Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு கூடாது

இந்தியா மிகத் தீவிரமான கரோனா தாக்குதலுக்கு ஆளாகிவரும் இந்நாட்களில் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளும் தடுப்பூசி மருந்தும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாக வெளிவரும் குரல்கள் மிகுந்த கவனத்தோடு கேட்கப்பட வேண்டியன என்பதோடு, உடனடியாக இந்தத் தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டியதும் ஆகும்.

நாடு முழுவதும் தினசரி கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது; தமிழகத்தில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்தாயிரத்தைத் தொட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் நிரம்பிவரும் கூட்டம் மருந்துக்கான பெரும் தேவையை உருவாக்கும் என்பது முன்கூட்டி உணரப்பட்டதே ஆகும். இதற்கேற்ப மருந்துகளை முன்கூட்டிக் கையிருப்பில் வைப்பது முக்கியம். வளர்ந்த மாநிலமான தமிழகத்திலேயே ‘ரெம்டெஸிவீர்’ போன்ற முக்கியமான மருந்து கிடைப்பதில் ஆங்காங்கே பற்றாக்குறை நிலவுகிறது என்றால், நாட்டின் ஏழை மாநிலங்களின் நிலையை எண்ணுகையில் பெரும் கவலை மேலிடுகிறது. நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுவதை வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

தடுப்பூசி போடும் பணியையும் இதேபோல தடுப்பு மருந்துக்கான பற்றாக்குறை சுணக்கத்தில் தள்ளியிருக்கிறது. ஜனவரியில் தொடங்கிய தடுப்பூசி போடும் பணி இதுவரை பத்துக் கோடிக்கும் மேற்பட்டோரைச் சென்றடைந்திருந்தாலும், உரிய கால வரையறைக்குள் மக்களில் பெரும் பகுதியினரைத் தடுப்பூசிப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரும் பணியில் இந்தியா பின்தங்கியே இருக்கிறது. தம் மக்களுக்குத் தடுப்பூசி போட்டிருக்கும் நாடுகளில் இஸ்ரேல் (100%) முதலிடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாமிடத்திலும் (94.91%), அமெரிக்கா எட்டாவது இடத்திலும் (59.3%), சீனா 36-ம் இடத்திலும் (12.75%) இருப்பதோடு ஒப்பிட்டால், இந்தியா 43-வது இடத்தில் (8.49%) இருப்பதன் பொருள் என்னவென்று விளங்கும். அதிகபட்சம் ஓராண்டுக்குள் நாட்டின் குடிமக்கள் அனைவரையும் தடுப்பூசி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்றே எல்லா முன்னணி நாடுகளும் உழைக்கின்றன. தினசரி மூன்று லட்சத்துக்கும் குறைவான டோஸ்கள் என்று இன்றைக்கு நாம் செல்லும் வேகத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டால், ஏனைய 120 கோடி பேருக்குத் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் 4 ஆயிரம் நாட்கள், அதாவது 11 ஆண்டுகள் ஆகும். ஆக, இந்தப் பணி பல மடங்கு வேகம் எடுக்க வேண்டும். ஆனால், இப்போதைய வேகத்துக்கே ஈடு கொடுக்க இயலாத அளவுக்குத் தட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்வது நம்முடைய இலக்கில் பெரும் பின்னடைவைத் தந்துவிடும். தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால், புதிதாகத் தடுப்பூசிக்குச் செல்வோர், முதல் தவணை முடித்து இரண்டாம் தவணைக்கு என்று மருத்துவனைக்குச் செல்லும் இரு தரப்பினருமே ‘தடுப்பூசி கையிருப்பில் இல்லை’ என்று சொல்லி திருப்பி அனுப்பப்படுவதை அறிய முடிகிறது. தமிழ்நாட்டுக்கு 15 லட்சம் ‘கோவிஷீல்டு’ அலகுகள், 5 லட்சம் ‘கோவேக்ஸின்’ அலகுகள் கேட்கப்பட்டிருந்த நிலையில் ஒன்றிய அரசு 1 லட்சம் ‘கோவேக்ஸின்’ அலகுகளை மட்டுமே சனிக்கிழமை தந்திருக்கிறது. இதேபோல, மருந்துகள் உற்பத்தித் துறையில் கச்சாப் பொருள் இறக்குமதிக்கான சிரமம் பேசப்படுகிறது.

ஆக, தெளிவான திட்டமிடலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி சீராக விநியோகிப்பதில் ஒருங்கிணைந்த செயலாற்றலும் தேவைப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடனும் ஆலோசனை கலந்து அரசு முன்னகர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x