Published : 16 Apr 2021 05:36 AM
Last Updated : 16 Apr 2021 05:36 AM

பள்ளி இறுதியாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்கட்டும்

மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்துசெய்திருப்பதும், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை ஒத்திவைத்திருப்பதும் வரவேற்புக்குரிய முடிவுகள். கரோனா தொற்று நாடு முழுக்க வெவ்வேறு நிலையிலான பாதிப்புகளை உண்டாக்கியிருக்கும் சூழலில், மாணவர்கள் மிகுந்த மனநெருக்கடியுடன் இருந்ததோடு, கரோனாவின் அடுத்த அலை ஏற்படுத்திய இக்கட்டும் சேர்ந்துகொண்ட சூழலில், இந்த முடிவுகள் மாணவர்களுக்குச் சற்றே ஆசுவாசம் அளிக்கக்கூடியவை. இப்போது பொதுத் தேர்வுகள் தொடர்பில் மாநிலங்கள் உடனடியாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய பொறுப்புக்கு ஆளாகியிருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநிலத்தின் சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துவருகிறது. இந்த அணுகுமுறையே சரி. தமிழ்நாடு முன்னதாகவே பத்து, பதினோறாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்துசெய்தது நல்ல முடிவு. பள்ளி இறுதியாண்டுத் தேர்வை இப்படி ரத்துசெய்திட இயலாது. உயர் கல்வி நோக்கி நகரும் மாணவர்களுக்கு இந்தப் பொதுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டாலும், அடுத்த நிலையில் அவர்கள் விரும்பும் மேற்படிப்புகளுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேறு வடிவிலான தேர்வு ஒன்றை எழுதிடுவது அவசியம் என்பதால், பொதுத் தேர்வு தவிர்க்க முடியாதது ஆகிறது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கையோடு பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்திட தமிழக அரசு ஏற்கெனவே முடிவெடுத்திருந்தது.

அந்தக் கால அட்டவணையை எந்தக் குழப்பமும் இன்றித் தொடர்வதே சரியான வழிமுறையாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஜூலை மாதத்துக்குள் தேர்வு முடிவுகள் வந்தடையும் வகையில் திட்டமிட்டால்தான் அடுத்த கல்வியாண்டையேனும் பெரிய குறுக்கீடுகள் இன்றித் தமிழக மாணவர்கள் கடக்க முடியும். மேலும், தேர்வுகளைத் தள்ளிப்போடுதல் மாணவர்களுக்குப் பெரும் அலைக்கழிப்பு. பொதுத் தேர்வுக்கு என்று தொடர்ந்து அவர்கள் எப்போதும் படித்துகொண்டே இருக்க வேண்டிய தீவிர நிலையில் இருப்பது மனச்சுமை ஆகிவிடும். துணிச்சலும் நெகிழ்வானதுமான அணுகுமுறையே இப்போதைய தேவை. நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்வுகளை நடத்தலாம். அதையும் தாண்டி தொற்றுக்குள்ளாகும் மாணவர்களுக்கு மூன்றுக்கும் குறையாத மறுதேர்வு வாய்ப்புகளை வழங்கலாம்.

குறைந்தது இன்னும் ஓரிரு கல்வியாண்டுகளையேனும் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் நாம் கடக்க வேண்டும். கல்விக்கூடங்களை மூடியே வைத்திருப்பதும், தேர்வுகளைத் தொடர்ந்து ரத்துசெய்வதும், இணையவழி முறையே மாற்று என நம்பிடுவதும் சரியான தீர்வல்ல. கல்விக்கூடங்கள் மறுபடி இயங்க வேண்டும். இப்போதைய தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர போதிய கால இடைவெளி அரசுக்கு இருக்கிறது. நெரிசலைத் தவிர்க்க காலை, மாலை தனித்தனி வகுப்புகள் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் என்பன போன்ற நடைமுறைகள் வழி மாணவர்களை இரு பிரிவுகளாகப் பிரித்தும்கூடப் போதிய முன்னெச்சரிக்கைகளோடு வரும் கல்வியாண்டில் கற்றல் செயல்பாடு தொடர நாம் திட்டமிட வேண்டும். அதற்கான முன்பயிற்சியாகப் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு அமையட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x