Published : 10 Nov 2015 10:28 AM
Last Updated : 10 Nov 2015 10:28 AM

பிஹார் தேர்தல்: நிதிஷ் வெற்றியை நிச்சயித்தவர்!

பிஹார் தேர்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இடையிலான தனிப்பட்ட போர் என்று வர்ணிக்கப்படுகிறது என்றால், அந்தத் தலைவர்களின் பிரச்சாரக் குழுத் தலைவர்களுக்கு இடையேயான போட்டியும் பெரிய அளவிலானதுதான்.

ஐக்கிய ஜனதா தளத்தின் பிரச்சார வடிவமைப்பாளர் பிரசாந்த் கிஷோரும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் 2014 மக்களவைத் தேர்தலில் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். இருவரில் ஒருவர் பெரிய அளவில் புகழ்பெற்றார். மற்றொருவரோ பிரச்சார அணியுடனான தகராறில் வெளியேறினார். ஐ.நா.வில் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், மக்களவைத் தேர்தலின்போது ‘சாய் பே சர்ச்சா’ போன்ற புதுமையான உத்திகளின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் என்று கருதப்படுகிறார். ஒரு கட்டத்தில், மோடி மற்றும் அமித் ஷாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக அந்த அணியை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிதிஷ் குமார், லாலு பிரசாத் மற்றும் காங்கிரஸின் வெற்றி தினம் இது. என்னுடைய வெற்றி தினம் அல்ல” என்று கூறினார். எனினும், இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் வெற்றி அவருக்கு முக்கியமான ஒன்று என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

“ட்விட்டரைப் பயன்படுத்தி மோடிக்குத் தூண்டில் போடுவது என்று முடிவுசெய்தோம். எனவே, முஸாஃபர் நகரில் மோடி பிரச்சாரத்துக்கு வருவதற்கு முன்னர், ட்விட்டரில் அவரிடம் நான்கு கேள்விகள் கேட்குமாறு நிதிஷ் குமாரைக் கேட்டுக்கொண்டோம். அப்படிச் செய்தால், நிச்சயம் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலிருந்து மோடி பின்வாங்க மாட்டார் என்பது எங்களுக்குத் தெரியும்” என்கிறார் பிரசாந்த் கிஷோருக்கு நெருக்கமான ஒருவர்.

எதிர்பார்த்ததுபோலவே, அந்தக் கூட்டத்தில் இந்தக் கேள்விகள் சிலவற்றுக்கான பதிலுடன்தான் தனது பேச்சைத் தொடங்கினார் மோடி. அதனால், ஏற்கெனவே தயார் செய்திருந்த தனது உரையிலிருந்து திசை மாறிவிட்டார். இது நிதிஷ் குமாருக்குப் பிரச்சாரக் களத்தில் உறுதியான இடத்தைப் பெற்றுத் தந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x