Published : 22 Dec 2015 08:44 AM
Last Updated : 22 Dec 2015 08:44 AM

அருணாசலப் பிரதேசத்தில் அரசியல் அத்துமீறல்!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் அரசியல் குழப்பங்கள், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடியவை எனும் விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முக்கிய எதிர்க் கட்சியுடன் கைகோத்து ஆட்சியைக் கவிழ்க்க மேற்கொள்ளும் அநாகரிக அரசியல் மறைந்துவிட்டது என்று மகிழ்ந்திருக்கும் வேளையில், மீண்டும் அப்படியொரு காட்சி அரங்கேறியிருக்கிறது.

60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில், காங்கிரஸ் கட்சி 47 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியில் இருக்கிறது. முதல்வர் நபாம் டுகிக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர் காலிகோ புல் தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். டுகியின் ஆட்சியில் நிதி நிர்வாக மோசடிகளும் ஊழலும் அதிகரித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர்கள், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிவருகிறார்கள்.

இந்நிலையில், பேரவையின் அடுத்த கூட்டத்தை 2016 ஜனவரி 14-ல் கூட்ட நாள் குறிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் ஆட்சியைக் கவிழ்க்க எண்ணிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், 11 பாஜக உறுப்பினர்கள், 2 சுயேச்சை உறுப்பினர்கள் உதவியுடன் அடுத்த நடவடிக்கையில் இறங்கினர். அவர்களுக்கு உதவும் விதத்தில் பேரவைக் கூட்டத்தை 2015 டிசம்பர் 16-ல் நடத்துமாறு மாநில ஆளுநர் ஜே.பி. ராஜ்கோவா உத்தரவிட்டார். அன்றைய தினம் அதிருப்தியாளர்கள் கூடினால், தங்களுடைய ஆட்சி பிழைக்காது என்று அஞ்சிய முதல்வர், பேரவைத் தலைவர் உதவியுடன் சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள இடத்தைப் பூட்டி சீல் வைத்துவிட்டார். அத்துடன் அதிருப்தியாளர்களில் 14 பேரின் உறுப்பினர் பதவியைத் தகுதி நீக்கம் செய்தார் பேரவைத் தலைவர்.

இந்த முடிவை எதிர்த்து அதிருப்தியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நியாயம் பெற முடியும். ஆனால், சட்டப் பேரவை வளாகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதால், அதிருப்தியாளர்கள் 20 பேரும் 2 சுயேச்சைகளும் 11 பாஜகவினரும் குவாஹாட்டியில் உள்ள ஹோட்டலில் கூடி பேரவைத் தலைவர் நபாம் ரெபியா, முதல்வர் நபாம் டுகி ஆகியோர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினர். அந்தக் கூட்டத்தின் பேரவைத் தலைவராக, அதுவரை துணைத் தலைவராகப் பதவி வகித்த தபாங் டலோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிறுத்திவைப்பதாக குவாஹாட்டி உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஆளுநர் தலையிட்டது ஏன் என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

கர்நாடக முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கில் 1994-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘ஒரு முதலமைச்சர், அவையின் பெரும்பாலான உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டாரா, தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறாரா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய இடம் சட்டப் பேரவைதான், ராஜ்பவன் அல்ல’ என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. இந்த விஷயத்தில் ஆளுநர் ராஜ்கோவா நடந்துகொண்ட விதம் முறையற்றது, விரும்பத் தகாதது. கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்போம் என்று வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி, இத்தகைய முறையற்ற அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடைய கட்சியினரும் தங்களுடைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் பங்கேற்பதை மறைமுகமாகக்கூட ஊக்குவிக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x