Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

5 கேள்விகள்; 5 பதில்கள்: எழுதுவது என்பது பெண்ணுக்குப் பெரும்பாடு- இளம்பிறை பேட்டி

நாகப்பட்டினம் மாவட்டம் சாட்டியக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பிறை, சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’, ‘அவதூறுகளின் காலம்’ கவிதைத் தொகுப்புகளையும், ‘வனாந்திர தனிப் பயணி’, ‘காற்றில் நடனமாடும் பூக்கள்’ கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். ஒப்பனையும் பாவனையும் இல்லாத எழுத்து இவருடையது. எளிதில் வசப்படாத இந்த எளிமையே இவரது பலம். பெரும்பாலும் தன்னனுபவத்தைத்தான் எழுதியிருக்கிறார். துயரத்தை, துரோகத்தை, வேதனையைப் பேசும் எந்தக் கவிதையிலும் தவறியும் தன்னிரக்கமோ தாழ்வுணர்வோ இல்லை.

உங்கள் கவிதைகளில் வருகிற கிராமத்துச் சிறுமி இப்போதும் உங்களுக்குள் இருக்கிறாளா?

அவ்வப்போது எட்டிப்பார்த்தபடி இருக்கிறாள். சென்னை வந்த புதிதில் பேச்சுவழக்கு, மனிதர்களின் பழக்கத்தில் மாறுபட்ட தன்மை என்று சம்பந்தமே இல்லாத இடத்துக்கு வந்ததுபோல் இருந்தது. இப்போது சென்னை பிடித்த ஊராக, தாய்வீடுபோல் ஆகிவிட்டது. ‘பச்சைக்குப் பாம்பு கடிச்சிடுச்சாம்; பார்க்க வந்தவங்களுக்குத் தேளு கொட்டிடுச்சாம்’ என்று என் அம்மா சொல்வார்கள். வஞ்சகமாகவும், பார்க்காததைப் பார்த்ததுபோலவும், கேட்காததைக் கேட்டதுபோலவும் பேசுகிறவர்கள் எல்லா இடங்களிலும் உண்டு. அவர்களை எளிதில் இனங்காண கிராமத்துச் சிறுமிக்கு இந்த நகரம் கற்றுக்கொடுத்திருக்கிறது.

பெண் படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்று ஒருபுறம் சொல்கிறோம். மறுபுறம், எழுதவரும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே?

அப்படிச் சொல்லிவிட முடியாது. ஃபேஸ்புக்கிலும் சமூக ஊடகங்களிலும் நிறைய பெண்கள் எழுதுகிறார்கள். நவீனமாக, நுணுக்கமாக, நுட்பமாக எழுதும் பெண்கள் இங்கே அதிகம். ஆனால், அவர்கள் இதிலேயே தங்கிவிடுவதுதான் சிக்கல். அந்த எழுத்து பெரிய படைப்பாக விரிவடைவதில்லை. தவிர, ஆணுக்கு அமையும் அனைத்து அம்சமும் எழுத நினைக்கும் பெண்ணுக்கு வாய்ப்பதில்லை. வேலை, பிள்ளை, பிழைப்புக்கிடையே எழுதுவது என்பது பெண்ணுக்குப் பெரும்பாடு.

உங்களிடம் தாக்கம் செலுத்திய படைப்பாளிகள் யார்? இளம் படைப்பாளிகளில் உங்களுக்குப் பிடித்தவர்கள் யார்?

வைக்கம் முகம்மது பஷீரை மிகவும் பிடிக்கும். அவரது உண்மையான எழுத்துக்காகவே அவரை விரும்பி வாசிப்பேன். சிங்கிஸ் ஐத்மாத்தவ் படைப்புகளும் பிடிக்கும். ‘என் முதல் ஆசிரியர்’ என்னை மிகவும் கவர்ந்தது. ‘நவீன தமிழ் நாடகங்களில் பெண் பாத்திரங்கள்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பெண்களின் படைப்புகளை வாசித்தேன். நம் கவனத்துக்கு வராத பலர் அருமையாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சிவகாமியின் ‘பயனற்ற கண்ணீர்’ எனக்குப் பிடித்தது. கமலா தாஸின் ‘என் கதை’ அருமையான படைப்பு. வாழ்க்கையை வித்தியாசமாக அணுகியிருக்கும் அந்தப் புத்தகத்தில் விடுதலை உணர்வு, நியாயம், எதிர்ப்பு, கோபம் என எல்லாமே இருக்கிறது. வத்சலாவின் ‘நான் ஏன் கவிஞராகவில்லை’யில் வருகிற பெண்ணுடன் என்னை நான் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். நம்மைப் போலவே ஒருத்தி இருக்கிறாள் என்பது உத்வேகமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது.

இளம் தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது?

செல்பேசியில் வரும் செய்திகளைத்தான் இந்தத் தலைமுறை அதிகமாக வாசிக்கிறது. சுயமுன்னேற்றப் புத்தகம் அல்லது தேர்வுக்கு வழிகாட்டும் புத்தகம் தவிர, அவர்களாக விரும்பிப் படிப்பது குறைவு. ஒரு ரயில் பயணத்தின்போது பள்ளி மாணவர்கள் 200 பேர் வந்தனர். அவர்களின் பொழுது பேச்சும் சிரிப்புமாக இரவெல்லாம் தூக்கமின்றிக் கழியும் என்று நினைத்தேன். ஆனால், ரயிலுக்குள் வந்த ஐந்து நிமிடங்களுக்குள் அவரவர் செல்பேசியில் ஐக்கியமாகிவிட்டனர். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு யாராவது பேசினாலும் பிடிக்கவில்லை, பேசவும் பிடிக்கவில்லை. அறையும் செல்பேசியுமாக ஒடுங்கிப்போகும் தலைமுறை மிகப் பெரிய பாதிப்பைச் சந்திக்கும் முன் ஏதாவது செய்தாக வேண்டும். பள்ளி நூலகங்கள் அதற்குப் பெருமளவில் உதவலாம். மாணவர்களுக்கு நாம்தான் நல்ல புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்ல வேண்டும்.

ஆசிரியராக இருப்பது உங்கள் படைப்புகளில் எந்தவிதமான தாக்கத்தைச் செலுத்துகிறது?

வருமானம் தருகிற வேலைதான் என்றாலும் ஆசிரியர் பணி நான் விரும்பிச் செய்வது. அதுவும் தொடக்கப் பள்ளி குழந்தைகளோடு உரையாடுவதற்கு நிகரான இன்பம் இல்லை. பாடப் புத்தகம் கைகாட்டி மரம் என்றால், ஆசிரியர் திசைகாட்டி. ஆனால், சில நேரம் மாணவர்களும் நமக்குப் புதுப்புது திசைகளைக் காட்டுவார்கள். அவை உத்வேகமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கும். சிரிப்பும் கொண்டாட்டமுமாக இருக்கும் வகுப்பறை என் படைப்புகளில் தாக்கம் செலுத்தத் தவறியதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x