Published : 21 Mar 2021 03:14 am

Updated : 21 Mar 2021 05:52 am

 

Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 05:52 AM

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?- மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர்

need-of-tn

நகர்க் கட்டுமானம்: ஒரு நகரத்தைச் சாலைகளும் ரயில் தடங்களும் பாலங்களும் இணைக்கின்றன. தொழிற்சாலைகளும் அலுவலகங்களும் வேலைவாய்ப்பை நல்குகின்றன. வீடுகளும் கல்விச் சாலைகளும் மருத்துவமனைகளும் இந்த நகரத்தை வாழத் தகுதியாக்குகின்றன. குடிநீர் வழங்கல், கழிவுநீர் - மழைநீர் அகற்றல், மின்சாரம், தொலைத் தொடர்பு முதலான சேவைகள் வாழ்க்கையை இலகுவாக்குகின்றன. கட்டிடவியலும் பொறியியலும் பொருளாதாரமும் இந்த நகர்க் கட்டுமானத்துக்கு அவசியமான கூறுகள். ஆனால், அவற்றைவிட முக்கியமானது மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசியல் தலைமையும் நீண்ட காலத் திட்டங்களும்.

வீடுகள்: தமிழக நகரங்களைத் தரம் பிரித்து மக்கள் தொகைக்கேற்ப அடுத்த 50 ஆண்டுகளுக்கான வாழ்விடத் தேவைகளை மதிப்பிட வேண்டும். அதற்கேற்பப் புதிய வீடுகளைத் தொடர்ந்து கட்ட வேண்டும். தமிழகத்தின் பல நகரங்களில் புதிய கட்டுமானத்தின் பரப்பு, மனையின் பரப்பைப் போல் ஒன்றரை மடங்குதான் இருக்கலாம். இதற்கு தளப் பரப்பளவுக் குறியீடு (FSI) என்று பெயர். எடுத்துக்காட்டாக, ஒரு கிரவுண்ட் என்பது 2,400 சதுர அடிகளைக் கொண்டது. இந்த மனையில் இதைப் போல அதிகபட்சமாக ஒன்றரை மடங்குப் பரப்பில் வீடு கட்டிக்கொள்ளலாம். அதாவது 3,600 சதுர அடி. நகரத்தின் வளர்ச்சியைக் கணக்கில் கொண்டு இந்தக் குறியீட்டை உயர்த்த வேண்டும். வீடுகளின் பெருக்கத்திற்கு இணையாகக் குடிநீர், கழிவுநீர் முதலான திட்டங்களும் விரிவுபடுத்த வேண்டும். இது அடுக்குமாடிக் கட்டிடங்களை ஊக்குவிக்கும். இதனால் வீடுகளின் விலை குறையும். நடுத்தர வர்க்கத்தினருக்கும் வறியவர்களுக்கும் அரசின் வீட்டு வசதித் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் முறைசாராத் தொழிலாளர்களுக்கும் சேமநல நிதியைக் கட்டாயமாக்கி, அதிலிருந்து குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம்.


அடுக்கக விதிகள்: அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கான ஒப்புதல்கள் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது நகராட்சிகளால் வழங்கப்படுகின்றன. இந்த ஒப்புதல் கட்டிடக்கலை வரைபடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மனை அமைந்திருக்கும் சாலையின் அகலம், கட்டிடத்தைச் சுற்றிலும் உள்ள இடைவெளிகள், எஃப்.எஸ்.ஐ. முதலானவை மட்டுமே பரிசீலிக்கப்படுகின்றன. கட்டிடத்தின் பொறியியல் வரைபடங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மேலும் பேராசைக்கார ரியல் எஸ்டேட்காரர்கள் தரங்குறைந்த கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவதையோ, விதிகளை மீறுவதையோ கண்காணிப்பதற்கு அரசிடம் போதுமான அமைப்புகள் இல்லை. பொறியியல் வரைபடங்களையும் கணக்கீடுகளையும் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். மேலும் அரசு, கட்டிடவியல் கலைஞர்களையும் கட்டுமானப் பொறியாளர்களையும் தேர்வு நடத்தி அங்கீகரித்து அவர்களை அடுக்ககங்களை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கலாம்.

நகரின் புலப்படங்கள்: எல்லா நகரங்களின் வரைபடங்களும் கணினி மயப்படுத்தப்பட வேண்டும். புல எண்கள், உரிமையாளரின் பெயர்கள், புறம்போக்கு நிலங்கள், நீர்ப்பிடிப்புப் பகுதிகள், வெள்ளச் சமவெளிகள் போன்றவை குறிப்பிடப்பட்டு, அவை பொதுவெளியில் காணக் கூடியதாக இருக்க வேண்டும்.

போக்குவரத்துத் துறை: தற்சமயம் ஒரு நகரத்திலுள்ள சாலைகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை, மாநில நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி/ ஊராட்சி ஆகிய மூன்று அமைப்புகளின் கீழ் வருகின்றன. மின்சார ரயில், பறக்கும் ரயில் ஆகியவை ரயில்வே அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. பேருந்துகள் போக்குவரத்துக் கழகங்களின் கீழ் வருகின்றன. ஒவ்வொரு நகரின் போக்குவரத்து தொடர்பான அனைத்துத் திட்டமிடலையும் பராமரிப்பையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும். இதன் பயன்பாட்டை உணர்ந்த அரசியல் தலைமையால் இந்தத் துறைகளை எல்லாம் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர முடியும்.

நடைபாதை: நமது நடைபாதைகள் அகலக் குறைவானவை. ஆக்கிரமிப்புகள் நிறைந்தவை. மின்மாற்றிகளும் மின்கம்பங்களும் அமைந்திருப்பவை. ஒவ்வொரு வீட்டின், கடையின் வாசற்படிகளுக்கும் சரிவுப் பாதைகளுக்கும் இடம் தருபவை. இதனால் நடைபாதைகள் நடப்பதற்கு உகந்தவையாக இருப்பதில்லை. மேலும், சாலையோரங்கள் கார் தரிப்பிடங்களாக மாறிவிட்டதால், பாதசாரிகள் சாலையின் மையத்தில் நடக்க வேண்டியிருக்கிறது. சாலைகளில் கார் நிறுத்துவதைத் தடை செய்ய வேண்டும். அகலமான, தொடர்ச்சியான நடைபாதைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில்: டெல்லி மெட்ரோவின் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டவை கொல்கத்தா, சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மெட்ரோ ரயில் பணிகள். இவை முதல் கட்ட நகரங்கள் எனப்படும். தொடர்ந்து நாடெங்கிலும் பல இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் கட்டுமானங்கள் நடந்துவருகின்றன. அவை ஜெய்ப்பூர், கொச்சி, அகமதாபாத், லக்னோ, கான்பூர் முதலிய நகரங்கள். கோவையும், மதுரையும், திருச்சியும் இவற்றோடு ஒப்பிடத்தக்க நகரங்கள். இங்கெல்லாம் மெட்ரோ ரயில் பணிகளை நிறைவேற்றினால், அவை சாலை நெரிசலைக் குறைக்கும்.

மழைநீர் வடிகால்: ஒவ்வொரு நகரின் மழையளவு குறித்தும் விரிவாக ஆராய்ந்து, இப்போதைய சாலையோர வடிகால்களின் கொள்ளளவு பரிசோதிக்கப்பட்டு, அவை மேம்படுத்தப்பட வேண்டும். பிரதான வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும். ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள், ஆற்றுப் படுகைகள் - இங்கெல்லாம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளைச் சட்டரீதியாக அகற்ற வேண்டும். மேலும், நீர்வழிப் பாதையில் கழிவுநீர் கலப்பதையும், திடக்கழிவுகள், குப்பைக் கூளங்கள் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும்.


மு.இராமனாதன் பொறியாளர் எழுத்தாளர்என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?Need of TN

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x