Published : 23 Nov 2015 10:22 AM
Last Updated : 23 Nov 2015 10:22 AM

நியமனத்திலும் நீதி வேண்டும்

‘நீதிபதிகள் நியமனத்துக்குப் புதிய சட்டம் தேவை’தலையங்கத்தைப் படித்த பிறகு சில கருத்துகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தற்போதுள்ள கொலிஜியம் முறை என்பது நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளுகின்ற நடைமுறையாகும்.

இந்த நடைமுறை உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத நடைமுறை என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்லாது கொலிஜியம் நடைமுறை என்பது, நமது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்படாத ஒன்று என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளே இந்த கொலிஜியம் நடைமுறையைத் தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்டார்கள். அந்த நடைமுறையில் அதிருப்தி வந்ததாலேயே தேசிய நீதித் துறை நியமனச் சட்டம் நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது.

அதைச் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. நாடாளுமன்றம் என்பது இந்திய மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் முழுப் பிரதிநிதித்துவம் கொண்ட நாடாளுமன்ற சட்டத்தைச் செல்லாது என்று அறிவித்துவிட்டு, இப்போது பொதுமக்களின் கருத்தைக் கேட்பது கேலிக்குரியதாகும். மக்களின் கருத்தும் அதை ஏற்றுக்கொண்ட அல்லது மறுத்ததற்கான காரணங்கள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

இனியாவது நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்குமா என்கிற விவரமும் தெரியவில்லை. இனிவரும் நியமனங்களில் சமூக நீதி பின்பற்றப்படுமா?

- பொ. நடராசன் நீதிபதி (பணி நிறைவு), உலகனேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x