Published : 21 Nov 2015 08:53 AM
Last Updated : 21 Nov 2015 08:53 AM

கவனமாக மேற்கொள்ள வேண்டிய பயணம்

மதத்தின் பெயரால் பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது நல்ல ஆரம்பம். தன்னிச்சையாக முடிவெடுத்து மனைவியை விவாகரத்து செய்வது, பலதார மணம் செய்துகொள்வது ஆகியவை முஸ்லிம் தனிச் சட்டத்தில் அனுமதிப்பதை உச்ச நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. பரம்பரைச் சொத்தில் தன் பங்கைக் கோரி இந்து சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு பெண் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் முஸ்லிம் பெண்களின் நிலையையும் அப்போது விவாதித்தார். அதைக் கவனித்த நீதிபதிகள் குழு முஸ்லிம் பெண்களின் உரிமைகள் குறித்த சில கருத்துகளை முன்வைத்திருக்கிறது.

திருமணம் மற்றும் வாரிசு தொடர்பான சட்டங்கள் மதத்துக்கு உட்பட்டவை அல்ல என நீதிபதி ஏ.ஆர்.தேவ், நீதிபதி ஏ.கே.கோயல் ஆகியோர் குறிப்பிட்டிருக்கிறார்கள். குறிப்பாக, முஸ்லிம் தனிச் சட்டத்தைக் காலத்துக்கு ஏற்பத் தகவமைப்பது மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டனர். அரசாங்கமும் நாடாளுமன்றமும் ஆலோசித்து முடிவெடுக்கட்டும் என இத்தனைக் காலம் சமய வழக்கங்களிலிருந்து தள்ளி நின்றது நீதித் துறை. ஆனால், இனியும் அப்படி மவுனமாக இருக்கக் கூடாது எனும் நிலைப்பாட்டை நோக்கி நீதித் துறை தற்போது நகர ஆரம்பித்திருக்கிறது.

“இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளிக்கும் உரிமைகளை முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் மறுப்பது பாகுபாடு நிலவுவதையே காட்டுகிறது. ஏற்கெனவே ஒரு திருமணப் பந்தத்துக்குள் இருக்கும் ஒருவர் தன் மனைவியின் ஒப்புதலின்றி அவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாம் திருமணம் செய்துகொள்வது பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்துக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிப்பதாகும்” என நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். “எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒருதார மணம் மட்டுமே சட்டரீதியாக அனுமதிக்கப்படும் எனச் சொல்வதை முஸ்லிம் தனிச் சட்டத்தை மீறுவதாக நினைத்துக்கொள்ளக் கூடாது” என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

மேலும், முஸ்லிம் பெண்களின் இத்தகைய சிக்கல்களைப் பொது நல வழக்காக விசாரிக்கக் கருதி, உரிய நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மூலம் விசாரிக்கவும் முஸ்லிம் தனிச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்களுக்குக் காட்டப்படும் பாரபட்சத்தை விசாரிக்கவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இந்த அமர்வு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

சட்டப் பிரிவுகள் 14, 15, 21 மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின்படி பெண்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கும் சமூக நடைமுறைகளைக் களைவது அவசியம் எனவும் அழுத்தந்திருத்தமாகக் கூறியது. இதே பிரச்சினை குறித்து முன்பு விசாரிக்கப்பட்டபோது, தனிச் சட்டமானது முஸ்லிம் பெண்களுக்கு எதிராகப் பாலியல் பாகுபாட்டுக்கு வழிவகுப்பதாக அப்போது தலைமை தாங்கிய நீதிபதிகள் குழு கருதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த மதம், இனமாக இருந்தாலும் சரி, பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே. உயிரோடு இருக்கும் மனைவி, கணவரின் சடலத்துடன் உடன்கட்டை ஏறும் ‘சதி’ என்ற வழக்கமானது இந்து மதத்தில் நெடுங்காலம் பின்பற்றப்பட்டதுதான். ஆனால், சமூக நலனுக்கு எதிரான அந்தச் சடங்கு ஒருகட்டத்தில் தடை செய்யப்பட்டது. அது போலவே பலதார மணமும் தடை செய்யப்பட வேண்டியது அவசியம். சமய நம்பிக்கை என்ற பெயரில் காலங்காலமாகப் பின்பற்றப்படும் வழக்கங்கள் சமூக நன்மைக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் களைவது அவசியமாகிறது. அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த நகர்வு நல்ல திருப்பம். அதே சமயம், கவனமாக மேற்கொள்ள வேண்டிய பயணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x