Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில் சமரசத்தின் முதல் படி

இமயத்தின் சிகரங்களை அடர்பனி மட்டுமில்லை, கடந்த ஒன்பது மாதங்களாக அவநம்பிக்கையும் போர்த்தியிருக்கிறது. இந்திய-சீனத் தளபதிகளும் ராஜதந்திரிகளும் இதுவரை பத்து முறை கூடிப் பேசிவிட்டார்கள். பத்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 20 அன்று நடந்தது. ஒன்பதாவது சுற்றுதான் முக்கியமானது. அது சமரசத்துக்கான வழியைத் திறந்தது. அதன்படி, பிப்ரவரி 10 முதல் 19-க்குள் லடாக் பகுதியில் பான்காங் எனும் ஏரியின் கரைகளில் இருந்த இரு நாட்டுப் படைகளும் பின்வாங்கிக்கொண்டன. சீனா, எல்லை தாண்டி நிறுத்தியிருந்த ஆயிரக்கணக்கான பீரங்கிகளையும் கவச வண்டிகளையும் எதிர்த் திசையில் செலுத்தியது. தற்காலிகக் கூடாரங்களையும் காப்பரண்களையும் அகற்றியது. இந்திய ராணுவம் வெளியிட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் காணக்கிடைத்தன. இதை இந்தியாவின் வெற்றியாகக் கொண்டாடினர் ஒரு சாரார். சீனாவின் எல்லை மீறல், பான்காங் பகுதியில் மட்டுமில்லை, லடாக்கின் வேறு பகுதிகளிலும் இருக்கின்றன; அது குறித்துத் தீர்மானிக்காமல் நாம் சமரசத்துக்கு இணங்கியது தவறு என்று குற்றம் சாட்டினர் இன்னொரு சாரார். பேச்சுவார்த்தைகளின் சாரம் மேற்குறிப்பிட்ட இரு சாராருக்கும் தெரியாது; அது துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் தளபதிகளுக்கும் மட்டுமே தெரியும். ஆயினும் அரசியல் நோக்கர்களின் பார்வையிலிருந்து நடந்த சம்பவங்களைத் தொகுத்து விளங்கிக்கொள்ளலாம்.

‘நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு’

இந்திய - சீன எல்லையின் நீளம் 3,488 கிமீ. இந்த எல்லை நெடுகிலும் தர்க்கம் இருக்கிறது. குறிப்பாக, மேற்கே லடாக்கை ஒட்டியுள்ள அக்சை-சின் பகுதியை இந்தியா கோருகிறது. கிழக்கே அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியைச் சீனா கோருகிறது. 1993-ல் ஒரு தற்காலிக ஏற்பாடு உருவானது. அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் அவரவர் பொறுப்பில் நீடிக்கும். இதைப் பிரிக்கும் கோடு, ‘நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு’ (Line of Actual Control- LAC) எனப்பட்டது. இந்தக் கோட்டைச் சுற்றியும் சர்ச்சைப் பகுதிகள் உள்ளன. கடந்த காலங்களில் அவ்வப்போது சர்ச்சைகள் உயர்ந்தன, தாழ்ந்தன. எனில், 2020 ஜூன் 15 அன்று கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பு முன்னுதாரணம் இல்லாதது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் நிகழ்ந்திராதது. 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். பிரச்சினை தீவிரமானது. சீனா தொடர்ந்து பான்காங் ஏரி, கோக்ரா ஊற்று, தெப்சாங் சமவெளி முதலிய இடங்களிலும் எல்லை தாண்டியது. இவற்றுள் பான்காங் ஏரியில்தான் இப்போது துருப்புகள் பின்சென்றிருக்கின்றன.

பான்காங் ஏரி

கடல் மட்டத்தைவிட 14,000 அடி உயரத்தில் இருக்கிறது பான்காங் ஏரி. 135 கிமீ நீளம். பூமராங் வடிவம். மையத்தில் 6 கிமீ அகலம். குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 40 பாகையாக இருக்கும். நீர் உறைந்துபோகும். அதன் மீது வாகனங்கள் போக முடியும். ஏரியின் வடக்குக் கரையில் மலைக் குருத்துகள் நீர்ப்பரப்புக்குள் விரல்களைப் போல் நீண்டிருக்கும். இப்படியான எட்டுக் குருத்துகள் உள்ளன. அவை ‘விரல்-1’, ‘விரல்-2’...‘விரல்-8’ என்று அழைக்கப்படுகின்றன. நடப்புக் கட்டுப்பாட்டுக் கோடு, விரல்-8க்கு அப்பால் இருக்கிறது. சீனாவின் சோதனைச் சாவடி இன்னும் சற்று தள்ளி இருக்கிறது. இந்தியாவின் சோதனைச் சாவடி விரல்-3க்கு அருகில் இருக்கிறது. விரல் 4-க்கும் விரல்-8க்கும் இடையிலான பகுதிக்கு சீனா உரிமை கோருகிறது. இந்தப் பகுதியில் இந்தியத் துருப்புகள் ரோந்து போய்க்கொண்டிருந்தன. கால்வான் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துக்கொண்டது.

இதற்குப் பதிலடியாக ஆகஸ்ட் இறுதியில் ஏரியின் தெற்குக் கரை மலைச் சிகரங்களை இந்தியத் துருப்புகள் கைப்பற்றிக்கொண்டன. இந்தப் பகுதிக்குக் கைலாசம் என்று பெயர். இங்கிருந்து இந்தியத் துருப்புகளால் சீனத் துருப்புகளைக் குறி பார்க்க முடிந்தது. இது ஒரு நல்ல போர்த்தந்திரம் என்று சர்வதேச ராணுவ வல்லுநர்கள் கருதினர். பேச்சுவார்த்தைகளின்போது சீனா ஒரு கோரிக்கை வைத்தது. பான்காங்கின் வடகரையில் சீனத் துருப்புகளைப் பின்வாங்கிக்கொள்வதற்குப் பதிலீடாகத் தென்கரையில் கைலாசச் சிகரத்தில் இருக்கும் இந்தியத் துருப்புகளும் பின்வாங்க வேண்டும். ஒன்பதாவது சுற்றில் இந்தியா இதற்கு இணங்கியது. கடந்த வாரம் இரு தரப்பும் பான்காங் ஏரியிலிருந்து பின்வாங்கிக்கொண்டன.

தெப்சாங் சமவெளி

லடாக் பகுதியில் சீனா எல்லை தாண்டிய இடங்கள் இன்னும் உள்ளன. அவற்றுள் கால்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா ஊற்று, தெப்சாங் சமவெளி ஆகியவை முக்கியமானவை. இவற்றுள் கோக்ரா ஊற்றை ஒட்டிய இந்திய ரோந்து மையங்கள் (Patrolling Point -PP) இரண்டையும் (PP-17A, PP-15) கால்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய ஒரு மையத்தையும் (PP-14) சீனா ஆக்கிரமித்திருக்கிறது.

அடுத்தது, தெப்சாங் சமவெளி. 18,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மணல் பரப்பு. ராணுவரீதியாக முக்கியமானது. இந்தச் சமவெளியை அடைவதற்கு Y வடிவிலான ஒரு குறுகலான வழி இருக்கிறது. இது இந்தியப் பகுதிக்குள், நடப்புக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 18 கிமீ தொலைவில் இருக்கிறது. சீன ராணுவம் இந்த வழியை அடைத்துவிட்டது. இதனால் இந்தியத் துருப்புகளால் PP-10, PP-11, PP-11a, PP-12, PP-13 ஆகிய ஐந்து ரோந்து மையங்களுக்குச் செல்ல முடியவில்லை. இதன் மூலம் இந்தியப் படைக்கு 972 சதுர கிமீ பரப்புக்கான வழி மறிக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.

பான்காங்கிலிருந்து பின்சென்ற சீனா, கோக்ராவிலும் முக்கியமாக தெப்சாங்கிலும் அதே வேகத்தில் பின்செல்லுமா என்று சில அரசியல் நோக்கர்கள் அஞ்சுகின்றனர். கைலாசச் சிகரம் எனும் துருப்புச் சீட்டை ஆட்டத்தில் இன்னும் சற்றுத் தாமதமாக இறக்கியிருக்கலாம் என்பது அவர்கள் கருத்து. இதை மறுக்கும் வேறு சில நோக்கர்கள், சமரசத்துக்கான கதவுகள் அடுத்தடுத்துத் திறக்கும் என்கிறார்கள். மேற்குறிப்பிட்ட ரோந்து மையங்களை மீட்டெடுக்கும் வழிமுறை பிப்ரவரி 20-ல் நடந்த பத்தாவது சுற்றில் பேசப்பட்டது. பேச்சுவார்த்தை தொடரும் என்று நம்பிக்கை தருகிறது இரு தரப்புக் கூட்டறிக்கை.

அடுத்து என்ன?

ஏப்ரல் 2020-க்கு முந்தைய நிலைக்கு சீனத் துருப்புகள் திரும்ப வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவருகிறது. அதற்கு இன்னும் சில காலம் வேண்டிவரலாம். அது நடந்த பிறகும் எல்லையில் இந்தியா கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிவரும். இதனால் இந்தியாவின் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரிக்கும்.

சீனாவின் மீது சர்வதேச அழுத்தத்தைத் தர இந்தியா முயற்சிக்க வேண்டும் என்பது சில நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. அதனால் பலனிருக்கும் என்று தோன்றவில்லை. சீனாதான் நமது அண்டை நாடு. அதை மாற்ற முடியாது. எல்லைப் பிரச்சினை என்பது நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை. சீனாவை நாம்தான் எதிர்கொள்ள வேண்டும். சீனாவுக்கு நாம் பணிந்து போகலாகாது. போர் எதற்கும் தீர்வாகாது. ஆகவே, நாம் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். சீனாவைச் சமரச மேசைக்கு வரவழைக்கிற நிர்ப்பந்தங்களை நாம் உருவாக்க வேண்டும். வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிற பான்காங் சமரசம், அதன் முதற்படி. இது கோக்ராவிலும் தெப்சாங்கிலும் தொடர வேண்டும். அது எல்லையில் பதற்றத்தைக் குறைக்கும். நம்பிக்கையை வளர்க்கும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர், தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x