Last Updated : 01 Apr, 2021 03:15 AM

 

Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

களத்தில் பவனி: களைகட்டும் மதுரை தேர்தல் திருவிழா

மதுரை மண்டலத்தில் 36 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன; தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகரான மதுரை, தொழில், வணிகத்தில் சிறந்து விளங்கும் விருதுநகர், திண்டுக்கல்; வேளாண்மையில் கொடிகட்டிப் பறக்கிற தேனி இருக்கிற இதே மண்டலத்தில்தான், அரசுகளின் பாராமுகத்தையே பார்த்துப் பழகிய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களும் வருகின்றன.

திமுகவின் தென்மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழிக்குப் பணிகளில் தீவிரம் காட்டும் வகையில் அதிமுகவில் இந்த மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சி அபிமானத்துடன், சாதி அபிமானமும் கூடிய பிராந்தியம் இது. இங்கு முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகம் என்பதால் அவர்களை அதிகம் குறிவைத்தே அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. பிரச்சாரத்தின்போது வன்னியர் உள்ஒதுக்கீடு தற்காலிகமானதுதான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், உதயகுமாரும் கூறியிருப்பது இதன் வெளிப்பாடுதான். மதுரை மண்டலத்தின் பொதுவான பிரச்சினையாகத் தொழில், வேலைவாய்ப்பின்மையும், விவசாய, மீனவர் பிரச்சினைகளுமே இருக்கின்றன. கூடுதலாக மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அதிமுக அரசு கை வைத்ததும் முக்கியப் பேசுபொருளாகி இருக்கிறது.

அசரவைக்கும் அமைச்சர்கள்

போடிநாயக்கனூர் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் நுழையும்போது, உள்ளூர்க் கட்சிக்காரரும் அந்த ஊரில் பெரும்பான்மையாக இருக்கிற சாதி பிரமுகரும் ஜீப்பில் ஏறிக்கொள்கிறார்கள். உள்ளூர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்றைக் கடகடவென வாசித்துவிட்டு, “இதை எல்லாம் நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன்” என்கிறார் பன்னீர்செல்வம். “மும்முறை முதல்வர், 4 ஆண்டுகள் துணை முதல்வராக இருந்தவரின் தொகுதி மாதிரியா இருக்கிறது போடி? என்ன செய்திருக்கிறார் அவர்?” என்று கேட்கிறார் அவரை எதிர்த்து நிற்கிற திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச்செல்வன்.

ஓ.பி.எஸ். தொகுதிக்கு அடுத்து இங்கே அதிகக் கவனம் பெறுவது, திருமங்கலம் தொகுதி. காரணம், ஆர்.பி.உதயகுமார். “சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் மொத்தம் செலவழிக்க வேண்டிய தொகை என்று தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள தொகையை ஒரு மணி நேரத்தில் அவர் செலவிட்டுவிடுகிறார்” என்று குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். களத்தில் திமுக வேட்பாளர் மு.மணிமாறனும் இருக்கிறார் என்றாலும், யானை காதில் புகுந்த கட்டெறும்பாக அமைச்சருக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறார் அமமுக வேட்பாளர் மருது சேனை ஆதிநாராயணன்.

மதுரையில் நிறைவேற்றப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம், நகரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குப் பதிலாகக் கூடுதலான சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. முறையாகத் திட்டமிடாமல், மக்களின் கருத்தைக் கேட்காமல் எதையாவது செய்துவிட வேண்டும் என்கிற அவசரத்தால் விளைந்த தீமை அது. மதுரை நகரில் இந்தப் பிரச்சினை அதிகம் பேசப்படுகிறது.

கரகாட்டம், ஆடல்பாடல், மேளதாளம், டிஜிட்டல் திரை என்று தனக்கென தனித்த பிரச்சார பாணியை வகுத்துள்ள அமைச்சர் செல்லூர் கே.ராஜு வாக்காளர்களைப் பார்த்து அவ்வப்போது, “நான் என்னைப் பெற்ற தாயையும் இழந்துவிட்டேன், வளர்த்த தாயையும் (ஜெ) இழந்துவிட்டேன்” என்று கண்கலங்குகிறார். திடீரென ஏதாவது பாட்டியைக் கட்டிப்பிடித்து, “என்னைப் பெத்த அம்மா மாதிரியே இருக்கீங்க ஆத்தா” என்கிறார் நா தழுதழுக்க.

ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், அவருடன் வருபவர்களும் ஒரே மாதிரி மஞ்சளாடை அணிந்து ஆதரவு கேட்கிறார்கள். எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.தங்கபாண்டியன், “தான் பிறந்த சிவகாசி தொகுதிக்கே ஒன்றும் செய்யாமல் தோல்வி பயத்தில் தொகுதி மாறியிருக்கும் அமைச்சர், நம்முடைய ஊருக்கு மட்டும் என்ன செய்துவிடப்போகிறார்?” என்று போட்டுத்தாக்குகிறார்.

அருப்புக்கோட்டையில் சாத்தூர் ராமச்சந்திரன், வைகைச்செல்வன் என்று இரு முன்னாள் அமைச்சர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். அவர்களின் நிம்மதியைக் கெடுக்கும் வகையில் மநீம, தேமுதிக வேட்பாளர்களும் கணிசமான வாக்கு வங்கியுடன் களத்தில் இருக்கிறார்கள். தங்கம் தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை எதிர்த்துக் களமிறங்கியிருப்பது தேவர் தேசிய பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்ற சிறு கட்சிகள் என்பதால், அலட்டிக்கொள்ளாமல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இந்த மண்டலத்தில் காரைக்குடி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. தொடர்ந்து தோல்வியைத் தழுவிவரும் எச்.ராஜா, தொகுதிக்குள் ரொம்பவே பணிவாக வாக்கு சேகரிக்கிறார். ஜெயலலிதா - அதிமுகவை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அவருக்கு, ‘‘எனது சின்னம் இரட்டை இலை அல்ல, தாமரைதான்’’ என்று விளங்க வைப்பது கஷ்டமான காரியமாக இருக்கிறது. ராஜா வென்றால் தன் கௌரவத்துக்கு இழுக்கு என்பதுபோல அவரை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடிக்காக வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கிறார் ப.சிதம்பரம்.

திருப்பரங்குன்றத்திலும், திண்டுக்கல்லிலும் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவதால், சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், கே.பாலகிருஷ்ணன் என்று தலைவர்கள் வந்து சென்றபடி இருக்கிறார்கள். மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும் தீவிர களப்பணியில் இருக்கிறார். 12 அடி உயரத்தில் ராட்சத சிலிண்டரை வடிவமைத்து, மத்திய பாஜக ஆட்சியில் அதன் விலை எப்படி ஏறியிருக்கிறது என்று சுட்டிக்காட்டி கம்யூனிஸ்ட்டுகள் செய்கிற பிரச்சாரம் களத்தில் நன்றாகவே எடுபடுகிறது.

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x