Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

அதிமுகவும் திமுகவும் சந்தர்ப்பவாதக் கட்சிகள்!- ஒவைஸி பேட்டி

ஒவைஸியின் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தமிழ்நாட்டு அரசியலிலும் களம்புகுந்திருக்கிறது. இது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான திருப்பம். இவரது வருகையை ஒட்டி, முஸ்லிம்களின் வாக்குகளை பாஜகவுக்கு சாதகமாக இந்தக் கட்சி பிரிக்கக்கூடும் என்று அவர் மேல் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலுக்குள் ஒவைஸி வந்ததன் பின்னணி, அமமுகவுடன் கூட்டணி வைத்ததற்கான காரணங்கள் என விரிவாகப் பேசுகிறார்.

உங்கள் கூட்டணியின் லட்சியம் என்ன?

இந்தக் கூட்டணிக்குப் பல நோக்கங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று தமிழ்நாட்டு மக்களுக்கு மூன்றாவது அணி தேவைப்படுகிறது என்பதாகும். வழக்கமாக திமுக கூட்டணி, இல்லையென்றால் அதிமுக கூட்டணி என்பதாகத்தான் இருக்கும். தற்போது உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை மூன்றாவது அணி நிரப்புவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

முன்னதாக, திமுகவை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாமல் தடுக்க அதிமுக அல்லது பாஜகவுடன் தான் கூட்டணி வைக்கத் தயார் என்றும், ஆனால் தன்னுடைய தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்றும் தினகரன் கூறியிருந்தார். கூட்டணியைப் பற்றிய உங்கள் கருத்தும் தினகரன் கருத்தும் ஒத்துப்போகிறதா?

நான் தினகரனைச் சந்திக்கும்போது அவரிடம் நேரடியாகவே கேட்டேன், அவர் பாஜகவை ஆதரிக்கப்போகிறாரா என்று. “மிஸ்டர் ஒவைஸி, பாஜகவை நான் ஆதரிக்கப்போவதில்லை என்று உங்களுக்கு உறுதிமொழி அளிக்கிறேன். நான் ஒரு கட்சியை நடத்துகிறேன் அது முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், என்னால் பாஜகவை ஆதரிக்க முடியாது, ஏனெனில் என்னுடைய அரசியல் பயணம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்று தினகரன் என்னிடம் கூறினார். இவைதான் அவர் கூறிய அதே வார்த்தைகள்.

ஆக, உங்களின் மிகப் பெரிய எதிரி யார்? பாஜகவா, அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்டதால் அதிமுகவா? அல்லது அமமுகவுடன் நீங்கள் கூட்டணி வைத்துக்கொண்டதால் உங்கள் மிகப் பெரிய எதிரி திமுகவா?

திமுகவோ அதிமுகவோ இரண்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்ட கட்சிகள்தான். ஆகையால், இவர்கள் யாருமே புனிதர்கள் இல்லை. இரண்டு கட்சிகளுமே சரிசமமாக சந்தர்ப்பவாத, வகுப்புவாதக் கட்சிகள்தான். மேலும், மஹாராஷ்டிரத்தில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துவருகிறது. மதச்சார்பின்மை குறித்த அவர்களின் படாடோபமான நிலைப்பாட்டோடு இதைப் பொருத்திப் பார்க்கும்போது என்ன தெரிகிறது? அப்புறம், அதே காங்கிரஸ்தான் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமித் ஷா 2019 ஜூலையில் கொண்டுவந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்தத்தை (யுஏபிஏ) ஆதரித்தது. இந்தத் திருத்தங்கள் அந்தச் சட்டத்தை மேலும் கொடுங்கோன்மையாக ஆக்கியதுடன் எழுத்தாளர்களையும் செயல்பாட்டாளர்களையும் சிறைப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன. இது காங்கிரஸையும் திமுகவையும் பற்றி நமக்குச் சொல்வதென்ன?

பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணிக்கு எல்லா இடங்களிலும் குந்தகம் விளைவிக்கும் ஐந்தாம் படையாக நீங்கள் பார்க்கப்படுகிறீர்கள். தற்போது தமிழ்நாட்டிலும்…

ஆம், அப்படி என்னைப் பலரும் கருதுவதை நான் அறிவேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் எப்படித் தோல்வியடைந்தார்? எங்களாலா? நான் அங்கு போகவில்லையே. நான் ஐந்தாம் படையாக இருந்திருந்தால் தங்களுடன் கூட்டணி வைக்கச் சொல்லி திமுக ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும்? அவர்கள் ஏற்பாடு செய்யும் சிறுபான்மையினரின் மாநாடு ஒன்றில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்று ஏன் அவர்களின் சிறுபான்மைப் பிரிவின் தலைவரை (டாக்டர் மஸ்தான்) ஹைதராபாதில் உள்ள என் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்? நான் சென்னை வந்து இறங்கிய பிறகு ஏன் அதை மறுக்க வேண்டும்? எங்கள் சந்திப்புக்குப் புகைப்பட ஆதாரமே இருக்கிறது. எனக்கு ஒரு தொகுதி கொடுப்பதாகக்கூட வாக்குறுதி கொடுத்தார்கள்; பின்பு அதிலிருந்து பின்வாங்கிவிட்டார்கள். அதனால்தான் முஸ்லிம்களுக்கென்று சுதந்திரமான அரசியல் குரல் ஒன்று வேண்டும் என்று சொல்கிறேன். திமுகவின் சிறுபான்மைத் தலைவருக்கு அவருடைய சொந்தக் கட்சியில் எந்த மதிப்பும் இல்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது. இதுதான் முஸ்லிம்கள் மீதான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. உங்கள் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் தலைவரையே நீங்கள் ஆதரிக்கவில்லை.

திமுக கூட்டணி இந்தத் தேர்தலை வெறுமனே அதிகாரத்துக்கான போராட்டமாக மட்டும் கருதிவிடாமல் பெரியாரின் சித்தாந்தத்துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக முன்னிறுத்துகிறது. பாஜக மெல்ல மெல்ல ஊடுருவுவதை முற்போக்கு சக்திகளெல்லாம் எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன. இதில் நீங்கள் எங்கே வருகிறீர்கள்?

திமுக மென்மையான இந்துத்துவத்தைப் பேசிக்கொண்டிருக்கிறது. அதன் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள், கோயில்களுக்கும் புனித யாத்திரைக்கும் ரூ.1,000 கோடி ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. இதுதான் பெரியாருக்கு செலுத்தும் வணக்கமா? தமிழ்நாட்டில் இதைப் பற்றியெல்லாம் பேசுவார்கள் என்று யாரும் முன்பெல்லாம் நினைத்துப் பார்த்திருப்பார்களா? அப்புறம் எந்த மாதிரியான முற்போக்கு சக்திகள்? அவற்றால் தேசிய அளவில் பாஜகவைத் தடுத்து நிறுத்த முடியாமல் போனது ஏன்? மேலும், பாஜக 300-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வதையும் பார்த்துக்கொண்டுதானே இருந்தார்கள்? பல வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை; அங்கெல்லாம் என்னுடைய கட்சி போட்டியிடவில்லை. அவர்கள் திறனற்றுப் போய்விட்டதோடு தங்களுக்குத் தாங்களே சமரசம் செய்துகொண்டு அசல் பாஜகவைவிடக் கூடுதலான பாஜகவாக அவர்கள் ஆகிவிட்டார்கள். நான் துணிந்து எழுந்து வந்து ஒரு வேட்பாளரை நிறுத்தினேன் என்றால் அதனால் நான் பிற்போக்கானவனாக ஆகிவிடுவேனா?

நீங்கள் வாக்குகளைப் பிரிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

இந்தக் கேள்வியே பிரச்சினைக்குரியது. ஒரு ஜனநாயகத்தில், கிம் ஜோங் பாணியிலான அமைப்பு வேண்டும் என்று நீங்கள் நினைக்காத பட்சத்தில், வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடத்தான் செய்வார்கள். தேர்தல்களில் போட்டியிடத் திராணியற்ற கட்சிகளின் அடிமையா நான்? அப்புறம், பிஹாரிலும் நீங்கள் தோல்வியடைந்தீர்கள். நான் போட்டியிட்டது பாஜகவுக்கு சாதகமாக ஆகவில்லை என்பதற்கு நான் சான்றை அளித்துவிட்டேன். வாக்குகள் பிரியக் கூடாது என்பதற்காக ஒருவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றால் இது என்ன நிலப்பிரபுத்துவ அமைப்பா? ஒரு கட்சிக்கோ இன்னொரு கட்சிக்கோ தாங்கள் வாக்களிக்க விரும்புவதைத் தீர்மானிப்பது மக்களின் சக்திதான். அப்படி இருக்கும்போது நான் போட்டியிடுவதை மட்டும் கேள்வி கேட்பது ஏன்? நீங்கள் போட்டியிட்டால், அவர்கள் வெல்லலாம் அல்லது தோல்வியடையலாம். நான் போட்டியிட்டால் இந்திய ஜனநாயகத்தை நான் வலுப்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்றும், ஜனநாயக நடைமுறையை நோக்கி மேலும் பல இளைஞர்களைக் கொண்டுவருகிறேன் என்றும் நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டுமா; நான் தேர்தலில் நிற்காமல் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நிற்க வேண்டுமா? ஆமாம், என்னுடைய குரல் எல்லோராலும் கேட்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்; முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமை ஒன்றை உருவாக்க விரும்புகிறேன். இது கொண்டாடப்பட வேண்டிய விஷயம்.

பாஜகவின் தமிழ்நாட்டுத் தேர்தல் அறிக்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 1976-ல் பசுவதை தடை செய்யப்பட்டிருக்கிறது. பாஜக தன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கும் பசுவதைத் தடையை ஏன் அதிமுகவும் திமுகவும் திட்டவட்டமாக மறுக்கவில்லை. இந்த விஷயம் பற்றி இரண்டு கட்சிகளும் மௌனமாக இருப்பது ஏன்?

© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x