியலாளர் சமூகத்துக்கும் அவை தெரியப்படுத்தப்பட வேண்டும். நேர்மையும் வெளிப்படைத்தன்மையுமே மக்களிடையே தடுப்பூசிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.

- கே.ஆர்.ஆண்டனி, குழந்தைகள் மருத்துவர், கொச்சி.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x