Published : 20 Apr 2021 03:13 am

Updated : 20 Apr 2021 05:33 am

 

Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 05:33 AM

முதல்வர் 5: விவசாயிகளின் நலன்களுக்கு யார் பொறுப்பு?

mudhalvar

வேதியுரங்களின் விலை உயர்வு விவசாயிகளை மீண்டும் ஒரு முறை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிந்த அடுத்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளிவந்தது. இதுவரை இல்லாத அளவுக்குச் சுமார் 58% வரையில் விலை உயர்ந்திருக்கிறது. தேர்தல் வரைக்கும் விலை உயர்வு அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது என்றரீதியிலும் பேசப்படுகிறது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பைக் கண்டித்தார். முதல்வர் அதுபற்றி கருத்து எதுவும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. வேதியுரங்களின் விலை உயர்வு என்பது என்றென்றும் தொடர்ந்துகொண்டிருக்கக்கூடிய பிரச்சினைதான். அண்ணா முதல்வராக இருந்த காலத்திலும் அதைச் சந்தித்தார். வேதியுரங்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தை அன்றைய ஒன்றிய அரசு நீக்கிவிட்டதால் அவற்றின் விலை ஏறியது. மாநில முதல்வர்களின் மாநாட்டில் மட்டுமின்றி, துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாயைத் தனியாகச் சந்தித்தும் இது குறித்துப் பேசினார் அண்ணா. ‘நான் ஊரூருக்கும் போய் உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று உற்சாகப்படுத்திவிட்டு வருகையில், நீங்கள் ஓசைப்படாமல் உரத்தின் விலையை ஏற்றி என்னுடைய திட்டத்துக்குக் குழிபறிக்கின்றீர்கள்’ என்றும் கடிந்துகொண்டார். மன்னார்குடியில் நடந்த விவசாயிகளின் மாநாட்டில் பேசிய அண்ணா, வேதியுரங்களின் விலை உயர்வு அநீதி, அக்கிரமம் என்று கண்டிக்கவும் செய்தார். ஒரு மாநில முதல்வரால் இயன்றது அவ்வளவுதான். ஆனால், அதையாவது அவர் செய்தாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்.


தற்போது வேதியுரங்களின் விலை உயர்வு குறித்து அறிவிக்கப்பட்டாலும் உடனடியாக அது நடைமுறைக்கு வராது, அதற்குப் பதிலாக வேதியுர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்கள் உயர்த்தப்படும் என்று சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. வங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டே இப்படிச் சொல்லப்படுகிறது என்றும் விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். உரங்கள் விலை உயர்ந்தால் என்ன, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்திக் கணக்கை நேர்செய்துவிடலாம் என்றும் விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலையானது எல்லாப் பயிர்களுக்கும் வழங்கப்படுவதில்லை, விவசாயிகள் தங்களது உற்பத்தி முழுவதையுமே சந்தைக்குக் கொண்டுவருவதில்லை, தங்களது உணவுத் தேவையையும் உற்பத்தியிலிருந்து பூர்த்திசெய்துகொள்கிறார்கள் என்பதை எல்லாம் இத்தகைய விவாதங்கள் கவனத்தில் கொள்வதே இல்லை.

பெயரளவிலான அதிகாரம்

இன்றைய நவீன விவசாய முறையில் தவிர்க்கவியலாததாக இருக்கும் வேதியுரங்கள் மட்டுமல்ல விதைகள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாயத்துக்கு அவசியமான வேறு பல விஷயங்களும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. தொழில் துறைக்குத் தேவையான கச்சாப் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள், கால்நடைத் தீவனங்கள், பருத்தி, சணல் ஆகியவையும் பொதுப் பட்டியலின்படி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. வேளாண் துறை சார்ந்த மற்ற தொழிற்சாலைகள் மாநிலப் பட்டியலில் இருந்தாலும்கூட, ஒன்றிய அரசு அவற்றைத் தனது கட்டுப்பாட்டுக்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். விவசாயம் என்பது உணவு உற்பத்தியோடு மட்டும் முடியவில்லை. தொழிற்சாலைகளுக்குத் தேவையான பெரும்பாலான கச்சாப் பொருட்களும்கூட விவசாயத்திலிருந்தே கிடைக்கின்றன. தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் தொடர்பில், ஒன்றிய அரசு விவசாயத் துறையில் தனது அதிகார எல்லையை விரித்தெடுக்கவும் முடியும்.

மாநிலத்துக்குள்ளான வணிகம், உற்பத்தி, பகிர்ந்தளிப்பு, அங்காடிகள் ஆகியவற்றுக்கும் அதே நிலைதான். விலைக் கட்டுப்பாடும் பொதுப்பட்டியலின் கீழேயே உள்ளது. இந்த அதிகாரத்தைக் கொண்டுதான் ஒன்றிய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை இயற்றியுள்ளது. மாநிலப் பட்டியலில் விவசாயம் இடம்பெற்றிருந்தாலும் அது பெயரளவிலான அதிகாரமாகவே இருக்கிறது. விவசாயத்துடன் தொடர்புடைய பெரும்பாலான விஷயங்கள் நேரடியாகவும் பொதுப்பட்டியலின் வழியாக மறைமுகமாகவும் ஒன்றிய அரசின் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு 2020-ல் இயற்றிய வேளாண்மை தொடர்பான மூன்று சட்டங்களும் இப்படித்தான் மாநிலங்களின் விவசாயம் சார்ந்த உரிமைகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றன.

வேளாண் சட்டங்கள் செல்லுமா?

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அச்சட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்துத் தீர்மானிக்க வேண்டிய நீதிமன்றம், விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமாதான முயற்சிகளிலேயே ஈடுபட்டது. அரசமைப்புச் சட்டத்தின்படி அச்சட்டங்களை ரத்துசெய்வதற்கு இயலாத நிலையில், உச்ச நீதிமன்றம் சட்டரீதியான வாய்ப்புகளுக்கு வெளியே நின்றுதான் பேச வேண்டியிருக்கிறது. இவ்வழக்கின் விசாரணையில் கலந்துகொண்ட அட்டர்னி ஜெனரல், அடிப்படை உரிமைகளைப் பாதிக்காத எந்தவொரு சட்டத்தையும் ரத்துசெய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரமில்லை என்று வாதிட்டார். செல்லும் தன்மை குறித்த விவாதங்களும்கூட, ஒன்றிய அரசுக்கு இவ்விஷயத்தில் சட்டமியற்றும் அதிகாரம் உண்டா இல்லையா என்பதைக் காட்டிலும் மாநிலங்களவையில் இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் பற்றியதாக இருக்கின்றன.

விவசாயம் தொடர்பாக ஒன்றிய அரசு இயற்றும் சட்டங்களில் அதிருப்தி கொண்ட மாநில அரசுகள், நீதிமன்றங்களை நாடினாலும் அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கக்கூடும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறது. ஒன்றிய அரசு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வகைமைகளில் சட்டமியற்றுகையில் எதிர்ப்பைக் காட்ட விரும்பும் ஒரு மாநில அரசுக்கு உடனடியாக உள்ள வாய்ப்பு சட்டமன்றத் தீர்மானம் மட்டுமே. வேளாண் துறை தொடர்பாக திமுக அளித்திருக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அறிவிக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எரிவாயுத் திட்டங்களை அக்கட்சி எவ்வாறு தடுத்து நிறுத்தும் என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், அத்துறையின் மேம்பாடு குறித்து ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் வலுவான ஒருங்கிணைப்பு வேண்டியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அத்தகைய திட்டமிடல்களில் மாநிலங்களின் பங்களிப்பும் பொறுப்பும் என்னவென்பது இன்னும் விடையளிக்கப்படாத கேள்வியாகவே நீடித்துவருகிறது. ஓர் உதாரணம். வேளாண் செலவு மற்றும் விலை ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் சமச்சீரான முறையில் நிர்ணயிக்கும் ஆதரவு விலையானது வெவ்வேறு பிராந்தியங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் கணக்கில் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும்போது மாநிலங்களிடம் அது குறித்துப் பதிலறிக்கைகள் பெறப்படுகின்றன என்றாலும், அவை கணக்கில் கொள்ளப்படுகின்றனவா என்ற கேள்வியும் உண்டு.

கூடுதல் நிதிச்சுமைகள்

பொதுப் பட்டியலின் இடுகை 20-ன்படி ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தும் பொருளாதார மற்றும் சமூக நலத் திட்டமிடல்களுக்கு மாநிலங்கள் ஆதரவளிக்க வேண்டும். விவசாயம் மற்றும் அது தொடர்பான ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பும் கோரப்படுகிறது. மாநில அரசுகளுக்கு இது கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்துகிறது. விவசாயத்துக்குத் தேவையான பாசனக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடமே இருக்கிறது. இந்தியாவில் ஓடும் பெரும்பாலான நதிகள் மாநிலங்களுக்கு இடையில் ஓடுபவை. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ச் சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் வசம். எனவே, பாசன நீருக்காகவும் மாநில அரசுகள் ஒன்றிய அரசின் தயவை நோக்கியே காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆழ்குழாய்க் கிணறுகள் இன்று தவிர்க்க முடியாததாக மாறியிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான செலவையும் மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது ஒரு முக்கிய பேசுபொருளாக அமைந்தது. தனது அதிகாரத்தின் கீழ் உள்ள வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்கிறது. சிறு குறு விவசாயிகளுக்குப் பெரிய அளவில் பயன்பட்டுவரும் இந்த வேளாண் கடன்களுக்காக மாநில அரசுகள் நபார்டு வங்கியைத்தான் நம்பியிருக்கின்றன. அதே நேரத்தில், வணிக வங்கிகளில் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. வங்கி, காப்பீடு ஆகியவை ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு மட்டுமே உட்பட்டவை.

விவசாயம் மட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, நிலம், வனங்கள் ஆகியவையும்கூட மாநிலப் பட்டியலில்தான் இருக்கின்றன. ஆனால், இவை அனைத்துக்கும் ஒன்றிய அரசின் கட்டுப்பாடுகள் உண்டு. மீன்வளம் மாநிலப் பட்டியலில் இருந்தாலும் ஆட்சிப் பரப்பு தொடர்பானது என்பதால், ஆழ்கடல் மீன்பிடிப்பு ஒன்றிய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இப்படி, விவசாயம் மற்றும் அது தொடர்பான எல்லாக் கயிறுகளின் பிடியும் கடைசியில் ஒன்றிய அரசின் கைகளில்தான்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in


Mudhalvarமுதல்வர்விவசாயிகளின் நலன்களுக்கு யார் பொறுப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

dress-revolution

ஆடையில் ஒரு புரட்சி

கருத்துப் பேழை

More From this Author

x