Published : 30 Nov 2015 09:06 am

Updated : 30 Nov 2015 12:49 pm

 

Published : 30 Nov 2015 09:06 AM
Last Updated : 30 Nov 2015 12:49 PM

தீவிரவாதத்தை ஒழிக்க இணைந்த கரங்கள்

அமெரிக்க நாளிதழ் THE WASHINGTON TIMES-ன் தலையங்கம்

*

கடந்த சில வாரங்களாக ரஷ்யா, லெபனான், பிரான்ஸ், நைஜீரியா, மாலி உள்ளிட்ட நாடுகளில் நடந்த கொடூர தீவிரவாதத் தாக்குதல்களால் உலகம் அரண்டுபோய்க் கிடக்கிறது. நடந்த பயங்கரவாத சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பும் அல்-கொய்தாவும் பகிரங்கமாகப் பொறுப்பேற்றுள்ளன. தங்களுடைய சித்தாந்தத்துக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்களை அழித்தொழிப்போம் என்பதைத்தான் இவர்கள் தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள் ளனர். இன்று பாரிஸில் நிகழ்ந்தது நாளை வாஷிங்டனிலோ நியூயார்க்கிலோ உலகின் எந்தப் பகுதியிலும் நிகழலாம் என அச்சுறுத்தியுள்ளனர். ஆக, கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்து பொது எதிரியை அழிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்னும் நிலைக்கு இந்த அமைப்புகள் நம்மை நகர்த்தியுள்ளன. மதத் தீவிரவாதத்தை ஒழிக்க முடிவெடுத்தால், முதல் கூட்டணி ரஷ்யாவுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், கால் நூற்றாண்டாக அவர்கள் இப்படியான பல அச்சுறுத்தல்களைத் திறம்படக் கையாண்டுவருகிறார்கள். அதிலும் ரஷ்யாவின் செசன்யா தற்போது அமைதிப் பூங்காவாக வளம் கொழிக்கும் பகுதியாக விளங்குகிறது. மரபார்ந்த முஸ்லிம் மக்களைக் கொண்ட இப்பகுதி ஒருபோதும் தீவிரவாதத்துக்குத் துணைபோவதில்லை.


தீவிரவாதத்தை எதிர்க்க இன்று மேற்கும் ரஷ்யாவும் கைகோத்தாக வேண்டும். உலகப் போரின்போது நாஜிக்களை ஒன்றுகூடி எதிர்த்ததைப் போலவே இதைச் செய்தாக வேண்டும். ஏற்கெனவே, புதின் இது தொடர்பான அழைப்புகளை விடுத்திருந்தாலும் வெகுகாலமாக அமெரிக்கா செவிமடுக்காமல் இருந்தது. ஆனால், தற்போது பிரான்ஸின் அதிபர் ஹோலாந்து மாஸ்கோவுக்குச் சென்று புதினுடன் கலந்துரையாடிவருவது மாற்றத்துக்கான தொடக்கப் புள்ளி.

தீவிரவாதத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம் என போலித்தனமாகப் பறைசாற்றிவந்த பலரில் தற்போதைய சிரியா அதிபரான பஷார் அல்-ஆசாத்தும் ஒருவர். அதிகார வெறி தவிர, வேறொன்றும் அறியாதவர்தான் இவர். மத்தியக் கிழக்கில் இவருடைய சர்வாதிகார ஆட்சியால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்க ஆண்களும், பெண்களும் அடக்கம். அவருடைய நாசகார வேலைகளை ஒடுக்க அமெரிக்கக் குடிமக்களின் வரிப் பணம் தண்ணீர் போல வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய பார்வை ஒரு புறம் இருக்க, மறுபுறம் இன்று உலகளாவிய தீவிரவாதம் தலைவிரித்தாடக் காரணமே முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் போர் நடவடிக்கைகள்தான் எனச் சொல்லும் பலர் உள்ளனர். அமெரிக்காவின் உற்ற தோழரான பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கூட இதைத்தான் சொல்லியிருக்கிறார்.

எதுவாக இருந்தாலும் தற்போது நம்மை நடுநடுங்கச் செய்யும் பூதாகாரமான பிரச்சினை தீவிரவாதம். அதற்கு தீவிரவாதத்தை ஒழிப்போம் எனச் சொல்லிக் கொண்டு போலித்தனமாக செயல்படுபவர்களை நம்பி பிரயோஜனமில்லை. முதல் கட்டமாக, ரஷ்யாவுடன் கைகோத்தமைக்கு பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தேவை அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டி தன்னுடைய ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். அடுத்து, இதேபோல கொள்கை உறுதியோடு இருக்கும் பிற நாடுகளையும் ஒன்றிணைக்க வேண்டும்.


தீவிரவாதம்ஐ.எஸ்.அல் கொய்தா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x