Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

காட்டைப் பிரிந்த யானை நான்!- ரமேஷ் பிரேதன் பேட்டி

மேற்கத்தியத் தத்துவமும் இந்தியத் தத்துவ மரபுகளும் ஊடாடும் பின்நவீனத்துவப் புனைவுகள், கட்டுரைகள் வழியாகத் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அறிமுகமாகி, சிறுபத்திரிகை வெளியில் காத்திரமாகத் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் ரமேஷ் பிரேதன். எழுத்தாளர் பிரேமுடன் தொடக்கத்தில் இணைந்து இயங்கிய இவர் தற்போது ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் தனியாக இயங்கிவருகிறார். கவிதை, காவியம், சிறுகதை, நாவல், கட்டுரைகள், நாடகம் எனச் செயல்பட்ட எல்லாத் தளங்களிலும் முத்திரை பதித்த அரிதான கலைஞர். சாதிதான் எல்லா இந்தியர்களையும் தமிழர்களையும் பிரிப்பதாகவும் இணைப்பதாகவும் உள்ளது என்ற கருத்தோட்டப் புள்ளியில் நின்று, ஒரு தமிழ்ப் பொது மனிதனையும் அவனுக்கான விடுதலையையும் கனவுகாணும் மூன்று நாவல்கள் ‘அவன் பெயர் சொல்’, ‘ஐந்தவித்தான்’, ‘நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை’. மீபுனைவாக இவர் எழுதிய ‘ஆண் எழுத்து பெண் எழுத்து = ஆபெண் எழுத்து’ எனும் நூலும் தனித்துவமானது.

உங்கள் கவிதைகளுக்கான மரபாக பாரதி, பாரதிதாசன் இரண்டு பேரையும் குறிப்பிடுகிறீர்கள். இருவரும் உங்கள் படைப்புகளில் செலுத்தும் செல்வாக்கைப் பற்றிச் சொல்லுங்கள்...

பாரதி, பாரதிதாசன் என்னும் இரு பெரும் ஆளுமைகளால் எனது பதின்பருவம் கட்டமைந்தது. பாரதி வழியாக இந்தியப் புராண மரபுகளையும், பாரதிதாசன் வழியாகத் தமிழ்த் தேசிய சங்க இலக்கிய மரபுகளையும் வந்தடைந்தேன். பாரதியின் இந்திய தேசியக் கவிதையியலும், பாரதிதாசனின் தமிழ்த் தேசியக் கவிதையியலும் வேறுபடும் புள்ளியிலிருந்து என்னை வளர்த்தெடுத்துக்கொண்டேன். பாரதிதாசனைக் கடந்து வந்துவிட்டேன். பாரதியைத் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். இன்று உலகக் கவிதைகளை அலைந்து திரிந்து மேய்ந்துவந்தாலும் நின்று அசைபோடும் இடம் பாரதியே. பாரதி என்பது ஒருவகை போதை. அந்தப் பழக்கத்திலிருந்து பாரதிதாசனைப் போல என்னாலும் விடுபட முடியவில்லை. பாரதிதாசனுடைய நாத்திகத்தின் கவிதையியலை இத்தனை வீரியத்தோடு வேறொருவரிடம் வாசித்ததில்லை. இவர்கள் இருவரையும் தவிர்த்து புதுமைப்பித்தனிடம்தான் எனக்கான முழுமையைக் கண்டடைந்தேன். எனது படைப்புகளின் எல்லா வகைகளிலும் புதுமைப்பித்தனின் நிழல்கள் குறுக்கும் நெடுக்குமாக அலைவதை உற்றுநோக்கினால் காணலாம்.

புதுச்சேரி உங்கள் படைப்புகளின் மையமாகவும், ஒரு விடுதலை நிலமாகவும் உருவகிக்கப்படுகிறது. அதற்கான பின்னணி என்ன?

புதுச்சேரி எனது தாய்வழி நிலம். பிரெஞ்சுக்காரர்களின் காலத்தில் உள்நாட்டுப் பகுதியான பாகூரிலிருந்து நகரக் கடற்கரையோரம் தாயின் முன்னோர்கள் குடிபெயர்ந்தனர். பிரெஞ்சுப் பண்பாடு கலந்த தந்தைவழி வாழ்க்கை முறையும் கல்வி, பொருளாதார, சமூக நிலையும் என் அம்மாவை வடிவமைத்தன. நான் என் அம்மாவால் ஆனவன். இந்த நிலத்தின் குடிமக்களிடம் பொருளாதார ஏற்றத்தாழ்வைத் தவிர்த்து மத, சாதிய வல்லுரசல்கள் இல்லை. பிரெஞ்ச் இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்தியத் தமிழக அரசியல் இடையீடுகளால் புதுச்சேரி தனது தனித்துவத்தைத் தக்கவைக்க முடியாமல் போனது. நான் வளர வளர இந்நிலப் பகுதி தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக உருத்திரிந்தது. இந்த உருத்திரிபிலிருந்து உள்திரும்பி இம்மண்ணுக்கான இலக்கியத்தை எழுதிப்பார்க்கிறேன். ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளை முன்வைத்து, அதற்கும் முந்தைய வரலாற்றை அகழ்ந்தெடுக்க வேண்டும். புதுச்சேரி என்னும் நெய்தல் திணை கடலாலானது; கடல், கதைகளை அள்ளித்தரும்.

சிறுகதை வடிவத்தில் சாதனை நிகழ்ந்த இடம் நம்முடையது. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது தற்போது எழுதப்படும் சிறுகதைகளில் ஒரு தேக்கம் நிலவுகிறதா?

சிறுகதை, நாவல் என்னும் இருபெரும் வடிவங்களையும் நான் புனைவு என்ற சொல்லாலேயே ஒருமுகப்படுத்துகிறேன். ஒரு கவிதையைச் சிறுகதையாகவும் ஒரு சிறுகதையை நாவலாகவும் வளர்த்தெடுக்கும் தன்மையில்தான் நான் எழுதுகிறேன். புதுமைப்பித்தனின் பெரும்பாலான சிறுகதைகளும் கலாப்பிரியாவின் ‘எட்டயபுரம்’, ‘சுயம்வரம்’ முதலான நெடுங்கவிதைகள் யாவும் நாவல் தன்மை கொண்டவையே. மெளனன் யாத்ரிகாவின் ‘வேட்டுவம்’ என்ற ஒரே பொருளாலான கவிதைத் தொகுப்பை ஒரு நாவலாகத்தான் வாசித்தேன். தமிழ்ப் புனைவில் ‘சிலப்பதிகாரம்’ தொடங்கி ‘நீர்வளரி’ வரை தேக்கம் என்பதே இல்லை.

இந்திய, தமிழ்ச் சூழலில் விடுதலையை ஒரு தன்னிலை அடைவதற்குச் சாதி எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை உங்கள் புனைவுகளிலும் கட்டுரைகளிலும் பேசியவர் நீங்கள். சாதியைத் தாண்டும் சாத்தியமுள்ள காஸ்மோபாலிட்டன் தன்மை கொண்ட கனவு நகரமாக புதுச்சேரியை நீங்கள் உருவகிக்கிறீர்களா?

இல்லை. புதுச்சேரி மட்டுமில்லை, இந்தியாவில் எந்தவொரு நிலப்பகுதியின் சந்துபொந்தில் வாழும் ஒரு தன்னிலையும் தான் சார்ந்த சாதியைத் தாண்டி வந்ததில்லை. இந்தத் துணைக்கண்டம் ஊரும் சேரியுமாகத்தான் பிரிந்திருக்கிறது. பாகிஸ்தான் – இந்தியா பிரிந்திருப்பதைப் போல ஊரும் சேரியும் பிரிந்திருக்கின்றன. அரசியல் அழுத்தங்களால் பிரிந்த நிலம் இணையலாம்; மனம் இணையாது. புதுச்சேரி, பிரெஞ்சிந்தியாவாக இருந்தபோது முதல் உலகப் போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பங்கெடுக்கக் கூலிப் போராளிகளாய் தலித்துகள் கப்பலேற்றப்பட்டனர். உயிரோடு திரும்பியவர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்றுப் பொருளாதார ஏற்றம் பெற்றனர். ஆயினும், பிறருடன் சாதிக்கலப்பு நிகழ்ந்துவிடவில்லை. ஆனால், தலித்துகளைப் பழைய சாதிய ஒடுக்குமுறையிலிருந்து பொருள் வசதி விடுவித்தது. ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகளில் பரங்கியர், கிறிஸ்தவர், இஸ்லாமியர், தமிழர்கள், பறையர்கள் என்றே குடிமக்கள் தொகுக்கப்பட்டுள்ளதைத் தெளிவாக அறியலாம். தலித் அல்லாதார் அனைவரும் தமிழர் எனப்பட்டனர். இந்தச் சமூக நிலையிலிருந்து தலித்துகளை பிரெஞ்சு காலனியம் விடுதலை செய்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் ஞானகுரு அம்பேத்கர் அவதரிப்பதற்கு முன்பே பிரெஞ்சிந்தியாவில் தலித் சமூகத்தில் பொருளாதார ஏற்றம் வழியாக ஒரு பண்பாட்டு விடுதலை நிகழ்ந்துவிட்டது. இந்த அரசியல் பின்னணியில் எனது கதைக்களத்தைக் கட்டியெழுப்பும்போதும், அவற்றைத் தமிழ்நாட்டுப் பின்னணியில் வாசிப்பவருக்கு விநோதப் புனைவாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் எனக்கு பொந்திஷேரி (பாண்டிச்சேரி) என்றால் இந்தக் கிழக்குக் கடல் தவிர வேறொன்றுமில்லை.

உங்களைப் பாதித்த சித்தர் மரபிலக்கியம் பற்றிச் சொல்லுங்கள்?

‘பாரதி அறுபத்தாறு’ இப்படித் தொடங்குகிறது, ‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா/ யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்.’ பாரதியின் வழியில்தான் சித்தர்களையும் சித்தர் இலக்கியங்களையும் கற்றேன். திருமந்திரம் கற்ற பிறகு பிறர் என்னை ஈர்க்கவில்லை. புதுச்சேரி ஒரு சித்தர் நிலம். இங்கு வாழ்ந்த சித்தர்களின் மாயயதார்த்த வாழ்க்கைக் கதைகளைத் தொகுத்து ஒரு நாவல் எழுதவும் எண்ணம் இருக்கிறது.

தமிழில் எழுத ஆசைப்படும் ஒருவருக்கு வாசிக்கவும் கற்கவும் வேண்டிய அடிப்படைகள் என்று சிலவற்றைச் சொல்ல முடியுமா?

பிறர் எழுத்துகளை முன்வைத்தே எனது எழுத்துகளை நான் அளவிட்டும் இடப்படுத்தியும் கொள்கிறேன். யாரும் சுயம்பு கிடையாது. சுயம்பு எனச் சொல்வது பிரதி ஆக்கத்தின் இயங்கியலுக்கு எதிரானது. நான் திருக்குறள் தொடங்கி அனைத்துச் செவ்வியல் பிரதிகளையும் பயில்கிறேன். பெரும்பாலும் சமூக எதிர்வினை எழுத்துகளை நான் படித்து ஒதுக்கிவிடுகிறேன். அவை வரலாற்றில் நிலைக்காது. நெஞ்சு பதைபதைக்கும் ஒரு கொடூரச் செயலின் செய்தியை முன்வைத்து என்னால் கவிதை செய்ய இயலாது. அச்செயலின் அரசியல் தத்துவக் கேள்விகள் என்னுள் கிளர்த்தும் சொல்லாடல்களிலிருந்தே படைப்புக்கான கூறுகளைத் தொகுத்துக்கொள்கிறேன். டயரை மாட்டிக் கொளுத்தப்பட்டு எரியும் யானையோடு செல்ஃபி எடுக்கும் செயலைப் போல எல்லோரும் அவசர அவசரமாகக் கவிதை எழுதி முகநூலில் பதிவிடுகிறார்கள். அவற்றை வாசித்து வெறுமனே கடந்துசெல்ல முடியவில்லை. நானும் அதைப் பற்றி எழுதாததன் குற்றவுணர்வுக்கு ஆளாகி உள்ளம் நோகிறேன். இலக்கியப் படைப்பாளர்கள் ரசவாதிகளாக வேண்டும். நாம் செம்மொழியில் எழுதும் பின்நவீனகாலப் படைப்பாளர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அனைத்தையும் வாசிக்க வேண்டும். எழுதுவதைத் தள்ளிப்போட வேண்டும். உண்மையில், இதை எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். போதிப்பதற்கு நான் என்ன கடவுளின் முகவரா?

தமிழில் சமீபத்தில் நாவல் வடிவத்தில் நிறைய சாதனைகள் நடந்திருக்கின்றன. உங்களைக் கவர்ந்த நாவல்கள், நாவலாசிரியர்கள் பற்றிக் கூறுங்கள்...

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ரமேஷ் பிரேதன் இவர்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உடல்நிலை மோசமாகிவருவதால் முன்புபோல நிறைய வாசிக்க இயலவில்லை. புலியூர் முருகேசன், கரன் கார்க்கி, முத்துநாகு, சு.தமிழ்ச்செல்வி, லக்ஷ்மி சரவணகுமார் இவர்களை வாசிக்கிறேன். பா.வெங்கடேசனையும் சு.வெங்கடேசனையும் யுவன் சந்திரசேகரையும் மொத்தமாக வாசிக்க வேண்டும். ஈழத்தின் இளைய தலைமுறையினருக்காக ஓராண்டை மொத்தமாக ஒதுக்க வேண்டும். இந்தியாவின் கிழக்கு விளிம்பில் நிற்கிறேன்; கால் இடறிக் கடலில் விழுந்துவிடுவேனோ என்ற பயமும் இருக்கிறது. ஜெயமோகனின் வெண்முரசு நூல்களை அடுத்த பிறவியில்தான் படிக்க வேண்டும்.

ரமேஷ் பிரேதன் தன்னைப் பற்றி வைத்திருக்கும் உருவகிப்பு என்ன?

வாசலில் நிற்கும், காட்டைப் பிரிந்த கோயில் யானை.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x