Last Updated : 25 Mar, 2021 03:14 AM

 

Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு ஸ்டாலின்!- தொல். திருமாவளவன் பேட்டி

விசிக தலைவர் திருமாவளவனை அந்தக் கட்சியின் தலைமையகத்தில் சந்தித்தபோது இரவு சரியாக 12 மணி ஆகியிருந்தது. அந்த நேரத்திலும் வரிசை கட்டி நிற்கும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காத சிலர் ஆவேசமாக அவரிடம் முறையிடுகின்றனர். பொறுமையாகப் பேசி ஆற்றுப்படுத்துகிறார். திருமாவளவனின் முகம் மட்டுமின்றிக் கை, கால்களிலும்கூட வீக்கத்தைக் கவனிக்க முடிந்தது. “நேரத்துக்குச் சாப்பிடறதும் இல்லை; ஒழுங்கா ஓய்வு எடுக்கிறதும் இல்லை; நேற்று தூங்கப் போகும்போது அதிகாலை நாலு மணி; இன்னைக்கும் எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியலை; இப்படித்தான் ஓடுது; ஆனா, ஓய்வொழிச்சல் பார்த்து உட்கார முடியாத யுத்தம் இது” என்று புன்னகைக்கிறார்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை சனாதனத்துக்கு எதிரான போர் என்று அறிவித்திருக்கிறீர்கள். சனாதனம் என்பதை இன்றைய தேதியில் எப்படி அர்த்தப்படுத்துகிறீர்கள், உங்கள் அறிவிப்பை விளக்க முடியுமா?

சனாதனத்தின் உள்ளடக்கம் அசமத்துவம். பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வைத் தீர்மானித்து இங்கே ஒரு கட்டுமானம் இருக்கிறது இல்லையா, அதை உருவாக்கியதும், அது அழிந்துவிடாமல் பராமரிப்பதும் சனாதனம். இந்தச் சாதியக் கட்டுமானத்தை அப்படியே பாதுகாத்திடவும், அதை உடைத்து நொறுக்கிவிட்டு சமூகநீதிக் கட்டுமானத்தை உருவாக்கிடவும் என்று இங்கே இரு தரப்பிலும் வேலைகள் நடக்கின்றன. சனாதனக் கட்டுமானத்தை அப்படியே நீட்டிக்கச்செய்ய உழைக்கும் அமைப்பாகவே நான் சங்கப் பரிவாரங்களைக் காண்கிறேன். தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் சாதி – மத வரையறைகளைக் கடந்து அமைப்புகளாக ஒருங்கிணைந்து, கீழே உள்ளவர்களையும் அதிகாரமயப்படுத்தும் சக்திகளை நாசப்படுத்த முற்படும் அரசியல் சக்தியாகவே பாஜகவைக் கருதுகிறேன். அதாவது, பாஜக என்பது சனாதனத்தின் அரசியல் வடிவம். அது தமிழ்நாட்டை இப்போது சூறையாட முற்படுகிறது. இங்குள்ள ஜனநாயக சக்திகளை அழிக்க முற்படுகிறது. ஆகையால்தான் அதற்கு எதிரான போர் என்று இந்தத் தேர்தலைக் குறிப்பிடுகிறேன்.

சமூகநீதியைத் தங்களுடைய மைய இலக்குகளில் ஒன்றாகப் பேசும் அமைப்புகளின் அரசியலை மோடியின் பாஜக இந்த ஏழாண்டுகளில் பல இடங்களிலும் உடைத்திருக்கிறது; குறிப்பாக, வட இந்தியாவில் இதை அதிகம் காண்கிறோம். இதில் தலித் அரசியல் இயக்கங்கள் பெரும் தேக்கத்தையும் சிதிலத்தையும் அடைந்திருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். சொல்லப்போனால், தேசிய அளவில் விசிக அளவுக்குத் துடிப்போடு முன்னகரும் அம்பேத்கரிய இயக்கம் ஒன்று தென்படவில்லை. எங்கே தவறு?

தலித் இயக்கங்களை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். முதல் வகை, அம்பேத்கரை வெறுமனே ஒரு தலைவராக உள்வாங்கிக்கொண்டு திரளும் இயக்கங்கள்; இவை அம்பேத்கரைக் கருத்தியல்ரீதியாக உள்வாங்குவதில்லை; அம்பேத்கர் என்ற சென்டிமென்ட், தலித் என்ற சென்டிமென்ட் இரண்டோடும் முடிந்துவிடுகின்றன; காலப்போக்கில் இவை சாதியுணர்வைப் பிரதிபலிக்கும் இயக்கங்களாகவும் ஆகிவிடுகின்றன. இரண்டாம் வகை, அம்பேத்கரைக் கருத்தியல்ரீதியாகப் படித்து உள்வாங்கி, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களோடு அமைப்பாகத் திரளும் இயக்கங்கள். அதிகாரத்தை நோக்கிய அணிதிரட்டல் ஒருபுறம்; புரட்சிகர மாற்றத்தை நோக்கிய அணிதிரட்டல் மறுபுறம். பொது நீரோட்டத்தில் இணைந்து பணியாற்றும்போது எங்கே சமரசம் செய்வது, எங்கே உறுதியாக நிற்பது; எது நட்பு முரண், எது பகை முரண் என்பதில் பெரிய தெளிவு தேவை. அந்த இடத்தில் ஏற்படும் சறுக்கலே இந்த நிலைக்குக் காரணம். இந்திய அளவில் அம்பேத்கரிய இயக்கங்கள் இன்று மெல்லக் கரைகின்றன என்றால், அதற்குக் கருத்தியல் சிதைவுதான் காரணம்.

அப்படியென்றால், காந்திபோல அம்பேத்கரும் ஆகிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாமா? அதாவது, சாராம்சத்துக்கு அப்பாற்பட்ட அடையாளமாக அவருடைய அரசியல் எதிரிகளாலும் எப்படி காந்தி சுவீகரிக்கப்படுகிறாரோ அப்படி அம்பேத்கரும் ஆகிவருகிறார் எனலாமா?

அதுதான் உண்மை. வெற்று அடையாள அரசியல் சீக்கிரமே நீர்த்துவிடும். அம்பேத்கரின் சிலைகளையும் படங்களையும் அவருடைய லட்சியத்தை உள்வாங்காமல் வெறுமனே நம்முடைய தேவைக்காகப் பயன்படுத்தினால் அம்பேத்கர் ஒரு கமர்ஷியல் கமாடிட்டி மாதிரி ஆகிவிடுவார். இது ஒரு சுரண்டல்தான்.

எந்த ஒரு தலைவரின் லட்சியங்களையும் அடுத்தடுத்த காலகட்டத்துக்கு எடுத்துச்செல்லவும் விஸ்தரிக்கவும் தொடர் ஆளுமைகள் தேவைப்படுகிறார்கள். உதாரணமாக, பெரியாரியம் வெறும் கருத்துகளாகத் தேங்கிக் கெட்டிப்பட்டுவிடக்கூடிய இடத்தில் அதை மீட்டெடுத்து அதன் இடைவெளிகளை அண்ணா நிரப்புகிறார். திமுக அற்ற பெரியாரியத்தை நம்மால் கற்பனைசெய்ய முடியாது. அம்பேத்கரிடமிருந்து நீங்கள் முரண்படும் விஷயங்களையும் அப்படிச் சொல்ல முடியுமா? உதாரணமாக, ‘தலித்துகள் மதம் மாறுவது மேலும் அவர்களைப் பலவீனப்படுத்துகிறது என்பதால் அது தேவை இல்லை’ என்ற உங்கள் நிலைப்பாடோ, ‘அதிகாரம் மிக்க மாநிலங்களை மையப்படுத்திய முழுக் கூட்டாட்சி நாடாக இந்தியா மாற வேண்டும்’ என்ற நிலைப்பாடோ அம்பேத்கரின் நிலைப்பாடுகளிலிருந்தே ஒரு பெரிய தாவல் என்று சொல்லலாம். சரியா?

எந்த ஒரு சித்தாந்தமும் காலத்துக்கு ஏற்ற பரிணாம வளர்ச்சியை அடைய வேண்டும். அண்ணா இல்லையென்றால், பெரியாருடைய சிந்தனைகள் வெறும் சிந்தனைகளாகவே இருந்திருக்கும். இதற்கு அண்ணா அடைந்த அரசியல் அதிகாரம் முக்கியமான காரணம். பொது நீரோட்டத்தில் மிகப் பெரும் ஆளுமையாக அண்ணா உருவெடுத்ததால், பெரியாரின் சிந்தனைகள் பொது நீரோட்டத்தில் கலக்கின்றன, எழுச்சி பெறுகின்றன, பரந்துபட்ட அளவில் எல்லோரிடமும் சென்றுசேர்கின்றன. அம்பேத்கருக்கு அப்படியொரு அண்ணா கிடைக்கவில்லை. பெரியாருடைய கருத்துகளைப் பரப்புவதற்கு அரசியல் தளத்தில் ஒரு வலுவான மிஷனரி இருந்தது; அதுதான் திமுக. அதை வெறுமனே ஒரு அரசியல் கட்சியாக மட்டும் சுருக்கிப் பார்த்திட முடியாது. அம்பேத்கரின் கருத்துகளைப் பரப்புவதற்கு அப்படி ஒரு மிஷனரி உருவாகவில்லை என்பதே உண்மை. அம்பேத்கரியத்துக்கு ஒரு முழுமையான அரசியல் வடிவத்தைக் கொடுப்பதற்கும், செழுமைப்படுத்துவதற்குமான வாய்ப்பு கான்ஷிராம் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்குக் கிடைத்தது. அவர்கள் அதற்காகக் கடுமையாக உழைத்தார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. எங்கே வழுக்கினார்கள் என்றால், அம்பேத்கர் எந்த சித்தாந்தத்தைக் கடுமையாக எதிர்த்தாரோ அந்த சித்தாந்த எதிரிகளுடனேயே அதிகாரத்துக்காகக் கூட்டணி கொண்டார்கள். கருத்தியல் சமரசம். பாஜகவுடனான கூட்டு என்பது பிராமணியத்துடனான கூட்டுதான். சமூகநீதி இயக்கங்களை இது வீழ்ச்சிக்குத்தான் இட்டுச்செல்லும். இதை முழுமையாக உணர்ந்திருப்பதால்தான் பாஜகவைக் கொள்கைப் பகைவர்களாக நான் கருதுகிறேன். அதனால்தான், என்ன பதவி கிடைத்தாலும் சரி, எந்தக் காலத்திலும் அவர்களுடன் கூட்டணி கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதே சமயம், அம்பேத்கரியத்தின் மைய லட்சியம் எதுவோ அந்தச் சமத்துவத்தை அடைவதற்கான சித்தாந்தப் பரிணாம வளர்ச்சிக்கான எல்லா வழிகளையும் முயல்கிறேன். ‘இந்தத் தேர்தலில் திமுகவுடன் வெறும் ஆறு இடங்களுக்கு ஒப்புக்கொண்டுவிட்டீர்களே!’ என்று கேட்பவர்களுக்கான பதிலும் இதில் உள்ளது.

பாஜகவுக்கு எதிரான யுத்தத்தில் திமுகவையும் ஸ்டாலினையும் எந்த அளவுக்கு நம்புகிறீர்கள்?

முழுமையாக நம்புகிறேன். ஸ்டாலினை நான் எப்படி மதிப்பிடுகிறேன் என்றால், அவர் ‘கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு’ என்று கூறுவேன். எப்படியென்றால், உறுதியான சனாதன எதிர்ப்பு என்று கருத்தியல் சார்ந்து ஒரு முடிவை எடுக்கும்போது கருணாநிதியின் பிள்ளை என்பதை அவர் நிரூபிக்கிறார்; திமுக கூட்டணியை விட்டு விசிகவை அகற்ற எத்தனையோ சக்திகள் முயன்றன; குறிப்பாக, ‘மநு’ விவகாரத்தை இதற்குச் சரியான வாய்ப்பாக அவை பயன்படுத்தின; ஸ்டாலின் பக்கபலமாக நின்றார். பகைவர்களை அடையாளம் கண்ட பின் அவர்களுக்கு எதிராக எதற்கும் அஞ்சாமல் முன்னோக்கிச் செல்வதிலும், கூடவே அது நோக்கி இயக்கத்தையும் கட்டுப்பாடாக நிர்வகித்துச் செல்வதிலும் ஜெயலலிதாவை அவர் பிரதிபலிக்கிறார். சனாதனத்துக்கு எதிராக அவர் முன்னெடுக்கும் போரில் விசிக உறுதியான பக்கபலமாக இருக்கும்.

தனித்த சாதிகளாக இருந்தவை பிற்பாடு ‘ஒடுக்கப்பட்டோர்’, ‘பிற்படுத்தப்பட்டோர்’ எனும் வரையறை நோக்கி ஒரு தொகுப்பாக நகர்ந்ததன் வழியாகவே சமூகநீதி அரசியலையும் சமவுரிமையையும் இங்கு பேச முடிந்தது. இன்று சமூகங்கள் மீண்டும் தனித்த சாதிகளாகப் பிளவுறுவதைப் பார்க்கிறோம். தலித் அரசியலையே எடுத்துக்கொண்டால், தேவேந்திரகுல வேளாளர் சமூகம் இன்று பட்டியலின வரையறையிலிருந்து வெளியேறுவதில் காட்டும் முனைப்பானது சமூகநீதி பேசும் இயக்கங்களுக்கு ஒரு பெரிய பின்னடைவுதான். இதற்கு என்ன காரணம்; சமூகநீதி சித்தாந்தத்தின் போதாமையா இது?

அப்படி இல்லை. சனாதனிகள் தங்கள் சித்தாந்தத்தை மக்களிடம் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்கிறார்கள்; ஜனநாயக இயக்கங்கள் அந்த இடத்தில் சறுக்கிவிட்டோம். இது சித்தாந்தத்தின் தோல்வி அல்ல; சித்தாந்தத்தை முன்னெடுத்துச்செல்வதில் அடைந்திருக்கும் பின்னடைவின் விளைவு. சமத்துவம் ஒரு பெரும் கனவு. இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், அதற்குப் பின் அரசு தன்னுடைய நிர்வாகத்துக்காகக் கொண்டுவந்த ‘முற்பட்டோர்’, ‘பிற்படுத்தப்பட்டோர்’, ‘பட்டியலினத்தார்’ போன்ற வரையறைகளும் உண்டாக்கிய அரசியல் மாற்றங்களின் அடிப்படையிலேயே நாம் சமூகநீதிக் கனவை முன்னகர்த்திவருகிறோம். அடிப்படையில், ஒவ்வொரு சாதியும் தனித்தனிச் சாதிதான். படையாச்சி வேறு, நாடார் வேறு, கவுண்டர் வேறு; ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற வரையறையின் கீழ் ஒன்றுபட்டு உரிமைகளுக்காகப் பாடுபடலாம் என்றாலும், பெரும் பகுதி இவர்கள் தனித்தனிச் சாதிகளாகத்தான் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். பட்டியலினச் சாதிகளிலும் இதுவே நடக்கிறது. ஏன் தனித்த அடையாளத்தைத் தக்கவைக்க நினைக்கிறார்கள் என்றால் உரிமைகளுக்காக; ஏனென்றால், அந்த அடையாளங்களின் அடிப்படையில்தானே பாதிப்பையும் உணருகிறார்கள்? ஆக, ஒருவர் அருந்ததியராக உணர்கிறார் என்றால், அதை வெறும் சாதிய உணர்வு என்று நாம் கொச்சைப்படுத்திவிட முடியாது. அவருக்கு இங்கு இருக்கக்கூடிய அழுத்தப்படும் உணர்வு, பாதுகாப்பற்றதன்மை எல்லாமும் ஒன்றாகச் சேர்ந்தே ‘நாம் இந்த அடையாளத்தோடு இருக்க வேண்டும், அதுதான் நமக்குப் பாதுகாப்பு’ என்கிற உணர்வை உருவாக்கியிருக்கிறது என்று உணர வேண்டும்.

சாதி காரணமாகச் சுடுகாட்டில் இடம் மறுக்கப்படும் ஒரு சமூகம், ‘நான் இன்ன சாதி; எங்களுக்கு சுடுகாடு இல்லை’ என்றுதானே கேட்க முடியும்? ‘நான் தமிழர் அல்லது இந்தியர்; எனக்குச் சுடுகாடு வேண்டும்’ என்றா கேட்க முடியும்? ஆக, எவர் ஒருவரின் குழு உணர்வையும், எந்த ஒரு சமூகத்தினரின் கோரிக்கையையும் ஜனநாயக அடிப்படையில்தான் நாம் பார்க்க வேண்டுமே தவிர, அதை வெறுமனே குழுவுணர்வின் வெளிப்பாடாகச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. ஆனால், இது சீக்கிரமே அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும். சித்தாந்தரீதியாக ஒருவர் ஜனநாயகத்தைப் பயின்று சமத்துவம் நோக்கி வளரும்போது அது நடக்கும். வெவ்வேறு ஏழு உபசாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்ற அடையாளத்துக்குள் வருகிறார்கள். இது சாதி ஒழிப்பு அல்ல என்றாலும், உட்சாதி ஒழிப்பு; எப்படிப் பல்வேறு உட்சாதிகளையெல்லாம் அழித்துவிட்டு ‘வன்னியர்’ என்ற அடையாளத்துக்குள் வந்தார்களோ அப்படி. அடுத்த கட்டத்தில் சாதி ஒழிப்பை நோக்கியும் அவர்கள் நகரலாம். மக்களை அந்த இடம் நோக்கி அழைத்துச்செல்ல வேண்டியது ஜனநாயக இயக்கங்களின், தலைவர்களின் பொறுப்பு. நல்ல கனவு வெல்லும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x