Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM

அணுசக்தி ஒப்பந்தத்துக்குப் புத்துயிர் ஊட்டப்பட வேண்டும்!

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா நீங்கலாக உறுப்பினர்களாக இருக்கும் சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் வியன்னாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அந்த ஒப்பந்தத்துக்குப் புத்துயிர் கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்திலிருந்து மே 2018-ல் அமெரிக்கா விலகிக்கொள்ளும்படி அப்போதைய அதிபர் ட்ரம்ப் ஒருதரப்பாக முடிவெடுத்ததற்குப் பிறகு, தற்போது நடந்திருக்கும் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்த ஒப்பந்தத்துக்குப் புத்துயிர் அளிக்கும் திசையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐரோப்பிய ஈரானியத் தூதர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அமெரிக்கக் குழு ஒன்று வியன்னாவில் இருந்தாலும் பேச்சுவார்த்தைகளில் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை. ஒப்பந்தத்தை மறுபடியும் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதே நல்லது என்று எல்லாத் தரப்புகளும் ஒப்புக்கொண்டாலும் யார் முதல் அடி எடுத்துவைப்பது என்பதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஈரான் தனது யுரேனியச் செறிவூட்டலை நிறுத்திக்கொண்டு, 2015-ம் ஆண்டு ஒப்பந்தப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்துகிறது. ட்ரம்ப்பால் ஈரான் மீது விதிக்கப்பட்டவையும் பைடன் காலத்திலும் தொடர்பவையுமான எல்லாப் பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்துகிறது. இப்படி யார் முதலில் என்ற போட்டியில் இரு நாடுகளுமே ஈடுபட்டால் மறுபடியும் இழுபறி நிலைதான் ஏற்படும்.

ஈரான் விவகாரத்தில் பைடனின் நிர்வாகம் நெகிழ்வுத்தன்மையோடு நடந்துகொள்வது நல்ல விஷயம். அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கு ஈரான் மறுபடியும் தன்னை உட்படுத்திக்கொண்டால், அதன் மீதான தடைகள் நீக்கப்படும் என்று பைடன் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஈரான் தனது 20% யுரேனியம் செறிவூட்டலை நிறுத்திக்கொண்டால், தென்கொரியாவில் அமெரிக்கா முடக்கிவைத்திருக்கும் 100 கோடி டாலர் மதிப்புள்ள, ஈரானுக்குச் சொந்தமான தொகையை விடுவிப்போம் என்றும் அமெரிக்கா வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆனால், ஈரான் மேலும் திடமான வாக்குறுதிகளை அமெரிக்காவிடமிருந்து எதிர்பார்க்கிறது.

போதிய காலம் இல்லை என்பதுதான் இரண்டு நாடுகளும் எதிர்கொண்டிருக்கும் சவால். ஏனெனில், ஜூன் மாதம் ஈரானில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இது தவிர சில அபாயங்களும் உள்ளன. ஈரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதக் குழுக்கள், இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கிறது. மேலும், சிரியாவிலும் கடல் பரப்புகளிலும் இஸ்ரேலுக்கும் – ஈரானுக்கும் இடையில் உரசல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில்கூட செங்கடல் பகுதியில் ஒரு ஈரானியக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. இவையெல்லாம் அமைதியை நோக்கிய பயணத்தைத் திசைதிருப்பிவிடக் கூடியவை. ஆகவே, அமெரிக்காவும் ஈரானும் மிகுந்த கட்டுப்பாடுடன் இருந்துகொண்டு, பேச்சுவார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து, அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு மீட்சி அளிக்க வேண்டும். அணு ஆயுத ஆபத்தைத் தடுக்க அது ஒன்றே வழி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x