Last Updated : 26 Mar, 2021 03:15 AM

 

Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM

தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்: தனித் தனி பார்வைகள்!

கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் அரசியல் களத்தில் எப்போதுமே தனிக் கவனத்தோடு அணுகப்படும். அடிப்படையான பிரச்சினைகளுக்கு அக்கட்சிகள் அளிக்கும் தீர்வுகளுக்காக அந்த அறிக்கைகள் கவனம் பெறும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) இரண்டுமே 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி தங்களது அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

போராடும் விவசாயிகளின் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை என்று ஒன்றிய அரசைக் கண்டிக்கும் சிபிஐ கட்சியின் தேர்தல் அறிக்கை, புதிய சட்டங்களின் வாயிலாகத் தொழிலாளர் நல உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டுகிறது. பாஜகவை எதிர்ப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்ட பிறகே, அக்கட்சி தனது வாக்குறுதிகளைச் சொல்ல முன்வருகிறது. அனைத்துத் தொழில்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21,000 நிர்ணயம், சாதி ஆணவப் படுகொலையைத் தடுத்து நிறுத்த தனிச் சட்டம், ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலை நாட்களை 200 ஆக உயர்த்துவது, வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.7,000 நிவாரணம், நிலத்தடி நீரெடுப்புக்குக் கடுமையான விதிமுறைகள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் குறுகிய காலத் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை சிபிஐ தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.

சிபிஐ(எம்) கட்சியும் திராவிடக் கட்சிகளின் மாநில உரிமைகளுக்கான கோரிக்கைகளைப் பிரதிபலித்திருக்கிற அதே நேரத்தில், மாநில முதலமைச்சர் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற சர்க்காரியா கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்குக் காலக்கெடு, பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர்களை விடுவிப்பது என மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் தெளிவான திட்டங்களையும் அக்கட்சி முன்வைத்திருக்கிறது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் சர்வதேச வணிக ஒப்பந்தங்களில் ஒன்றிய அரசு கையெழுத்திடக் கூடாது என்பதும் அதில் ஒன்று.

பகுத்தறிவு, சுயமரியாதை

மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை ஆண்டுதோறும் வெளியிடச் செய்தல், ஆடம்பரமில்லாத அரசு நிகழ்ச்சிகள், ஒவ்வொரு ஊராட்சியிலும் அரசின் சார்பில் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்குதல், பஞ்சமி நில மீட்பு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை நாட்களை 200 ஆக உயர்த்தவும் ஒரு நாள் ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தவும் வலியுறுத்தல், அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட ஆரம்ப சுகாதார மையங்கள், தொற்றுநோய்களுக்கான நிரந்தரப் பரிசோதனை மையங்கள், மருத்துவத் துறை ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி மூலமாகப் பணியமர்த்தல் உள்ளிட்டவை சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கையின் குறிப்பிடத்தக்க அம்சங்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பகுத்தறிவு, சுயமரியாதை என்கிற வார்த்தைகளையும் நட்பார்ந்த முறையில் பார்க்க முடிகிறது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய காங்கிரஸின் தமிழ்நாடு கமிட்டி தனது தேர்தல் அறிக்கையில், வெளிப்படையான அரசு நிர்வாகத்துக்கு முதலிடம் கொடுத்திருக்கிறது. ஊழலற்ற அரசு நிர்வாகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டமும் ஒரு காரணம் என்று கூறும் காங்கிரஸ், பாஜகவின் ஆட்சிக் காலத்தில் அச்சட்டத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்கள் திரும்பப்பெறுவதற்கு முயற்சி எடுக்கப்படும் என்று கூறுகிறது.

சென்னைப் பெருநகர மாநகராட்சி 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் என்றும் காங்கிரஸின் அறிக்கை கூறுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் குறித்த காங்கிரஸ் கட்சியின் உறுதிமொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உள்ளாட்சிகளின் பொறுப்புகள் குறித்து அரசாணைகள் வெளியிடாமல் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பது அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மூன்றாண்டு குடிமைப் பணி பயிற்சியளித்துக் காவல் ஆய்வாளர்களாகவும் கிராம நிர்வாக அதிகாரிகளாகவும் நியமிப்பதற்கான காங்கிரஸின் திட்டம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.

தொலைநோக்குப் பத்திரம்

தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக் கட்சிகளும்கூடத் தங்களது வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையென்ற பெயரிலேயே வெளியிட்டுள்ளன. பாஜக மட்டும் விதிவிலக்காக ‘தொலைநோக்குப் பத்திரம்’ என்று வித்தியாசம் காட்டியிருக்கிறது. ‘லை’யும் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முந்தைய கொக்கி போட்ட ‘லை’. பஞ்சமி நில மீட்பு, கோயில் நிர்வாகங்களை அரசிடமிருந்து மீட்பு, சென்னை (பழைய கொக்கி போட்ட னை) மாநகராட்சியை மூன்றாகப் பிரிப்பது ஆகியவை பாஜகவின் முக்கிய அறிவிப்புகள். தவிர விவசாயத்துக்குத் தனி பட்ஜெட், பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப்லெட், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், சட்ட மேலவை என்று மாநிலக் கட்சிகளின் வாக்குறுதிகளை பாஜகவும் அளித்துள்ளது. மொத்தமே 14 தலைப்புகளும் 32 பக்கங்களும்தான் என்றாலும் பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்களுடன் ஜொலிக்கிறது பாஜகவின் பத்திரம்.

ஆட்சியில் எவ்விதப் பங்கும் இல்லாமல் தேர்தல் கூட்டணியாக மட்டுமே முடிந்துபோகிற பட்சத்தில், தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எந்த அளவுக்குச் செயல்பாட்டுக்கு வரும் என்பது சந்தேகம்தான். ஆனாலும், பிரதானக் கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சியின் தனித்த அரசியல் பார்வைகளைப் புரிந்துகொள்ள இந்த அறிக்கைகள் உதவும்.

ஆட்சியில் எவ்விதப் பங்கும் இல்லாமல் தேர்தல் கூட்டணியாக மட்டுமே முடிந்துபோகிற பட்சத்தில் தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் எந்த அளவுக்குச் செயல்பாட்டுக்கு வரும் என்பது சந்தேகம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x