Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

பெட்ரோல் விலை உயர்வு: மறைமுக வரிகளைக் குறைக்குமா ஒன்றிய அரசு?

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய, மாநில அரசுகள் தங்களது மறைமுக வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்திருக்கும் ஆலோசனையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் அவசியம். கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் பெட்ரோல், டீசல் மீதான அதிக அளவிலான மறைமுக வரிகளாலும் போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட முக்கியச் சேவைகளில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் பணவீக்கமானது தொடர்ந்து அதே நிலையில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த டிசம்பரில் உணவு மற்றும் எரிபொருள் தவிர்த்த ஏனைய சரக்கு மற்றும் சேவைகளில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் 5.5% ஆக இருப்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துப் பொருளாதாரத்துக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அவரது அறிவுறுத்தலை ஒன்றிய அரசு உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு மாதங்களாக, வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை ரூ.100-ஐத் தொட்டுக்கொண்டிருக்கிறது. சில நகரங்களில் ரூ.100-யும் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் பெட்ரோலின் விலையில் சுமார் 60%, டீசல் விலையில் 54% ஒன்றிய, மாநில அரசுகளின் வரிகளுக்கானவை. பிப்ரவரி 20 அன்று லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் விலையில் 37 பைசாவும் டீசல் விலையில் 37 பைசாவும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி தீர்மானித்துக்கொள்வது என்ற புதிய நடைமுறையைப் பெட்ரோலிய நிறுவனங்கள் 2017-ல் நடைமுறைப்படுத்தியது தொடங்கி, இதுவரை ஒரே நாளில் இந்த அளவுக்கு முன்பு எப்போதும் விலையேறியதில்லை.

கச்சா எண்ணெயின் சர்வதேச விலை, அந்நியச் செலாவணி மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலையைத் தினந்தோறும் தீர்மானித்துக்கொள்ளும் நடைமுறை உருவானது. ஆனால், தற்போது ஒன்றிய அரசின் சுங்கத் தீர்வையும் மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியும் கூடுதல் வரிகளுமே பெட்ரோல் விலையின் உயர்வுக்குக் காரணமாகிவிட்டன. வங்கம், ராஜஸ்தான், அஸாம், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் மறைமுக வரிகளைக் குறைத்துக்கொண்டு பெட்ரோல் விலை உயர்வைக் குறைப்பதற்குத் தங்களால் ஆன முயற்சிகளை முன்னெடுத்திருக்கின்றன. மேகாலயாவில் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலையில் ரூ.7.4 வரையிலும் டீசல் லிட்டர் ஒன்றின் விலையில் ரூ.7.1 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. அஸாமில், கடந்த ஆண்டு கரோனா தொற்றுக் காலத்தைச் சமாளிக்கவும் வருவாயை அதிகரிக்கவும் விதிக்கப்பட்ட ரூ.5 கூடுதல் வரி திரும்பப்பெறப்பட்டுள்ளது. மாநிலங்கள் இத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் ஒன்றிய அரசு சுங்கத் தீர்வையைக் குறைப்பதற்குத் தயாராக இல்லை. இந்த வருவாயை இழக்க ஒன்றிய அரசுக்கு மனமில்லாமல் இருக்கலாம். ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வானது வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையிலும் பிரதிபலிக்கிறது, சாமானியர்களின் வாழ்க்கையை அது முடக்கிப்போடுகிறது என்பதை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x