Last Updated : 05 Mar, 2021 03:15 AM

 

Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

பழனிசாமியின் பிரம்மாஸ்திரம்

தேர்தல் கூட்டணிகளை வெளியிலிருந்து பார்ப்பவர்கள் நிறையப் பேர் திமுக கூட்டணி பலமாக இருப்பதான ஒரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கலாம். அதிமுக சளைத்தது அல்ல என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்கும் இன்னொரு கூட்டணி சொல்கிறது!

சென்ற இரு மாதங்களாக முதல்வர் பழனிசாமி கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளைக் கவனித்தீர்களா? சென்னையில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் நடந்த நாடார் இனச் சாதனையாளர்கள் மற்றும் போராளிகளுக்கு விருது வழங்கும் விழா, எடப்பாடி அருகே அருந்ததியர் காலனியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்று உணவருந்தல், மதுரையில் வலையர் (முத்தரையர்) வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்று மன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மதுரையில் சிலை வைப்பதாக அறிவிப்பு, நாமக்கல்லில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த மாநாட்டில் பங்கேற்பு, தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக இருந்த வீரன் பொல்லானின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததுடன், மணிமண்டபம் கட்டுவதாகவும் அறிவிப்பு. சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓமந்தூரார், வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன் ஆகியோரின் உருவப்படங்கள் திறப்பு (ரெட்டியார், பிள்ளைமார், கவுண்டர் சாதிகள் நீண்ட காலமாக இதைக் கோரிவந்தன), சென்னையில் நடந்த தேசிய செட்டியார் பேரவை மாநாட்டில் பங்கேற்பு.

நீளும் பட்டியல்

இவை தவிர, பிரச்சாரத்துக்குப் போகிற ஊர்களில் எல்லாம் அந்தந்த வட்டாரத்தைச் சேர்ந்த சாதிச் சங்க நிர்வாகிகளை எல்லாம் சந்தித்துக் கலந்துரையாடினார் பழனிசாமி. கூடவே, அங்கே எந்தச் சாதியினர் அதிகமாக வசிக்கிறார்களோ, அவர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டார். உதாரணமாக, வேலூர் மாவட்டப் பிரச்சாரத்தின்போது முதலியார் சமூகத்தினர் மனம் குளிரும் வகையில் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வர், கொங்கு மற்றும் செட்டிநாட்டு மக்களை மகிழ்விக்கும் வகையில் தைப்பூசத்துக்குப் பொது விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்டார்.

உடையார் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று திருச்சியில் நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.டி.பன்னீர்செல்வத்துக்கு மணி மண்டபம், விஸ்வகர்ம சமூகத்தினரின் விருப்பப்படி அதே திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம், முத்தரையருக்கு அளித்த வாக்குறுதிப்படி, அதே திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையருக்கு மணிமண்டபம் ஆகியவை கட்டும் பணிகள் ஒரே நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. நாடார்களை மகிழ்விக்க திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம், கோவிந்தபேரியில் பி.ஹெச்.பாண்டியனுக்கு வெண்கலச்சிலை, போடியில் வ.உ.சிதம்பரனாருக்கு வெண்கலச்சிலை, பிரமலைக்கள்ளர்கள் அதிகம் வாழும் உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு வெண்கலச்சிலை, பெருங்காமநல்லூரில் மாயக்காள், மதுராந்தகத்தில் இரட்டைமலை சீனிவாசன், கோவையில் வி.கே.பழனிசாமி கவுண்டர், குமரி தேரூரில் தேசிய விநாயகம் பிள்ளை ஆகியோருக்கு மணிமண்டபம் என்று கணக்கெடுத்தால் பட்டியல் நீள்கிறது.

கவுண்டர், வன்னியர், தேவேந்திரர்

இவற்றையெல்லாம்விட பழனிசாமி எடுத்திருக்கும் பெரிய அஸ்திரம், கவுண்டர் - வன்னியர் - தேவேந்திரர் அணிதிரட்டல் வியூகம்தான்.

தமிழகத்தின் மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கிற வன்னியர் சமூகத்தின் வாக்குகளைக் கொத்தாக அறுவடை செய்யும் நோக்கத்தில், அவர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீட்டுக்காக தனிச்சட்டத்தையே அதிமுக அரசு நிறைவேற்றியதும், தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்ற அரசாணையைப் பிறப்பிக்க மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டுவந்ததும் வடதமிழகம் மற்றும் தென்தமிழகத்தின் வாக்கு வங்கி அரசியலில் பெரும் சலனத்தை உருவாக்க வல்லவை. ஏற்கெனவே மேற்கில் பெரும்பான்மையினரான கவுண்டர் சமூகத்தின் பிரதிநிதி என்கிற வகையில் அங்கும் பெரும் வரவேற்பு இருக்கும் என்று அவர் நம்புகிறார்.

இந்த மூன்று சாதிகளையும் உள்ளடக்கிய கணக்கை சட்டமன்றத் தொகுதிகள் கணக்கில் மாற்றினால் அதன் கூட்டுத்தொகை எவ்வளவு தெரியுமா? குறைந்தது 10%-15% வாக்குகளைக் கொண்ட தொகுதிகள் என்று கணக்கு எடுத்தாலே தேவேந்திர குல வேளாளர்களுக்கு 14 தொகுதிகள், கவுண்டர்களுக்கு 36 தொகுதிகள், வன்னியர்களுக்கு 80 தொகுதிகள் என்று 130 தொகுதிகளில் இந்த மூன்று சமூகங்களும் தேர்தல் முடிவில் வலுவான செல்வாக்கை வெளிப்படுத்த வல்ல இடத்தில் இருக்கின்றன. ஆக, இந்த வியூகத்தை இரட்டைக் கூட்டணி என்று அழைக்கிறார்கள் அதிமுகவினர். மேல்தட்டில் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி, கீழ்த்தட்டில் சாதிகளுடனான கூட்டணி. மேற்கண்ட மூன்று சாதிகளுக்குமே அவர்களது நீண்ட கால அபிலாஷைகளை நிறைவேற்றியதான பிரச்சாரத்தை அதிமுக களத்தில் கொண்டுசெல்லும். ‘கவுண்டர் சமூகத்திலிருந்து ஒரு முதல்வர்’, ‘நாற்பது ஆண்டு காலக் கோரிக்கையான வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு’, ‘தேவேந்திரகுல வேளாளர்கள் பெயர் மீட்பு’ என்கிற குரல்கள் அந்தந்தப் பகுதிகளில் இப்போதே ஒலிக்கின்றன. பொதுவாக, பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் சமயங்களில் பாஜக இப்படியான கணக்குகளோடு காய்களை நகர்த்தும். இங்கே பாஜகவே மிரளும் வகையில் பழனிசாமி அதை முடித்துவிட்டார் என்று பாஜக வட்டாரங்கள் பேசுகின்றன.

என்னவாகும் விளைவு?

தமிழ்நாட்டில் அரசியலில் சாதி ஓரளவுக்குத் தாக்கம் செலுத்தக்கூடியது என்றாலும், முழுக்க சாதிமயமாகச் செயல்படக்கூடிய மாநிலம் இல்லை இது. குறிப்பாக, திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகான ஐம்பது ஆண்டுகளில் மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுத்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா யாருமே எண்ணிக்கைப் பெரும்பான்மையைக் கொண்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல. பல தருணங்களில் அரசியல் பிரச்சினைகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திருக்கின்றன. இதற்கு முன்னர் இப்படியான கணக்குகளுடன் தேர்தலை அணுகும் முயற்சிகளை அதிமுக மேற்கொண்டபோதும் சரி, திமுக மேற்கொண்டபோதும் சரி; தோல்வியையே அடைந்திருக்கின்றன. ஆனால், நாடு முழுவதுமே இன்றைக்கு மாறுபட்ட ஒரு சூழல் நிலவும் நிலையில், தமிழகத்திலும் சூழல் மாறுவதுபோலத் தென்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்றெல்லாம் பல சாதிகளின் குழுக்களாகத் திரண்ட சமூகங்கள் மீண்டும் அவரவர் சாதி அடையாளங்களைப் பேசி, குழுக்களிலிருந்து வெளியேறுவதைக் காண்கிறோம். இத்தகு சூழலில் பழனிசாமியின் வியூகம் என்னவாகும்? தெரியவில்லை. ஆனால், இந்தத் தேர்தலில் திமுக எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆயுதங்களில் ஒன்று இது என்பது மட்டும் தெரிகிறது!

- கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x