Published : 16 Nov 2015 01:01 PM
Last Updated : 16 Nov 2015 01:01 PM

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்

‘ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’ கட்டுரையைத் தமிழக முதல்வர் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, அரசாங்க உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. ஒருவரைத் தற்கொலை செய்யத் தூண்டினாலே குற்றம்தான். சமூகத்தையே தற்கொலை செய்ய வைக்கின்ற அளவுக்கு யார் எதைச் செய்தாலும் அவர்கள் மிகப் பெரிய சமூகக் குற்றவாளிகளே. தேச துரோகத் தண்டனைக்கு உரியவர்களே.

கட்டுரைகளை ஆதாரங்களோடு, புள்ளிவிவரங்களோடு அங்குலம் அங்குலமாக அலசி அராய்ந்து அனல் பறக்க வெளியிட்டுள்ளீர்கள். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி இது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு இருந்த அறிவு, பொறுப்புணர்வு, தீர்க்கதரிசனம்கூட, நாகரிகத்தில் முன்னேறி உள்ள நமக்கு இல்லையே ஏன்? நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய அளவுக்கு தவறு செய்திருக்கிறோம். இனியாவது திருந்துவோம். இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.

எங்காவது, எவராவது ஒரு அமைச்சரோ, அதிகாரிகளோ புதிதாக ஒரு குளத்தைத்தையாவது, ஏரியையாவது உருவாக்கியிருப்பார்களா? அன்று வாழ்ந்த மக்களும், மன்னர்களும் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். நாம், வருங்கால மக்களுக்கு, இப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோமோ?

- சாமி. குணா, அம்மாசத்திரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x