Published : 23 Nov 2015 02:23 PM
Last Updated : 23 Nov 2015 02:23 PM

ஐஎஸ் அச்சுறுத்தல்

பாகிஸ்தான் நாளிதழ்DAWN-ன் தலையங்கம்

பாகிஸ்தானில் பயங்கரவாதக் குழுக்கள் வளர்ந்து கொண்டிருக்கும் சூழலிலும், அவற்றின் விளைவுகளைப் பற்றி அலட்சியமாகவே இருக்கிறோம். பாதுகாப்பு அமைப்புகளும் இதுபற்றி அலட்டிக்கொள்வதில்லை.

பாகிஸ்தானுக்குள்ளேயே பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், அதுதொடர்பாகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிவரும். அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்துவிட்டால், எதுவும் செய்ய வேண்டியிருக்காது. பாரிஸ் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தானில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால், எதிர்பார்த்ததுபோலவே, ஐஎஸ் அமைப்பின் எந்தச் சுவடும் பாகிஸ்தானில் இல்லை என்று வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். எனினும், ஐஎஸ் அமைப்பின் கோரஸான் பிரிவு பாகிஸ்தானில் செயல்படுகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள், சிறிய அளவிலான பயங்கரவாதக் குழுக்கள் பல, ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

பாகிஸ்தானில் ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் வளர்வது, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும். கடந்த சில மாதங்களில் அதிர்ச்சியூட்டும் இரண்டு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன. முதல் தகவல், ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக கராச்சியிலிருந்து சிரியாவுக்குச் செல்ல முயன்ற சில இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம். இணையம் மூலமாக ஐஎஸ் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது எப்படி என்று அந்த இளைஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாகிஸ்தானின் படித்த இளைஞர்கள் மத்தியில் ஐஎஸ் அமைப்பு தொடர்பான ஆர்வம் வளர்ந்திருப்பதை இது காட்டுகிறது.

இரண்டாவது செய்தி, சிந்து மாகாணத்தில் செயல்படும் ஐஎஸ் அமைப்பின் வலைப்பின்னல் தொடர்பாக, காவல் துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்த தகவல். பயங்கரவாத அமைப்புகளின் தலைமுறை மாற்றங்களைப் புரிந்துகொள்வது, இந்த அச்சுறுத்தலின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும். சாதாரண பயங்கரவாதக் குழுக்கள், 1980-1990-களில் உருவான ஜிகாதி கலாச்சாரத்தின் பாதிப்பில் வளர்ந்த முதல் தலைமுறை பயங்கரவாதிகள். அவர்களுக்கென்று குறிப்பிட்ட சில தேசியவாத நோக்கங்கள் இருந்தன. இரண்டாம் தலைமுறை பயங்கரவாதக் குழுக்கள், செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், உலகளாவிய மற்றும் உள்ளூர் அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் உருவானவை.

மூன்றாவது தலைமுறை பயங்கரவாதிகளும் அரசியல் சூழல் மாற்றத்தின் விளைவாக உருவானவர்கள் என்றாலும், சித்தாந்தரீதியி லான மாற்றங்களை அவை எதிர்கொண்டன. இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பல பயங்கரவாதிகளில் பெரும்பான்மையானோர் முதல் இரண்டு தலைமுறையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எதிர்கொண்ட அனுபவங்களை எதிர்கொண்டதில்லை.

சமூகம் மற்றும் மதரீதியான மாற்றங்களுக்கு மத்தியில், மாறாத அரசியல் சூழலிலும் அந்தக் குழுக்களின் கண்ணோட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான் ஐஎஸ் அமைப்பின்மீது பெரிதும் ஈர்க்கப்படுகின்றனர். இந்த அடிப்படையில் இந்த அச்சுறுத்தலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x