Last Updated : 01 Apr, 2021 03:15 AM

 

Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

மதச்சார்பின்மையை மக்கள் இயக்கமாக்க வேண்டும்: இரா.முத்தரசன் - கே.பாலகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாட்டில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இன்று தலைமை வகிக்கும் தலைவர்களுமே விவசாயப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்; சித்தாந்தத்தைக் காட்டிலும் களச் செயல்பாட்டைப் பலமாகக் கொண்டவர்கள்; விளைவாக, நிறைய மாற்றங்களை அவர்களிடம் கட்சியினர் எதிர்பார்க்கும் நிலையில் இருப்பவர்கள். நாடு முழுக்க வலதுசாரிகள் பெரும் செல்வாக்கோடு முன்னகரும் இக்காலகட்டத்தில் இடதுசாரிகளின் எதிர்காலச் செயல்திட்டம் திட்டம் என்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் கே.பாலகிருஷ்ணன் இருவருடனும் உரையாடினேன்.

தேர்தல் நம் பிரதான நோக்கம் அல்ல என்று சொல்லி ஒருகாலத்தில் வெகுமக்களின் போராட்டப் பிரதிநிதியாகச் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளும் இன்று தேர்தல் அரசியலை மையமிட்ட இயக்கங்களாகச் சுருங்கிக்கொண்டிருக்கின்றனவா?

முத்தரசன்: இல்லை. இன்று இந்தியச் சமூகம் அடைந்திருக்கும் எவ்வளவோ உரிமைகளும் சலுகைகளும் முந்தைய தலைமுறைகளின் அயராத போராட்டங்கள், தியாகங்களின் விளைவு. சின்னச் சின்ன உரிமைகளைப் பெறவெல்லாம் உயிர்ப் பலி கொடுத்திருக்கிறார்கள். நாடு முழுக்க ஓரளவுக்கேனும் நடந்திருக்கும் நிலச் சீர்திருத்தத்தையோ, ஒருவருக்கு அலுவலகத்தில் கிடைக்கும் குறைந்தபட்ச உரிமைகளையோ ஓர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்; இதற்காக கம்யூனிஸ்ட்டுகள் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால், இந்த வரலாறு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படவில்லை. அதேபோல, முதலாளியமும் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உத்திகளில் ஒன்றாக, ஒரு சமரசம்போல சில சலுகைகளைத் தருகிறது. அவை தற்காலிகம் என்றாலும், சமூகத்தின் போராட்டவுணர்வை அவை மழுங்கடிக்கின்றன. ஆக, தங்களுடைய பிரச்சினைகளுக்கு அரசியல்ரீதியாகத் தீர்வை அடையலாம் என்ற நம்பிக்கைக்கு மக்கள் மாறுகிறார்கள். இந்தச் சூழலில் தேர்தல்கள் வழி ஆட்சி மன்றங்களில் நாம் இடம்பெறுவதும், மக்களுக்காகப் பேசுவதும் முக்கியமானதாகின்றன.

பாலகிருஷ்ணன்: எந்த ஒரு விஷயத்துக்கும் தனி ஆளாகப் போராட முடியாது; அமைப்பாகத்தான் திரள வேண்டும் என்பது இன்றைக்கு இந்தியாவில் அடிமட்டம் வரை பரவியிருக்கிறதா, இல்லையா? ஓரிடத்தில் நான்கு ரிக்ஷாகாரர்கள் சேர்ந்தால் சங்கம் அமைத்துவிடுகிறார்கள். யாரிடமிருந்து அவர்களுக்கு வந்தது இந்த உணர்வு? கம்யூனிஸ்ட்டுகள் வழியே சென்றடைந்தது அது. நாங்களெல்லாம் எங்கள் மாணவப் பருவத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நோக்கி எப்படி வந்தோம் என்றால், கீழத்தஞ்சையில் நிலப்பிரபுத்துத்துக்கு எதிராக நடந்த ரத்தம் சொரிந்த போராட்டங்கள் உண்டாக்கிய ஈர்ப்பே அதற்கான காரணம். அன்றைக்குச் சமூகத்தில் குறிப்பிட்ட சிலர்தான் எல்லாவித உரிமைகளையும் பெற முடியும்; கல்விகூட சிலருக்குத்தான் கிடைக்கும் என்றிருந்த நிலை நாம் கடந்த காலத்தில் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாக மாறி இன்று அந்த வாய்ப்புகள் பரவலாகியிருக்கின்றன. அதாவது, நாம் எல்லோரும் எல்லாமும் பெறும் நிலைமையை அடையவில்லை என்றாலும், கிடைத்திருக்கும் கொஞ்ச உரிமைகள், சலுகைகளையே தனதாக்கிக்கொள்ள மக்கள் போட்டியிடும் நிலை இருக்கிறது. நூறு பேர் இருக்கும் இடத்தில் ஐம்பது பேருக்குத்தான் படிப்பு என்றால், போட்டியிட்டு முந்துவது என்ற மனநிலைக்குப் போகிறார்களே தவிர, கூடுதல் இடங்களை அரசிடம் கேட்டுப்பெறுவது என்ற இடம் அற்றுப்போயிருக்கிறது. மேலும், இப்படிப் போட்டிப் போட்டுப் பெறுவதாலேயே இது அவரவருக்குக் கிடைத்த தனி வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், சமூகத்தை அரசியல்மயப்படுத்துவதே தீர்வாகிறது. அதற்கு வீடுகள்தோறும் அன்றாடம் அரசியல் பேசும் சூழலை உருவாக்க வேண்டும்.

முதலாளி – வர்த்தகம் - தொழிலாளி இந்த மூவரின் முகங்களுமே இன்று வெகுவாக மாறியிருக்கின்றன. குறிப்பாக, கூகுள், ஃபேஸ்புக் தொடங்கி அமேசான், ஸ்விகி வரை தகவல் தொழில்நுட்பத் துறையின் பாய்ச்சலின் ஒரு பகுதியாகத் தம்மை விரித்துக்கொள்ளும் நிறுவனங்களின் எழுச்சிக்குப் பிறகு, உலக நாடுகளுடைய இறையாண்மையின் பண்பே மாறியிருக்கிறது. பொருளாதாரத்தை அணுகும் உங்கள் பார்வையில் இது ஏதேனும் மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறதா?

பாலகிருஷ்ணன்: ஒரு உதாரணம் சொல்கிறேன். எங்கள் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையில் 1,500 டன் கரும்பைப் பிழிய 3,500 பேர் வேலை பார்த்த நிலையையும் நான் பார்த்திருக்கிறேன்; 350 பேரை வைத்துக்கொண்டு 5,000 டன் கரும்பு பிழியப்படும் நிலையையும் பார்க்கிறேன். இயந்திரமயமானது தொழிலாளர்களின் வேலையை எளிதாக்கியிருக்கிறது, ஆலைக்கு ஏற்கெனவே இருந்த லாபத்தைவிட இப்போது பல மடங்கு லாபம் கிடைக்கிறது. ஆனால், இந்த லாப உயர்வில் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பங்கு கிடைக்கிறது? இங்கே ஆலை உண்டாக்கும் சுற்றுச்சூழல் விளைவுகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் இவ்வளவு விஷயங்களோடும்தான் பொருளாதாரத்தை அணுகுகிறோம். காலத்துக்கேற்ப முதலாளியம் தன்னைத் தகவமைத்துக்கொள்வதுபோலவே நாமும் அதை எதிர்கொள்ளும் உத்திகளை மாற்றுகிறோம். சுரண்டல் கூடாது என்பதே அடிப்படை. அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவத்தை கரோனா காலகட்டம் நமக்கு உணர்த்தியது இல்லையா?

முத்தரசன்: இன்றைக்கு நாடாளுமன்றத்தில் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை இருப்பதால் எப்படி அது ஆதிக்கத்தை நிலைநாட்டும் சட்டங்களை இயற்றுகிறதோ, அப்படி வளர்ந்த நாடுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் விதிகளை சர்வதேச அமைப்புகள் வழி இயற்றுகின்றன; உலகமயமாக்கல் அதை அமலாக்கும் வழிமுறையாக இருக்கிறது. என்ன தொழில்நுட்பம் வளர்ந்தாலும், வல்லான் வகுப்பதே வாய்க்கால் என்பதுதானே உண்மை! அதை உடைப்பதுதான் நம் வேலை. மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவருக்கு எப்படி அடுத்த மாதம் வேலை இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையோ, அதுபோலவே பல பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் உத்தரவாதம் இல்லாத சூழலில் இன்று இருக்கிறார்கள். சவால் என்னவென்றால், இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை இருவருக்கும் உணர்த்த வேண்டும். அவர்களுக்கான தீர்வு பொதுவுடைமை இயக்கம் என்ற நம்பிக்கையை அவர்களிடம் உண்டாக்க வேண்டும்.

அரசியலையும் மதத்தையும் வேறுபடுத்திப் பார்க்கும் பொதுக் கலாச்சாரத்தை உடைத்து, இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் போக்குக்குக் கணிசமான மக்களை மோடியின் பாஜக அழைத்து வந்துவிட்டது. இந்தியாவில் அரசியலர்கள் மதத்தை எப்படி அணுகுவது என்பதையும் சேர்த்தே இனி வியூகம் வகுக்க வேண்டும் என்றாகிவிட்ட சூழலில், கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு என்ன?

முத்தரசன்: மதமும் அரசியலும் ஒன்றல்ல. இதை ஒன்றாக்குவது பேராபத்து. அரசியலில் மதம் தலையெடுக்கும்போது என்னவாகும் என்பதை இந்தியா ஏற்கெனவே பிரிவினைக் காலகட்டம் தொடங்கி அனுபவப்பட்டிருக்கிறது. அதனால்தான், அரசியலையும் மதத்தையும் பிரித்துப்பார்க்கும் மதச்சார்பின்மையை இந்த நாட்டின் உயிர்நாடிகளில் ஒன்றாகப் பார்க்கிறோம். மதத்தையும் அரசியலையும் ஒன்றாக்கும் பாஜக வேகமாக முன்னகரும்போது எல்லாக் கட்சிகளுக்குமே இது ஒரு பெரிய கேள்வியாக முன் வந்து நிற்பதையும், சில கட்சிகள் அதில் தடுமாறுவதையும் பார்க்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒருபோதும் மதச்சார்பின்மையில் தடுமாற்றமும் இல்லை, சமரசமும் இல்லை. அரசியல் விழிப்புணர்வுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நம்முடைய மக்களின் இயல்பில் மதச்சார்பின்மை இருக்கிறது; அதன் அரசியல் முக்கியத்துவம் என்ன, மத நம்பிக்கைகளை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்பதை ஒரு சமூக இயக்கமாக மக்களிடம் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டுசெல்ல வேண்டும்.

பாலகிருஷ்ணன்: மத நம்பிக்கை அல்லது இறை உணர்வு ஒரு மனிதரின் தனிப்பட்ட உரிமை. பொதுச் சமூகத்தைப் பாதிக்காத அளவில் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் எவருடைய இறை நம்பிக்கையிலும் தலையிடுவதும் இல்லை; அதேபோல, அரசியல் – அரசு நிர்வாகத்தில் மதத்தை அனுமதிப்பதும் இல்லை. அரசும் அரசியலும் மதத்திலிருந்து விலகி நிற்கும் மதச்சார்பின்மைதான் இந்தியாவின் பலம். மதத்தையும் அரசியலையும் பாஜக ஒன்றாக்க முற்படுவது பெரும் அபாயம். மதத்துக்கு எதிராக நாம் பேச வேண்டியது இல்லை; ஆனால், மதச்சார்பின்மைக்காக நாம் மக்களிடம் தனியே பேசித்தான் ஆக வேண்டும்.

இந்தியாவில் மக்கள் விடுதலையைப் பேசும்போது சமூகரீதியாக அணுகுவதைக் காட்டிலும், வர்க்கரீதியாக அணுகுவதற்கு முன்னுரிமை கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இன்றைக்கு அது பெருமளவில் எடுபடவில்லை என்பது தெரிகிறது. உலகமே உற்றுநோக்கும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில்கூட சீக்கியப் பின்னணியும், ஜாட் பின்னணியும் முக்கியப் பங்கு வகிப்பதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாலகிருஷ்ணன்: இந்தியச் சமூக அமைப்பில் வர்க்கம், சாதி இரண்டும் ஒன்று அல்ல; அதே சமயத்தில், இரண்டும் எதிரும் புதிருமானதும் அல்ல. இரண்டின் அடிப்படையிலும் அணுகும் உத்திக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

முத்தரசன்: வர்க்கரீதியாக மக்களை ஒன்றுதிரட்டுவதே உலகளாவிய தீர்வு. அதே சமயம், சாதியச் சமூகமான இந்தியச் சமூகத்தில் சமூகநீதியை நாம் பின்தள்ளிவிட்டு எந்த விடுதலையையும் பேச முடியாது. இரண்டையும் இணைத்துக் கொண்டுபோவதில் கம்யூனிஸ்ட்டுகள் பின்தங்கிவிட்டோம் என்பதே உண்மை. ஆனால், இந்நிலை இன்று மாறியிருக்கிறது.

இந்திய இடதுசாரிகளின் எழுச்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு முக்கியம் என்பது பொதுத்தளத்தில் தொடர்ந்து பேசப்படுகிறது. இணைவதில் உங்களுக்கு என்னதான் பிரச்சினை?

பாலகிருஷ்ணன்: ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியாக நடைபோட வேண்டும் என்பதே எல்லோரும் விரும்புவது. அதே சமயத்தில், பாதை முரண்பாடாக இருந்து, ஒற்றுமை மட்டும் என்றால், பயணம் ஊரை அடையாது. ஒற்றுமையாக ஒரே பாதையில் பயணிப்பது என்ற நிலையை அடைய கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் கொஞ்ச தூரம் கடந்து போக வேண்டியிருக்கிறது.

முத்தரசன்: இது வெறுமனே கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல; தேசத்தின் தலையாய பிரச்சினைகளில் ஒன்று. காங்கிரஸும் பாஜகவும் ஒன்றல்ல என்றாலும், பொருளாதாரரீதியாக இரண்டும் வலதுசாரி பார்வையையே கொண்டவை; அப்படியென்றால், வலதுசாரிகளுக்குச் சரியான மாற்றாக ஒரு நாட்டில் இடதுசாரிகளே இருக்க முடியும். சுதந்திரத்துக்குப் பின் அந்தச் சூழல் இருந்தது; காங்கிரஸுக்கு அடுத்து வலுவான நிலையில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. 1964-ல் கட்சி பிரிந்தபோது அன்றைக்கு அதற்கான காரணங்களாகப் பேசப்பட்ட நியாயங்கள் எதுவும் இன்றைக்கு இல்லை என்பதே உண்மை. ஆனால், இந்த அரை நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சிறுத்துப்போய் இருக்கிறோம். மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வர வேண்டும் என்றால், நாம் வலுப்பெற வேண்டும்; அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டும். இதைத் தள்ளிப்போடுவதில் எந்த நியாயமும் இல்லை.

தமிழக சட்டமன்றத் தேர்தலை கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன?

பாலகிருஷ்ணன்: வெறும் வெற்றி – தோல்வியாகப் பார்க்கும் தேர்தல் அல்ல இது. நாட்டையே விழுங்கத் துடிக்கும் பாஜகவைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதற்குத் துணைபோகும் அதிமுகவை அப்புறப்படுத்துவதற்குமான யுத்தம்.

முத்தரசன்: சந்தேகமே இல்லை. இது யுத்தம்தான்; டெல்லியிலிருந்தும் பாஜக ஆட்சியை அகற்றுவதற்கான தொடக்கமும்கூட!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x