Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

உங்கள் இருப்பை அறிய நீங்கள் வாசிக்க வேண்டும்! : ஆர்.அபிலாஷ் பேட்டி

இலக்கியம், தத்துவம், அரசியல், சமூகம், விளையாட்டு என வெவ்வேறு தளங்களில் தொடர்ச்சியாக எழுதிவரும் ஆர்.அபிலாஷ், பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இதுவரையில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 35 நூல்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார். இவரது ‘கால்கள்’ நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதும், இவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2016-ல் பாஷா பரிஷத் விருதும் வழங்கப்பட்டது. இப்போது புத்தகக்காட்சிக்காக வெளியாகியிருக்கும் ‘ஏன் வாசிக்க வேண்டும்?’ புத்தகத்தையொட்டி வாசிப்பு குறித்து உரையாடினோம்.

புத்தக வாசிப்பு என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் வாசிப்பை எனது இருத்தலின் ஒரு பகுதியாகக் காண்கிறேன். பேசிப் பழகிப் புரிந்துகொண்டு பல விஷயங்களைச் செய்து எப்படி அவற்றில் நம்மை அறிகிறோமோ அப்படியான ஒன்றுதான் வாசிப்பு. மாறாக, வாசிப்பை அறிவுக்கான, எழுத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக நான் பார்க்கவில்லை. இந்த வாழ்க்கைக்குத் தேவையான அறிவை நீங்கள் புத்தகத்திலிருந்து பெற முடியும் என நான் நம்பவில்லை. சிறந்த வாசிப்பு உங்களைச் சிறந்த எழுத்தாளராக்கும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. நான் வாசிப்பது ஒரு வாசகராக இருப்பதற்காக மட்டுமே. எப்படி வாக்காளராக இருக்க நீங்கள் வாக்களிக்க வேண்டுமோ, எப்படிக் காதலராக இருக்க நீங்கள் காதலிக்க வேண்டுமோ, அப்படியே வாசிப்பவராக உங்கள் இருப்பை அறிய நீங்கள் வாசிக்க வேண்டும். அதைத் தாண்டி வாசிப்பில் வேறு எதுவும் பிரதானமில்லை. எப்படிக் காதலர்கள் சாலையில் போகும்போது கைகோத்துக்கொள்கிறார்களோ அவ்வாறே நான் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறேன். அதைத் தாண்டி வாசிப்பை ஒரு புனிதச் செயலாக மகத்துவப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.

உங்கள் வாசிப்பு முறை பற்றிக் கூறுங்களேன்...

நான் யாருடைய பட்டியலையும் பின்பற்றி வாசிப்பதில்லை. அந்தந்த நேரத்துக்கு மனத்தைக் கவரும் நூலை எடுத்து வாசிப்பேன். எல்லாப் புத்தகங்களும் மொழியாலேயே முக்கியமாகின்றன. ஆகையால், எல்லாவற்றுக்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது நான் சிறுவயதில் கற்ற பாடம். அதனால், எனக்கு வெகுஜன இலக்கியம் மீது உதாசீனமோ, தீவிர இலக்கியம் மீது கூடுதல் மரியாதையோ இல்லை. ஒரே மதிப்பீடு, ஒரு புத்தகம் சுவாரஸ்யத்துக்கு இணையாகக் கூடுதலான சவாலை அளிக்கிறதா என்பதே.

வாசிப்பு என்பதை முற்றிலும் அந்தரங்கச் செயல்பாடாகப் பார்க்கிறீர்களா?

இல்லை. உண்மையில், தனியாக வாசிப்பதைவிடக் கூட்டு வாசிப்பு எனக்குப் பிடித்தமானது. புனைவு, கவிதை நூல்களை நண்பர்களுடன் இணைந்து சத்தமாக வாசிக்கையில் கிடைக்கும் மனவெழுச்சி ஈடிணையற்றது. தத்துவ நூல்களைக் கூட்டாக வாசிக்கையில் அவை சுலபமாவதைக் கவனித்திருக்கிறேன். தத்துவத்தை, கோட்பாட்டை விவாதித்தே கற்றுக்கொள்ள வேண்டும் என நம்புகிறேன். அதற்கும் கூட்டு வாசிப்பு உகந்தது.

‘எழுதுதல்’ குறித்து நீங்கள் அடைந்திருக்கும் புரிதல் என்ன?

பொதுவாக, தமிழ் எழுத்தாளனுக்குப் பணம், பொதுச் சமூகத்தின் அங்கீகாரம், புகழ், அதனால் கிடைக்கும் வசதி ஏதும் இல்லை. இந்த அவலமான சூழலில் தமிழில் பல மகத்தான படைப்புகள் எழுதப்பட்டுள்ளன. எப்படி? நியாயமாக ஒரு எழுத்தாளன் வேறு வேலை பார்க்கத்தானே போக வேண்டும்? ஒரு தமிழ் எழுத்தாளனாக நான் இது குறித்து வந்தடைந்த புரிதல் என்னவென்றால் பணத்துக்காக, புகழுக்காக எழுதக் கூடாது என்பது. ஆகையால், எழுத்தை ஒரு சமூகக் கடமையாகப் பார்க்கிறேன். நான் ஆங்கிலப் பேராசிரியனாக இருந்தாலும் தமிழில்தான் எழுதுகிறேன். ஏனென்றால், இதுவே என் கலாச்சாரத்துக்கு, மொழிக்கு நான் ஆற்றும் பணி. இந்தக் கோணத்தில் யோசிக்கும்போதுதான் எனக்கு முன்பு இந்த மொழியில் எந்தப் பிரதிபலனும் இல்லாது செயல்பட்ட எத்தனையோ மகத்தான படைப்பாளிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எழுத்துக்கு வெகுமதி எழுத்து மட்டுமே. உலகில் வேறு எந்தச் செயலிலும் இல்லாத திகைப்பு, மகிழ்ச்சி, பூரண திருப்தி எழுத்தில் உள்ளன. எழுதும்போது எல்லா மனச்சிதறல்களும் மறைந்து, அவஸ்தைகள் மாயமாகித் தன்னை மறந்த மகிழ்ச்சி கிடைக்கிறது. அதற்கு ஈடாக வேறெதுவும் இல்லை.

தற்போது தமிழ் இலக்கியச் சூழல் அடைந்துவரும் மாற்றம் குறித்த உங்கள் பார்வை என்ன?

கடந்த இரு பத்தாண்டுகளின் தமிழ் இலக்கியப் போக்கில் சில புதிய இயல்புகள், தன்மைகள் தென்படுகின்றன. சமூக வலைதள எழுத்துகள் நமது புனைவு, அபுனைவு மொழியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேபோல், இலக்கிய - இலக்கியமற்ற எழுத்துகளுக்கு இடையிலான தடுப்புச்சுவர் பாதி உடைக்கப்பட்ட நிலையில் இங்குள்ளவர்கள் அங்கும் அங்குள்ளவர்கள் இங்கும் இருக்கிறார்கள். மற்றபடி, இலக்கிய நாவல்கள், சிறுகதைகளின் வடிவம், கதைக்களம், மொழி, அழகியல் போன்ற சங்கதிகளில் நாம் தொண்ணூறுகளிலிருந்து பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x