Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

என்ன வேண்டும் தமிழ்நாட்டுக்கு?- ப.ஜெகநாதன், சூழலியர், பறவையியலாளர்

பருவநிலை நெருக்கடிநிலை: முதலில் பருவநிலை மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான காரணங்கள் பற்றியும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் புரிதல் ஏற்பட வேண்டும். அதன் பிறகு வளர்ச்சி எனும் பெயரில் எடுக்கப்படும் ஒவ்வொரு செயல்திட்டத்திலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும். பருவநிலை நெருக்கடிநிலையைப் பிரகடனம் செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், இயற்கைக்கு இணக்கமான வளங்குன்றாத வளர்ச்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும். நிலையான, உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு சீரழிக்கப்படாத சுற்றுச்சூழல்தான் முக்கிய முதலீடு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நிலம், நீர், காற்று மாசு: நிலத்தைப் பாழ்படுத்தும் எந்த வகையான செயல்திட்டங்களையும் ஊக்கப்படுத்தக் கூடாது. இயற்கை விவசாயத்துக்கு மானியங்களும் கடனுதவிகளும் தாராளமாகத் தந்துதவி ஊக்குவிக்க வேண்டும். திடப்பொருள் கழிவு மேலாண்மையில் (குறிப்பாக மருத்துவக் கழிவு, பிளாஸ்டிக் கழிவு) சரியான திட்டமிடல் வேண்டும். தொழிற்சாலைக் கழிவுகள், சாயக் கழிவுகள் போன்றவற்றை ஆறு, குளங்கள், கடல் முதலான நீர்நிலைகளில் கலப்பதைக் குறைக்கவும் தடுக்கவும் வேண்டும். காற்று மாசைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

இயற்கையான வாழிடங்களின் பாதுகாப்பு: இயற்கையான வாழிடங்கள் மென்மேலும் ஆக்கிரமிக்கப்படாமலும், அயல் தாவரங்களால் பாதிப்படையாமலும் பாதுகாக்கப்பட வேண்டும். வெட்டவெளிகளைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வாழிடங்களில் சீரழிந்த பகுதிகளை அங்குள்ள தாவரங்களை மட்டும் வைத்து வளர்த்து, அறிவியல்பூர்வமாக மீளமைத்தலும் முக்கியம் என்பதை அறிய வேண்டும். யூக்கலிப்டஸ் போன்ற ஓரினத் தாவரங்கள் காடுகள் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும்.

வனத் துறை மேம்பாடு: வனத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் (சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள்) வேட்டைத் தடுப்புக் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்லாத வனத் துறையின் கீழ் உள்ள இடங்களிலும் இது போன்ற வேட்டைத் தடுப்புக் காவலர்களைப் பணியில் அமர்த்தி, அவர்களுக்குச் சரியான நேரத்தில் ஊதியத்தை அளிப்பதோடு, ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடுகளையும் அளிக்க வேண்டும். வனப் பாதுகாப்பு, காட்டுயிர் பாதுகாப்புச் சட்டங்களைத் தளர்த்தவோ, நீர்த்துப்போகவோ செய்யாமல் கடுமையாக்கவும், தேவையான இடங்களில் விரிவாக்கவும் வேண்டும். காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களையும் காட்டுயிர் மருத்துவர்களையும் எல்லாப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் நிரந்தரப் பணியில் அமர்த்தி அவர்களின் ஊதியத்தையும் சீரமைக்க வேண்டும்.

மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல்: மாறிவரும் பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க, இயற்கை வளங்களைக் குன்ற வைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் காரணங்களால் மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மென்மேலும் அதிகரிக்கிறது. இதனால் மனித உயிரிழப்பும், விலங்குகள் உயிரிழப்பும், வாழிட இழப்பும் ஏற்படுகின்றன. மனித-காட்டுயிர் எதிர்கொள்ளலைச் சமாளிக்க வனத் துறையுடன், வருவாய்த் துறை, காவல் துறை போன்ற துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியேயும் தென்படும் காட்டுயிர்களால் (குறிப்பாக மயில்) சேதம் அதிக அளவில் இருப்பின் அதை உறுதிசெய்த பிறகு, அங்கும் அரசு இழப்பீடு அளிக்கும் திட்டத்தை ஏற்படுத்துதல் அவசியம். காட்டுயிர்களின் உயிருக்கு ஆபத்தில்லாத பயிர்களைப் பாதுகாக்கும் முறைகளைக் கண்டறிந்து அந்த முயற்சிகளை அதிகப்படுத்த வேண்டும்.

விலங்குவழி நோய்த்தொற்றுப் பரவல் மேலாண்மை: எதிர்காலத்தில் விலங்குவழி பெருந்தொற்றின் தீமைகளைக் குறைக்க ‘ஒரே நலவாழ்வுக் கோட்பாட்’டை நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நல்வாழ்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் நிலவமைப்பு, சுற்றுச்சூழல், அதிலுள்ள காட்டுயிர்கள் ஆகிய எல்லாவற்றின் நலனையும் கருத்தில் கொண்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். விலங்குவழித் தொற்றுக்குக் காரணமான காட்டுயிர் கள்ளச் சந்தை, காட்டுயிர் வேட்டை போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். விலங்குவழி நோய்த்தொற்றுப் பரவல், மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக் கூடங்களை உருவாக்க வேண்டும்.

இயற்கைக் கல்வி: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தாக்கங்கள் கொண்ட பாடத்திட்டத்தைப் பள்ளிகள், கல்லூரிகள் என எல்லாத் தளத்திலும் விரிவாக்க வேண்டும். பொதுமக்களுக்கும் இந்த கருத்தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அழிவின் விளிம்பில் இருக்கும் வாழிடங்கள், காட்டுயிர்கள் பாதுகாப்பு: யானை, புலி முதலான பேருயிர்கள் மட்டுமல்லாது, அதிகம் அறியப்படாத உயிரினங்களின் (எடுத்துக்காட்டாக அலங்கு, வௌவால் வகைகள் போன்றவை) பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். பாறு கழுகுகள் போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் பறவைகளைப் பாதுகாக்க நெடுங்காலத் திட்டங்களைத் தொடங்க வேண்டும். வனத் துறையால் பாதுகாக்கப்படாத பகுதிகளில் உள்ள புதர்க் காடுகள், வெட்டவெளிப் புல்வெளிகள், கடலோரப் பகுதிகள் முதலான வெகுவாக அழிக்கப்பட்டுவரும் வாழிடங்களையும், அங்குள்ள உயிரினங்களையும் பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x