Published : 11 Mar 2021 03:12 am

Updated : 11 Mar 2021 06:27 am

 

Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 06:27 AM

உணவு விரயமும் ஒரு சமூக அநீதிதான்!

food-wastage

உணவை விரயமாக்குவது தமிழகத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல; உலகம் முழுவதிலும் நடக்கும் சமூக அநீதி! எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் உணவுக்கான பொருளை விளைவித்துத் தரும் விவசாயிக்குச் செய்யப்படும் அவமரியாதை. உணவு என்பது ஜடமல்ல... அது ஓர் உயிர்ப் பொருள். உலகில் சுமார் 70 கோடி மக்கள் இரவில் உணவு கிடைக்காமல் பசித்த வயிற்றோடு தினமும் உறங்கச் செல்கின்ற சோகமான நிலைமை ஒருபுறம் என்றால், உணவின் மொத்த உற்பத்தியில் சுமார் 20% உணவு விரயமாகிறது என்கிறது ஐநாவின் ‘உணவு விரயக் குறியீடு 2021’ ஆய்வறிக்கை.

54 நாடுகளில் மேற்கொண்ட அந்த ஆய்வின்படி, உலக அளவில் 2019-ல் 9.31 கோடி டன் அளவில் உணவுகள் விரயம் செய்யப்பட்டுள்ளன. இதில் 61% வீடுகளிலிருந்தும், 26% உணவு விடுதிகளிலிருந்தும் 13% சில்லறை விற்பனையிலிருந்தும் விரயமாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வீடுகளில் 2019-ல் மட்டும் 6.80 கோடி டன் அளவில் உணவு விரயம் செய்யப்பட்டுள்ளது. உலகில் உணவை நுகரும் வாய்ப்புள்ள ஒரு தனிநபர் வருடத்துக்கு 74 கிலோ உணவை வீட்டிலிருந்தும், 47 கிலோ உணவைத் திருவிழாக்கள், உணவகங்கள், திருமண நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறப்படும் உணவிலிருந்தும் விரயம் செய்யப்படுவதாக அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.


என்ன விளைவுகள் ஏற்படும்?

‘உணவு விரயம்’ என்பது உணவுத் தட்டோடும் சாப்பிட்ட இலையோடும் முடிந்துவிடும் சமாச்சாரம் என்றுதான் அநேகரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார அறிவியல், உணவை விரயம் செய்வதை மனிதன் செய்யும் மிகப் பெரிய சமூகக் குற்றம் என்கிறது. காரணம், நிலத்திலிருந்து உணவுப் பொருள்கள் உற்பத்தியாகி, ஓர் எரிபொருள் மூலம் உணவாக உருவெடுத்து, தகுந்த பாதுகாப்பு, பகிர்வு எனப் பல கட்டங்களைக் கடந்து உணவுத் தட்டுக்கு வருவதற்கு ஆகும் செலவு உணவை விரயமாக்குதல் வழியாகப் பல மடங்கு அதிகரிக்கிறது. அது அந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது.

மேலும், அது சுற்றுச்சூழலுடனும் பிணைந்துள்ளது என்கிறது. எப்படி? மிச்சமான உணவு, கெட்டுப்போன உணவு என நுகர்வோரால் பல வழிகளில் விரயம் செய்யப்படும் உணவு மறுபடியும் மண்ணுக்குத்தான் வருகிறது. அங்கு அது ‘மீத்தேன்’ எனும் பசுங்குடில் வாயுவை அபரிமிதமாக வெளிவிடுகிறது. புவியின் வெப்பநிலை அதிகரிக்க அதுவும் ஒரு காரணமாகிறது. அது பருவநிலை மாற்றத்துக்குத் துணைபோகிறது.

தற்போதெல்லாம் மழைக்காலப் பருவங்கள் மாறுவதற்கும், இயல்புக்கு மீறி கோடைகாலம் நீடிப்பதற்கும், கடுங்குளிர் நம்மை வாட்டியெடுப்பதற்கும் பெரும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதற்கும் திடீர் திடீரெனப் புதிய நோய்த் தொற்றுகள் உருவாவதற்கும் உணவு விரயமும் ஒரு காரணம்தான் என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவார்கள்? சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் உணவு விரயத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமல்லவா?

தேவை மறுசுழற்சி

‘பிடிக்கும் உணவு’ என்பதற்காக எல்லாவற்றையும் வாங்கி எல்லாவற்றிலும் கொஞ்சம் மிச்சம் வைப்பதற்கு மாற்றாக, தேவைக்கு வாங்கி, தேவைக்குச் சாப்பிட்டு, அப்படியும் மிச்சம் இருந்தால் குப்பைத் தொட்டிக்குள் வீசாமல், உணவு தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்துப் பழகும் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ பண்பை வளர்த்துக்கொள்வது உணவு விரயமாவதைத் தடுப்பதற்கான முதல் படி. அதை இன்றே நாம் சிரமேற்கொள்ளலாமே!

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில், விரயம் செய்யப்படும் உணவை மண்ணுக்குப் போகவிடாமல் தடுத்தும் அதை முறைப்படி சேகரித்தும் மறுசுழற்சி மூலம் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உதவும் உணவாகவோ, அது பிறந்த மண்ணுக்கே உதவும் இயற்கை உரமாகவோ மாற்றிவிட முடியும். அதற்கும் வழி செய்வோமே! அடுத்ததாக, மண்ணில் மடியும் விரய உணவிலிருந்து பலதரப்பட்ட பாக்டீரியாக்கள் வெளியிடும் மீத்தேன், அசிடேட் உள்ளிட்ட நச்சுக்களை நவீனத் தொழில்நுட்ப இயந்திரங்களில் புகுத்தி, நமக்குப் பயன்படும் சமையல் எரிவாயுவாக மாற்ற முடியும். அந்த மாற்றத்தையும் நாம் காணலாம்தானே!

முன்னுதாரண தென்ஆப்பிரிக்கா

விரயம் செய்யப்படும் உணவைத் தடுப்பதிலும் அதை மறுபடியும் பயன்படுத்துவதிலும் முன்னெடுப்புகளுக்கு முகம் கொடுக்கும் உலக நாடுகளில் டென்மார்க்கும் நெதர்லாந்தும் முன்னிலை வகிக்கின்றன. இந்த நாடுகளில் உணவுப் பாதுகாப்புத் துறையானது சமூக நிகழ்வுகளில் உணவு விரயம் செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாகக் கண்காணிப்புப் படைகளை அமைத்துள்ளன. விரயமான உணவை மறுபடியும் உதவும் உணவாக மாற்றும் முயற்சியில் தற்போது தென்ஆப்பிரிக்காவும் இறங்கியுள்ளது.

எப்படியெனில், விரயம் செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களில் ‘பிஎஸ்எஃப்’ (Black Soldier Fly – BSF) பூச்சியின லார்வாக்கள் அபரிமிதமாக வளர்கின்றன. இவை அந்த உணவுக் கழிவுகளில் வினைபுரிந்து, அவற்றைப் புரதம் நிறைந்த உணவாக மாற்றியமைத்துவிடுகின்றன. இந்தப் புதிய உணவு கோழி வளர்ப்புக்கும் மீன் வளர்ப்புக்கும் பயன்படுகிறது. இதன் அடிப்படையில், சிறு தொழில்களைத் தென்ஆப்பிரிக்கா அதிக எண்ணிக்கையில் தொடங்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை உலகில் மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று ஐநாவின் உணவுக் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் திட்டத் தலைவர் மார்ட்டினோ ஆட்டோ கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவும் இதைப் பின்பற்ற வேண்டும். இப்படிச் சமூகமும் அரசும் கைகோத்தால் விரயமாகும் உணவுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்; மிச்சமுள்ள உணவைக் குப்பையில் கொட்டாமல் பயனுள்ள உணவாக மாற்றிச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவலாம்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com


உணவு விரயம்Food wastage

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x