Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

களத்தில் பவனி: சென்னையின் பிரச்சாரத் திருவிழா

சென்னை மாவட்டத்தையும் அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களையும் இணைத்து, சென்னை மண்டலமாக வரையறுக்கலாம். இந்த மண்டலத்தில் மொத்தம் 37 தொகுதிகள் உள்ளன. சென்னை மாவட்டத்தில் 22 தொகுதிகள், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஆறு, காஞ்சிபுரத்தில் மூன்று தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் ஐ.டி. நிறுவனங்களும் அவற்றின் பெருக்கத்தின் துணை விளைவுகளாக உணவு, உடை, கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த பெருமுதலீட்டு வணிக நிறுவனங்களும் இங்கு கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளன. அத்துடன் கடற்கரை நகரம் என்பதால் மீனவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். காமராஜர் துறைமுகம், அனல் மின் நிலையங்கள், கப்பல் கட்டுமானம், கனரக வாகனங்கள் ஆகியவற்றுக்கான தொழிற்சாலைகளும் தொழில் வளாகங்களும் நிரம்பிய பகுதி திருவள்ளூர். காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலை நெசவு, வணிகம் ஆகியவற்றோடு விவசாயமும் முக்கியத் தொழில்களாக இருந்துவருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பன்னாட்டுத் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன.

நட்சத்திர வேட்பாளர்கள்

சென்னை மண்டலத்தில் 23 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. திமுக தலைவரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், தொடர்ந்து மூன்றாம் முறையாகக் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முதல்வர் வேட்பாளருமான சீமான், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுக அமைச்சர்கள் ஆர்.ஜெயகுமார், கே.பாண்டியராஜன் இருவரும் முறையே ராயபுரம், ஆவடி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். சென்னையின் முன்னாள் மேயர்கள் சைதை துரைசாமியும் (அதிமுக), மா.சுப்பிரமணியமும் (திமுக) சைதாப்பட்டை தொகுதியில் நேருக்கு நேர் போட்டியிடுகிறார்கள்.

முதல் முறையாகக் களம் காண்பவர்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின், பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு, மநீமவின் மயிலாப்பூர் வேட்பாளர் ஸ்ரீப்ரியா ஆகியோர் சினிமாவின் மூலம் ஏற்கெனவே மக்களிடையே பிரபலமானவர்கள்.

கோட்டையில் போட்டி

2016 தேர்தலில் திமுக ஆட்சியமைக்க முடியாவிட்டாலும் அதன் கோட்டை என்று கருதப்படும் சென்னை நகரத்தில் உள்ள 16 தொகுதிகளில் 12ஐக் கைப்பற்றியது. அந்தத் தன்னம்பிக்கையில் இந்த முறை 15 தொகுதிகளில் நேரடியாகக் களம் காண்கிறது. 5 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 11-ல் அதிமுக வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் கணிசமாகப் பிரிக்கும் வாய்ப்பு மநீமவுக்கு உள்ளது என்று கருதப்படுகிறது. இந்த மண்டலத்தில் சென்னையைத் தவிர்த்த மற்ற மாவட்டங்களில் மநீமவுக்குச் செல்வாக்கு இருப்பதாகச் சொல்லிவிட முடியாது.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் வழக்கம் சென்னையில் பெருமளவு வழக்கொழிந்துவிட்டது. அதே நேரம் கூடுமானவரை வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கப் பிரயத்தனப்படும் வேட்பாளர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் மருத்துவர் நா.எழிலன், அந்தத் தொகுதிக்குட்பட்ட ஒரு லட்சம் வாக்காளர்களையாவது நேரில் சந்திக்கும் இலக்குடன் பணியாற்றிவருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் குஷ்புவும் குடியிருப்புகளுக்குச் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையின் தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். சிறு நகரங்களில் அதிக கவனம் செலுத்தும் ஸ்டாலினும் அவ்வப்போது சென்னைக்கு வந்து பரப்புரையில் ஈடுபடுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் சென்னைக்கு வந்து பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றினார்கள். கமல்ஹாசன், சீமான், அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் தலைநகருக்கான பரப்புரையில் உரிய கவனம் செலுத்திவருகின்றனர்.

பரப்புரை கலகலப்புகள்

சென்னை பரப்புரைக் கூட்டங்களில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. ராயபுரம் தொகுதியில் ஏழாம் முறையாகக் களம் காணும் மீன்வளத் துறை அமைச்சர் ஆர்.ஜெயக்குமார் எம்.ஜி.ஆர். குல்லா அணிவது முதல் மைக்கில் சினிமா பாடல்கள் பாடுவது வரை பரப்புரையில் கலகலப்பூட்டுகிறார். விருகம்பாக்கத்தில் திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஒரு உணவகத்தில் நுழைந்து தோசை சுட்டுக்கொடுத்து வாக்காளர்களைக் கவர முயன்றார். சைதை துரைசாமி பரப்புரையின்போது தேநீர்க் கடைகளில் தேநீர் போட்டுக் கொடுத்தார். மநீமவின் எழும்பூர் வேட்பாளர் பிரியதர்ஷினி சாலையோரக் கடை ஒன்றில் மீன் உணவு சமைத்துக்கொடுத்தார்.

அசலான பிரச்சினைகள்

மீன் வளத்துக்கும் கடற்கரையின் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அஞ்சப்படும் திட்டங்கள் வடசென்னைப் பகுதி வாக்காளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. சென்னை நகரில் நன்கு வளர்ச்சியடைந்த பகுதிகளில்கூட சாலைகள் மோசமாக உள்ளன. ஒருசில மணி நேரம் மழை பெய்தால் சாலைகளில் மழைநீர் தேங்கிவிடுகிறது, நாள் கணக்கில் மழை பெய்தால் பல பகுதிகளில் தேங்கிய நீர் வடிய வாரக் கணக்காகிறது. சென்னையிலேயே அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் குவிக்கப்படுகின்றன என்று பேசப்படும் அளவு, அந்த வளர்ச்சி அனைவருக்குமானதாக, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கிறதா என்பது குறித்துப் பேசப்படுவதில்லை. இந்த மாவட்டங்களின் மக்கள் அன்றாடம் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தேர்தல் பிரச்சாரங்களில் போதிய கவனம் கொடுக்கப்படுவதில்லை. எனினும், தேர்தல் திருவிழாவில் கொண்டாட்டத்துக்குப் பஞ்சமில்லாமல் காணப்படுகிறது சென்னை மண்டலம்.

- ச.கோபாலகிருஷ்ணன்,

தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x