Last Updated : 12 Nov, 2015 08:53 AM

 

Published : 12 Nov 2015 08:53 AM
Last Updated : 12 Nov 2015 08:53 AM

எங்கே இன்னொரு பூமி?- பச்சை நிற மனிதர்கள்!

பூமியில் மட்டும் உயிரினங்கள் இருப்பதற்கு இங்கு உள்ள விசேஷத் தன்மையே காரணம்

1938 அக்டோபர் 30. ஞாயிற்றுக்கிழமை. இரவு சுமார் 8 மணி. அமெரிக்காவின் என்.பி.சி. ரேடியோவில் ஒரு பிரபல நிகழ்ச்சி. அதைக் கேட்டு முடித்தவர்கள் அடுத்ததாக சி.பி.எஸ். ரேடியோவின் நிகழ்ச்சிக்கு மாறுகின்றனர். அதில் ஏற்கெனவே நிகழ்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. அந்த அலைவரிசையில் செய்தி அறிவிப்புகள்போல அடுத்தடுத்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டிருந்தன.

“செவ்வாய் கிரகவாசிகள் நியூயார்க்கில் இறங்கி தாக்குதல் நடத்துகின்றனர். விஷப் புகையை வீசி மக்களைக் கொன்றுகொண்டிருக்கின்றனர். 7,000 ராணுவப் படையினர் இதுவரை மடிந்துவிட்டனர். சிகாகோ, செயின்ட் லூயி உட்பட பல நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன...” மேலும் சிறிது நேரம் இப்படியாக அறிவிப்புகள் வெளியாகின்றன.

இதைக் கேட்டவர்கள் நிஜமாகவே செவ்வாய் கிரகவாசிகள் பூமி மீது படையெடுத்துவிட்டதாக நினைத்து, அலறியடித்துக்கொண்டு பதுங்குமிடங்களை நோக்கி ஓடினர். கார் ரேடியோவில் இந்த அறிவிப்புகளைக் கேட்டவர்கள் ஆங்காங்கு கார்களை நிறுத்திவிட்டு, எங்காவது பதுங்குவதற்கு ஓடினர். பல நகரங்களில் ஒரே பீதி.

வருத்தம் தெரிவித்த வெல்ஸ்

சில நிமிடங்களுக்குப் பின்னர்தான் இது ஒரு ரேடியோ நாடகத்தின் எடுப்பான ஆரம்பம் என்று அவர்களுக்குப் புரிகிறது. மெதுவாக, ஆங்காங்கு சகஜ நிலை திரும்புகிறது. செவ்வாயிலிருந்து பூமி மீது படையெடுப்பு நடப்பதுபோல இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர் எச்.ஜி.வெல்ஸ் 1897-ல் ஒரு கதை எழுதினார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்சன் வெல்ஸ் அந்தக் கதையைத்தான் ரேடியோ நாடகமாக்கியிருந்தார். அதன் தொடக்கம் செய்தி அறிவிப்புகள் பாணியில் இருந்தது. அதன் விளைவாகத்தான் பெரும் பீதி ஏற்பட்டது. இதனால் பலரும் பலவித இன்னல்களுக்கு உள்ளானார்கள். ஆர்சன் வெல்ஸ் பின்னர் இதுகுறித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களைக் காட்டியது. செவ்வாய் கிரகத்தில் யாரோ இருக்கிறார்கள் என்று மக்கள் கருதினர். செவ்வாய் கிரகவாசி களால் பூமி மீது படையெடுக்க முடியும் என்று அவர்கள் நம்பினர். அதன் விளைவாகவே ரேடியோ நாடகத்தில் வெளியான அறிவிப்புகளை அவர்கள் நிஜம் என நம்பினார்கள்.

பச்சை நிறமனிதர்கள்

கிட்டத்தட்ட சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வெள்ளி, செவ்வாய், சந்திரன் அல்லாமல் கற்பனையான கிரகங்களில் நிகழ்வதாகக் கூறும் நாவல்களும், திரைப் படங்களும் நிறையவே வந்தன. இவற்றில் பலவும் பூமியின் மீது வேற்றுலகவாசிகள் படையெடுப்பதுபோல் அமைந்திருந்தன. எனவே, பூமியின் மீது வேற்றுலகவாசிகள் ஒரு வேளை படையெடுத்துத் தாக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவில் பலரும் நினைக்க ஆரம்பித்தனர்.

செவ்வாய் கிரகத்தில் பச்சை நிற மனிதர்கள் இருப்பதாகவும் ஓர் எண்ணம் ஏற்பட்டது... அது எப்படி?

டார்ஸான் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. டார்ஸான் படக் கதை, டார்ஸான் காமிக்ஸ் (படக்கதைப் புத்தகம்) டார்ஸான் சினிமா என நிறையவே உண்டு. டார்ஸான் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் அமெரிக்காவைச் சேர்ந்த எட்கார் ரைஸ்பரோ ஆவார். ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தில் சேர முடியாமல் போன பின், அவர் ஏதேதோ வேலையில் சேர்ந்து பின்னர் எழுத்தாளரானார்.

ரைஸ்பரோவின் முதல் நாவலே செவ்வாய் கிரகத்தைப் பற்றியதுதான். ‘செவ்வாய் கிரகத்தின் சந்திரன்கள்’என்பது அதன் தலைப்பு. முதலில் அது ஒரு வார சஞ்சிகையில் தொடராக வந்தது. பின்னர் அது, ‘செவ்வாயின் இளவரசி’என்ற தலைப்பில் புத்தகமாக வந்தது. செவ்வாய் கிரகத்தை மையமாக வைத்து மட்டும் அவர் சுமார் 10 புத்தகங்களை எழுதினார்.

செவ்வாய் பற்றிய தமது முதல் நாவலில் ரைஸ்பரோ செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் இருப்பதாகவும் அவர்கள் பச்சை நிறத்தில் இருப்பதாகவும் வருணிப்பார். காலப்போக்கில் செவ்வாய் பற்றிய திரைப் படங்களிலும் செவ்வாய் ‘மனிதர்கள்’ பச்சை நிறத்தில் காட்டப்பட்டனர். படக் கதைகள் மற்றும் சினிமாப் படங்களின் விளைவாக செவ்வாயில் மனிதர்கள் இருக்கின்றனர் என்றும் அவர்கள் பச்சை நிறத்தவர் என்றும் மேற்கத்திய நாடுகளில் மக்களிடையே ஆழ்ந்த கருத்து வேரூன்றியது.

ஹெர்ஷலும் லுனாரியன்ஸும்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் விஞ்ஞானிகளில் சிலரும் வேறு கிரகங்களில் மனிதனைப் போன்றவர்கள் இருக்கலாம் என்று நம்பினார்கள். சிலர் அக்கருத்தை பகிரங்கமாக வெளியிட்டனர். சிலர் அக்கருத்துகளை வெளியிடத் தயங்கினர். அப்படியான விஞ்ஞானிகளில் ஒருவர் சர் வில்லியம் ஹெர்ஷல் ( 1738-1822) ஹெர்ஷல் மாபெரும் விஞ்ஞானிகளில் ஒருவர். டெலஸ்கோப் மூலம் யுரேனஸ் கிரகத்தைக் கண்டுபிடித்தவர். ஹெர்ஷல் சொந்தமாகப் பல டெலஸ்கோப்புகளை உருவாக்கியவர். அவர் வடிவமைத்த டெலஸ்கோப் ஒன்று அக்காலகட்டத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தது. கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தமது டெலஸ்கோப் மூலம் ஆராய்ந்த அவர் சந்திரனையும் ஆராய்ந்தார்.

சந்திரனில் வட்ட வடிவிலான சிறிய டவுன்கள் உள்ளதாகவும் அவற்றில் மக்கள் இருப்பதாகவும் அவர் கருதினார். ஹெர்ஷல் அவர்களை லுனாரியன்ஸ் என்று வர்ணித்தார். அவர் சந்திரனோடு நிறுத்திக்கொள்ளவில்லை. சூரியனிலும் மனிதர்களைப் போன்றவர்கள் இருக்கலாம் என்று நம்பினார். ஆனால், வேற்றுலகவாசிகள் பற்றிய தமது கருத்துகளை ஹெர்ஷல் தமது குறிப்புகளில் எழுதி வைத்தாரே தவிர, பகிரங்கமாக அறிவிக்கவில்லை. பின்னர்தான் அவை தெரியவந்தன.

சந்திரனும் வால்வெர்க் நகரும்

சமகாலத்தவரான ஜெர்மன் வானவியல் விஞ்ஞானி குருய்தூசியன் தமது டெலஸ்கோப் மூலம் சந்திரனை ஆராய்ந்தபோது, சந்திரனில் ஓரிடத்தில் கட்டிடங்களும் தெருக்களும் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அந்த நகருக்கு அவர் வால்வெர்க் என்று பெயரிட்டார். வெள்ளிக் கிரகத்தையும் ஆராய்ந்த அவர் அக்கிரகம் சூரியனுக்குச் சற்று அருகில் இருப்பதால் பூமியில் பிரேசில் நாட்டில் இருப்பதைக் காட்டிலும் வெள்ளியில் மிக அடர்ந்த காடுகள் இருந்தாக வேண்டும் என்றார். அவரது கருத்துகள் அடங்கிய நூல் 1824-ல் வெளியானது.

இவர்களுக்கு முன்னதாக வாழ்ந்த பிரெஞ்சு விஞ்ஞானி போண்டெனெல்லி 1486-ல் எழுது ம்போது வெள்ளிக் கிரகத்தில் வாழும் வேற்றுலகவாசிகள் கருப்பு நிறத்தவர்களாக இருப்பர் என்றார். அவர்கள் இசையிலும் கவிதையிலும் அதிக நாட்டம் உள்ளவர்களாக இருப்பர் என்றும் அவர் கூறினார். இத்தாலியைச் சேர்ந்த நிக்கோலஸ் குசானஸ் 1439-ல் எழுதும்போது சூரியனில் வசிப்போர் அதி புத்திசாலிகளாக இருப்பர் என்றார். சந்திரனில் இருப்பவர்கள் மரை கழன்றவர்களாக இருப்பர் என்று குறிப்பிட்டார். இவை எல்லாமே அறிவியல் ஆராய்ச்சி என்ற அடிப்படையில் கூறப்பட்டவை.

ஆனால், விண்வெளி யுகம் தொடங்கிப் பல்வேறு கிரகங்களுக்கும் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்தபோது, சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதரைப் போன்றவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. பூமியில் மட்டும் மனிதன் உட்பட பல்வகையான உயிரினங்கள் இருப்பதற்கு பூமியில் உள்ள விசேஷத் தன்மைகளே காரணம்.

- என்.ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

வியாழன்தோறும் தொடர்வோம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x