Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM

சிறப்புக் குழந்தைகளின் துயரம்

மும்பை கொலாபா பகுதியில் நடந்த சம்பவம் இது. தன் வீட்டு வாசலில் அமர்ந்து, அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் தருண். அவனுக்கு வயது 16. அப்போது அந்த வழியாக மேளதாளங்கள் முழங்கியபடி சென்ற ஒரு ஊர்வலத்தைப் பார்த்ததும் உற்சாகமான தருண், தன்னையறியாமல் ஆடியபடியே அந்த ஊர்வலத்தில் ஐக்கியமானான். ஊர்வலம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் முடிந்ததும் அதில் இருந்தவர்கள் கலைந்துபோனார்கள். வீட்டுக்குத் திரும்பி வர வழி தெரியாத தருண் குடும்பத்தினருடனான தொடர்பை முற்றிலும் இழந்தான். இச்சம்பவம் நடந்தது 2019, அக்டோபர் 1-ல். ஒன்றரை வருடம் கடந்த நிலையில் இன்று வரை அவனைத் தேடி அலைந்தபடி இருக்கிறது அந்தக் குடும்பம்.

அதெப்படி 16 வயதுச் சிறுவனுக்குத் தனது முகவரியைச் சொல்லி, உதவி கேட்டு வீடு வந்து சேர முடியாமல் போகும் என்ற கேள்வி எழுகிறதா? அச்சிறுவன் ஆட்டிஸக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவன். சரிவரப் பேசவோ தன் நிலையைப் பிறருக்கு உணர்த்தவோ முடியாதவன். தருணின் தந்தை கொஞ்சம் பொருளாதாரச் செல்வாக்கு மிக்கவர் என்பதால், காவல் துறை, ரயில்வே பாதுகாப்புப் படை, தனியார் துப்பறியும் நிபுணர்கள் எனப் பல்வேறு தரப்புகளின் வழியையும் தேடி அலைந்தார். இப்போதோ ஜோசியக்காரர்கள் சொல்லும் இடத்திலெல்லாம் சென்று தேடிப் பார்க்க ஆரம்பித்துள்ளார்.

ஜோசியக்காரர் ஒருவர் ‘‘உன் மகன் உன் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் உள்ளான். சுமாராக மும்பையிலிருந்து 150 முதல் 200 கிமீ தூரத்தில் பத்திரமாக உள்ளான்” என்று சொல்லியிருக்கிறார். எனவே, வரைபடத்தைப் பரப்பி, மும்பையிலிருந்து ஒவ்வொரு திசையிலும் 150 கிமீ தாண்டியுள்ள இடங்களாகத் தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் காரில் தன் நண்பர்களோடு சென்று தேடுதல் வேட்டையை நடத்திவிட்டுத் தோல்வியுடன் திரும்பி வருகிறார்.

காவலரின் போதாமை

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் திசையைத் தொலைத்து நின்ற தருண், முதலில் கண்ணில் பட்ட ரயிலில் ஏறி பன்வேல் எனும் மும்பையின் புறநகர் ரயில் நிலையத்தில் இறங்கினான். இரண்டு நாட்கள் வரை அந்த ரயில் நிலையத்துக்குள்ளேயே சுற்றி வந்துள்ளான். அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் உணவுக்கும் தண்ணீருக்குமாகப் பல முறை கையேந்தியுள்ளான் தருண். பார்வைக் குறைபாட்டுக்காக அணிந்த பெரிய கண்ணாடி, திக்கித் திணறிப் பேசும் விதம், போக்கிடம் தெரியாது அங்கேயே சுற்றிவருவது இவை அனைத்தையும் வைத்துப் பார்த்தாலே அச்சிறுவனின் குறைபாடு வெளிப்படையாகத் தெரிந்திருக்கும் அல்லவா? ஆனாலும், பாதுகாப்புப் படையினர் அவனை இரண்டு நாட்கள் கண்டுகொள்ளக்கூட இல்லை. மூன்றாவது நாளும் தருண் அழுதபடியே உணவு கேட்டுக் கையேந்த, தொல்லையாகிப்போச்சே என்று கோபம் கொண்டு, ஒரு இளம் ரயில்வே கான்ஸ்டபிள் தருணை இழுத்துக்கொண்டுபோய், கோவா பக்கம் செல்லும் ஒரு ரயிலில், சரக்குகள் ஏற்றும் பகுதியில் உட்கார வைத்திருக்கிறார். இதுதான் கடைசியாகக் கிடைத்துள்ள சிசிடிவி கேமரா பதிவின்படியான தகவல். அந்தக் காவலர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இங்கே தவறு அந்த ஒரு காவலரின் மீது மட்டும்தானா? இல்லை, விழிப்புணர்வும் புரிதலும் இல்லாத நம் ஒட்டுமொத்த சமூகமும்தான் இத்தகைய அவலத்துக்குக் காரணம்.

சென்னையைச் சேர்ந்த விக்கிக்கும் வயது 16-தான். சைக்கிள் ஓட்டத் தெரிந்தவன், கையில் தொடுதிரை செல்பேசியும் உண்டு. ஓரளவுக்குப் பேசக் கூடியவன். ஆனாலும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்தான். ஒரு நாள் வீட்டில் ஏதோ கோபத்தில் தனக்குப் பரிச்சயம் இல்லாத இடங்களிலெல்லாம் சைக்கிளில் திரிய ஆரம்பித்தான். அடிக்கடி இப்படி அவன் வெளியே போய்விட்டு வந்துவிடுவான் என்பதால், வீட்டினரும் காத்திருக்கின்றனர். ஆனால், நேரம் அதிகமாக அதிகமாக குடும்பத்தினர் பையன் தொலைந்ததை உணர்ந்தனர். அவனது செல்பேசிக்கு அழைக்க, தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்ற பதிலே கிடைக்கிறது. பரபரப்பாகச் சுற்றுவட்டாரப் பகுதிகளைத் தேடவும், சமூக வலைதளங்களில் விக்கியின் புகைப்படத்தோடு செய்தியைப் பரப்பவும் ஆரம்பித்தனர்.

விக்கியின் வீட்டிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஐஸ்கிரீம் பார்லர் அவன் கண்ணில் படுகிறது. கேட்பதை வாங்கித் தரும் பெற்றோர் துணையுடனே சென்று பழகியவன். வழக்கம்போல வேண்டியதை ஆர்டர் செய்து வாங்கி உண்கிறான். பில் கைக்கு வந்ததும்தான் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. கடை உரிமையாளர் அவனிடம் பில்லுக்குப் பணம் தரத் தெரியாதவனுக்கு செல்பேசி ஒரு கேடா என்றபடி அவனது செல்பேசியைப் பிடுங்கி வைத்துக்கொண்டு, அவனை அடித்து விரட்டிவிட்டார். அந்த செல்பேசியை அணைத்துக் கல்லாப் பெட்டியில் வேறு போட்டுவிட்டார்.

சென்னை காவல் துறையின் சுறுசுறுப்பு

பையன் தெருத்தெருவாக வெயிலில் நடக்கிறான். யாரிடமும் உதவி கேட்கத் தெரியாது. பெற்றோரைத் தொடர்புகொள்ள கையில் செல்பேசியும் இல்லை. இரவு 10 மணிவாக்கில், சென்னை நந்தனம் பகுதியில் இருந்த ஒரு பெட்ரோல் பங்கின் அருகில் பேந்தப் பேந்த நின்றிருந்த அவனைக் காவலர் ஒருவர் கண்டுபிடித்துவிட்டார். ஏற்கெனவே சென்னை காவல் துறையினர் அனைவருக்கும் பையனின் படம் வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்டிருந்ததால் அவனை அந்தக் காவலர் அடையாளம் கண்டுகொண்டு அவனது குடும்பத்திடம் ஒப்படைத்தார்.

அப்பெற்றோரின் நல்லூழ், நம் காவலர்களின் விழிப்புணர்வு எல்லாம் சேர்ந்து, சுமார் 18 மணி நேர அலைக்கழிப்புக்குப் பின்னர் விக்கி கிடைத்துவிட்டான். ஐஸ்கிரீம் கடைக்காரருக்கு மட்டும் விழிப்புணர்வு இருந்திருந்தால் மதியமே எளிதாக அவன் வீடு சென்றிருக்க முடியும். விக்கியின் பெற்றோரை செல்பேசியில் அழைத்துப் பேசியிருந்தால் ஓடி வந்து உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, நன்றியும் சொல்லிவிட்டுப் பையனைக் கூட்டிப் போயிருப்பார்கள்.

இதைப் போன்றே காணாமல் போய், இன்றும் வீடு திரும்பாதவர்களின் பட்டியலும் சாலை விபத்துகளில் மரணமடைந்து சடலமாக மீட்கப்பட்டவர்களின் பட்டியலும் நீண்டது.

பெற்றோர்கள் ஒரு புறம் ஜிபிஎஸ் பொருத்திய சாதனங்களை எப்போதும் அணிவிப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் உள்ளோரும் இது போன்ற செய்திகளை, புகைப்படங்களைத் தெளிவாகத் தேதியுடன் வெளியிட்டுப் பரப்ப வழிவகை செய்கின்றனர். ஆனால், இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்க அரசின் முன்னெடுப்புகளும் பொதுமக்களின் விழிப்புணர்வும்தான் இன்றைய அவசரத் தேவை. சமூக நலத் துறை இதற்கான ஒரு தொடர்பு எண்ணை, அமைப்பை உருவாக்குதல் அவசியம் என்பதைத்தான், காணாமல் போகும் சிறப்புக் குழந்தைகளின் துயர் நம்மிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்,

சிறப்புக் கல்வியாசிரியர்,

‘எழுதாப் பயணம்’ நூலின் ஆசிரியர்.

தொடர்புக்கு: lakshmi.balakrishnan.2008@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x