Published : 19 Mar 2021 03:14 AM
Last Updated : 19 Mar 2021 03:14 AM

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?- இரா.திருமலை, அனைத்திந்திய பொதுச் செயலாளர், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்

வேலையில்லாதோர் விவரங்களை வெளியிட வேண்டும்: வேலை இல்லாதவர்கள் பற்றிய விவர அறிக்கைகளை எந்த அரசுமே வெளியிடுவதில்லை. ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்பதற்கு வேலையின்மை முற்றிலும் இல்லை என்றே எல்லாக் கட்சிகளும் காட்டிக்கொள்ள விரும்புகின்றன. எனவே, திட்டமிட்டே இந்த விவரங்கள் வெளியிடப்படுவது தவிர்க்கப்படுகிறது அல்லது குறைத்துக் காட்டுகிறார்கள். ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வேலையின்றிக் காத்திருப்பவர்களின் விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட வேண்டும். அலுவலகங்களில் பதிவுசெய்யாமல் வேலைக்குக் காத்திருப்பவர்கள், பகுதிநேர அல்லது தற்காலிக வேலை பார்ப்பவர்கள் என்று அனைத்துத் தரப்பினர்களின் விவரங்களையும் திரட்டி வெளியிட வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்பின்மைக்கான காரணங்களையும் தீர்வுகளையும் குறித்து விவாதிக்கவும் முடிவெடுக்கவும் முடியும்.

வேளாண் துறை வாய்ப்புகளை வளர்த்தெடுக்க வேண்டும்: வேளாண் துறை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது வேலையின்மைக்கான முக்கியமான காரணிகளில் ஒன்று. சிறு குறு தொழில்களும் தற்போது பெருமளவில் பாதிக்கப்பட்டு, வேலையின்மை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், வேளாண் துறையில் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்.

அரசுக் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: அரசு மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மிகவும் அடிப்படையான பள்ளிக் கல்வித் துறையில்கூட ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அதிகரித்துவருவது வேலைவாய்ப்பின்மை பிரச்சினையாக மட்டுமின்றி, கல்வியின் தரத்தைப் பாதிக்கக்கூடிய அபாயத்தையும் கொண்டிருக்கிறது. மின் வாரியத் துறை, காவல் துறை ஆகியவற்றில் உள்ள காலிப் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

அரசு வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மை: அரசு மற்றும் அரசு நடத்தும் நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படைத் தன்மையைப் பின்பற்றுவது ஒன்றே தகுதியானவர்களுக்கு வேலைகள் கிடைப்பதற்கான சூழலை உறுதிப்படுத்தும். உரிய கல்வித் தகுதி கொண்டவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடுவதும் அரசியல் செல்வாக்கு கொண்டவர்கள் அவற்றை எளிதாகக் கைப்பற்றுவதும் ஒருபோதும் கூடாது. பணி நியமனங்களின் எல்லா நிலைகளிலும் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

தொகுப்பூதிய முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சுகாதாரத் துறையின் செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் உள்ளிட்ட முக்கியமான பணிகளுக்குக்கூட தொகுப்பூதிய முறையில் பணிநியமனம் செய்வதும் உரிய கால அளவுக்குள் அவர்களை நிரந்தரப்படுத்துவதும் இல்லை. அரசே இப்படியொரு உழைப்புச் சுரண்டலுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடாது.

ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கக் கூடாது: ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்குப் பணிக்காலத்தை நீட்டிக்கும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். ஒருபக்கம் ஓய்வுபெறும் வயதை நீட்டித்துக்கொண்டிருக்கையில், இன்னொருபக்கம் லட்சக்கணக்கான இளைஞர்கள் அத்தகைய வேலைவாய்ப்புகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பணிநீட்டிப்புக்குப் பதிலாக புதிய நியமனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு எட்டு மணி நேர வேலை: சுகாதாரம், காவல், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து 12 மணி நேரம் வரையிலும் பணியாற்ற வேண்டியிருக்கிறது. காலிப் பணியிடங்களை நிரப்பாமல் ஏற்கெனவே பணியாற்றுபவர்களின் மீது பணிச் சுமையைத் தொடர்ந்து ஏற்றிவைப்பது சட்டப்படி உறுதிசெய்யப்பட்டுள்ள எட்டு மணி நேர வேலை என்ற தொழிலாளர் நல உரிமைக்கே எதிரானது. தனியார் துறைகளிலும் இந்தப் பணி நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

வேலை இல்லாதவர்களுக்கு வாழ்வூதியம் வேண்டும்: கல்வித் தகுதியைப் பெற்றதிலிருந்து வேலை கிடைக்கும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு இளைஞருக்கும் அவரது குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான வாழ்வூதியம் வழங்கப்பட வேண்டும். மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ள இத்திட்டத்தை நாமும் பின்பற்ற வேண்டும்.

உள்ளூர் இளைஞர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பு: அனைத்து வேலைவாய்ப்புகளிலும் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பெரும்பாலான மாநிலங்கள் வேலைவாய்ப்புகளில் 75% வரையில் உள்ளூர் மற்றும் சொந்த மாநில மக்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துவருகின்றன. வேலைவாய்ப்பின்மை தீவிரமடைந்துள்ள தமிழகத்திலும் இந்த ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆலோசிக்க வேண்டும்.

அரசு வேலையில் இல்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை: அரசு வேலை என்பது வெறும் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அது சமூகரீதியில் அதிகாரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. எனவே, இதுவரை அரசு வேலையில் இல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x