Published : 09 Apr 2021 03:12 am

Updated : 09 Apr 2021 06:21 am

 

Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 06:21 AM

மியான்மரில் ராணுவம், எல்லையில் அகதிகள், இக்கட்டில் இந்தியா

myanmar-army

மியான்மர், பிப்ரவரி 1 அதிகாலை. தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி (என்.எல்.டி) பதவியேற்கச் சில மணி நேரங்களே இருந்தன. அப்போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது. என்.எல்.டியின் தலைவர் ஆங் சான் சூச்சியும் கட்சியின் முன்னணியினரும் சிறை வைக்கப்பட்டார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் தெருவில் இறங்கிப் போராடிவருகிறார்கள். ராணுவத்தின் கரங்கள் சொந்த நாட்டு மக்களின் குருதியில் நனைந்திருக்கின்றன. பல ஆண்டுகளாகவே மியான்மர் ராணுவத்தோடு இந்தியா அனுசரணையாக இருந்துவருகிறது. பிப்ரவரி மாதம்கூடத் தனது கவலையைப் பதிவுசெய்ததோடு நிறுத்திக்கொண்டது. ஆனால், மனிதநேய ஆர்வலர்கள் இந்தியாவிடம் இன்னும் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் போராட்டம்


ராணுவத்துக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் நீர்த்துப்போகுமென்று தளபதிகள் கருதினார்கள். அதற்குப் பல காரணங்கள். 1962-ல் ராணுவம் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சிக்கு எதிரான பெரிய போராட்டம் 1988-ல் தான் நடந்தது. அப்போது உயர்ந்துவந்த நட்சத்திரம்தான் சூச்சி. போராட்டம் ஒடுக்கப்பட்டது. சூச்சி சிறை வைக்கப்பட்டார். அடுத்து 2007-ல் புத்த பிக்குகள் ராணுவத்துக்கு எதிராகத் திரண்டனர். அந்த எழுச்சியும் ஒடுக்கப்பட்டது. 2011-ல் ஜனநாயகக் கீற்றுகள் தோன்றலாயின. 2012-ல் என்.எல்.டி எதிர்க்கட்சி ஆகியது; 2015-ல் ஆளுங்கட்சியாக உயர்ந்தது. எனினும் ராணுவம் ஆட்சியிலும் பங்கு வகித்தது. சூச்சி ராணுவத்துக்கு வெகு இணக்கமாக நடந்துகொண்டார். இதனால், உலக நாடுகளின் நன்மதிப்பை இழந்தார். ஆனால், பெரும்பான்மை பாமா இனத்தவர் அவரைக் கொண்டாடவே செய்தனர். 2020-ல் நடந்த தேர்தலில் என்.எல்.டி இரண்டாவது முறையாக அமோக வெற்றிபெற்றது.

சூச்சிக்கு வெகுமக்கள் அளித்துவரும் ஆதரவு ராணுவத்தை அச்சுறுத்தியது. சூச்சி சர்வதேச ஆதரவை இழந்துவிட்டார் என்று ராணுவம் கணக்கிட்டது. மேலும், ராணுவ நுகத்தடிக்கு மியான்மர் மக்கள் பழக்கமானவர்கள்தானே என்றும் அது கருதியது. ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்தது. ஆனால், அதன் கணக்கு பிசகிவிட்டது. கடந்த பத்தாண்டுகளாக வீசும் அரசியல் - பொருளாதாரச் சுதந்திரக் காற்றை, அது எவ்வளவு குறைவாக இருந்தாலும், இழப்பதற்கு மக்கள் சித்தமாக இல்லை. அவர்கள் போராடிவருகிறார்கள். இதுவரை 550-க்கும் மேற்பட்ட குடிமக்கள் தெருக்களில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேற்குலக நாடுகள், சூச்சியின் மீது விமர்சனங்கள் இருந்தபோதும், ஒரு ஜனநாயகப் படுகொலையை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. அவை மியான்மரின் மீது பொருளாதரத் தடைகளை விதிக்கின்றன.

அண்டை நாடுகளின் ஆதரவு

இந்தத் தடைகளை மியான்மர் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அதற்கு அண்டை நாடுகளின் ஆதரவு இருக்கிறது. மார்ச் 27 அன்று தளபதிகள் வருடாந்திர ராணுவ தின அணிவகுப்பை நடத்தினார்கள். இதில் இந்தியப் பிரதிநிதி கலந்து கொண்டார். வேறு சில நாடுகளும் பங்கேற்றன. அவை: பாகிஸ்தான், வியட்நாம், ரஷ்யா, சீனா, வங்கதேசம், லாவோஸ், தாய்லாந்து. இவற்றுள் கடைசி நான்கு நாடுகளும் இந்தியாவும், மியான்மரின் எல்லையைப் பகிர்ந்துகொள்பவை. அணிவகுப்பு நடந்த அதே நாளில் மியான்மரின் பல்வேறு இடங்களில் ஏழு குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் கொல்லப்பட்டனர். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டதைப் பல நாடுகள் விமர்சித்தன. இந்தியா, உள்நாட்டிலும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிவந்தது.

எல்லையில் அகதிகள்

மியான்மரில் மூன்றில் ஒருவர் சிறுபான்மையினர். ஷான், கரீன், ரக்கைன், சின், கச்சின், ரோஹிங்கியா முதலான இனத்தவர்கள். இவர்கள் மிகுதியும் மியான்மரின் எல்லைப்புற மாநிலங்களில் வசிக்கிறார்கள். இவர்களில் ரோஹிங்கியா இனத்தவர் 13 லட்சம் பேர் வங்கதேசத்தில் அகதிகளாக வாழ்கிறார்கள். இப்போதைய ராணுவ ஆட்சிக்குப் பிறகு மியான்மரின் எல்லைப்புற மாநிலங்களின் சிறுபான்மையினர் தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் அடைக்கலம் தேடி அகதிகளாக வருகின்றனர்.

இந்திய-மியான்மர் எல்லையோரம் அமைந்திருப்பவை மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்கள். மியான்மரிலிருந்து வரும் அகதிகளை நல்ல வார்த்தை சொல்லித் திருப்பி அனுப்பி வைத்துவிடுமாறு ஒன்றிய அரசு இந்த அண்டை மாநிலங்களைக் கேட்டுக்கொண்டது. இதை ஏற்பதில் மிசோரம் அரசுக்குத் தயக்கம் இருந்தது. மியான்மரிலிருந்து அகதிகளாக வரும் சின் இனத்தவர்களும் மிசோரம் மக்களும் திபெத்-பர்மீய வம்சாவளியினர். 1938-ல் பர்மா தனி நாடாகும் வரை ஒரே பிரிட்டிஷ்-இந்தியக் குடையின் கீழ் வசித்தவர்கள். இப்போதும் மண உறவுகளாலும் வணிக உறவுகளாலும் பிணைக்கப்பட்டவர்கள். ஆகவே, அவர்களுக்குப் புகலிடம் வழங்க அனுமதிக்க வேண்டும் என்று மிசோரம் வலியுறுத்தியது. இதுவரை மிசோரமுக்கு 1,000 அகதிகள் வந்திருப்பார்கள். மணிப்பூர் அரசு மார்ச் 26 அன்று அகதிகளை அனுமதிக்க மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மார்ச் 29 அன்று அதைப் பின்வாங்கிக்கொண்டது.

இந்தியாவின் கவலைகள்

1988-ல் மாணவர் போராட்டம் நடந்தபோது இந்தியா ஜனநாயக சக்திகளுக்குத்தான் ஆதரவாக இருந்தது. எனில், 1991-ல் நரசிம்ம ராவ் அரசு மியான்மரின் ராணுவத் தலைமையோடு நட்பு பாராட்டியது. இரண்டு காரணங்கள். அப்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கிய பயங்கரவாதக் குழுக்கள் மியான்மரில் மறைந்துகொள்வதைத் தடுக்க அந்நாட்டு ராணுவ அரசின் ஒத்துழைப்பு அவசியமாக இருந்தது. அடுத்து, மியான்மரில் சீனா பெற்றுவந்த அபரிமிதமான செல்வாக்கை மட்டுப்படுத்துவது. மியான்மரில் சீனச் செல்வாக்கு இப்போது அதிகமாகியிருக்கிறது. ஆனால், நமது வடகிழக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை. ஆகவே, அகதிகளுக்குப் புகலிடம் வழங்க வேண்டுமென்பது எல்லைப்புற மாநிலங்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

இந்தச் சூழலில், மார்ச் 31-ல் கூடிய ஐநா அரங்கில் மியான்மர் ராணுவ அரசை இந்தியா கண்டித்தது; உயிரிழந்த பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்தது; தலைவர்களை விடுவிக்கக் கோரியது; மியான்மர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கோரியது.

மியான்மர் அரசுடன் நல்லுறவைப் பேணிக்கொண்டே, இந்தியா அகதிகளுக்குப் புகலிடம் வழங்க வேண்டும். அடுத்த வீட்டில் ஜனநாயகம் கழுத்து நெரிக்கப்படும்போது, அதைக் கண்மூடிக் கடந்துபோவது எவ்வகையில் நியாயம்? ராஜீய வழிகளில் உள்ள எல்லாச் சாத்தியங்களையும் இந்தியா முயற்சிக்க வேண்டும். அது சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பையும் கூட்டும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


மியான்மரில் ராணுவம் எல்லையில் அகதிகள் இக்கட்டில் இந்தியாMyanmar army

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x