Published : 23 Feb 2021 03:15 am

Updated : 23 Feb 2021 08:39 am

 

Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 08:39 AM

ஒய்.எஸ்.ஷர்மிளா:தெலங்கானாவில் வீசும் அரசியல் புயல்

ys-sharmila

தெலங்கானாவில் தனிக் கட்சி தொடங்குவதற்குத் தயாராகிவிட்டார் ஒய்.எஸ்.ஷர்மிளா. பிப்ரவரி 9 அன்று ஹைதராபாதில் உள்ள வீட்டில், தனது தந்தையின் ஆதரவாளர்களைச் சந்தித்தபோதே அரசியல் நெருப்பு பற்றிக்கொண்டுவிட்டது. அன்றைய தினம் நளகொண்டா மாவட்டத்திலுள்ள ஆதரவாளர்களை மட்டும்தான் அவர் சந்தித்துப் பேசினார். தற்போது மற்ற மாவட்டங்களில் உள்ள ஆதரவாளர்களையும் அடுத்தடுத்துச் சந்தித்துவருகிறார்.

ராஜசேகர ரெட்டியின் பொற்கால ஆட்சியை தெலங்கானாவில் மீண்டும் கொண்டுவருவதே தனது லட்சியம் என்று கூறியிருக்கிறார் ஷர்மிளா. அவரின் தலைமையின் கீழ் செயல்பட்டுவரும் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கொண்ட ராகவ ரெட்டி, புதிய கட்சியைப் பதிவுசெய்வதற்காக டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 8-ல் அவர் பிறந்த தெலங்கானாவின் கம்மம் நகரத்தில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கிடையில் இன்னும் முழுதாக நான்கு மாதங்கள் இருக்கின்றன. அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2023-ல்தான். அதற்குள் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்ற கேள்விகளும் உண்டு.


கருத்து வேற்றுமையா?

ஷர்மிளாவுக்கும் அவரது அண்ணனும் ஆந்திர முதல்வருமான ஜெகன்மோகனுக்கும் இடையில் கருத்து வேற்றுமை நிலவுவதுதான் இந்த அரசியல் பிரவேசத்துக்குக் காரணமாக இருக்கும் என்று முதலில் பேசப்பட்டது. தெலங்கானா அரசியலில் ஜெகனுக்கு விருப்பமில்லை என்றும் ஷர்மிளாவின் முடிவு தன்னிச்சையானது என்றும் கருத்து கூறியிருந்தார் ஜெகனின் அரசியல் ஆலோசகரான சஜ்ஜல ராமகிருஷ்ண ரெட்டி. தெலங்கானாவில் ஷர்மிளா கட்சி தொடங்கினால், அது ஆந்திர பிரதேச அரசியலில் ஜெகனுக்குத் தொல்லைகளை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். அவரது எச்சரிக்கை உண்மையானதும்கூட.

இதற்கிடையில், தங்கை தொடங்கப்போகும் புதிய கட்சிக்கு அண்ணனின் ஆதரவும் இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. நளகொண்டா மாவட்ட ஆதரவாளர்களை அடுத்து ஹைதராபாத், ரங்காரெட்டி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் ஷர்மிளா சந்திக்கிறார். இந்தச் சந்திப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நாளேடான ‘சாக்ஷி’ ஹைதராபாத் பதிப்பு. சந்திப்பு நிகழ்ச்சியைக் குறித்த செய்தித்தாள் விளம்பரங்களில் ஜெகனின் படமோ, கட்சியின் பெயரோ இல்லை. என்றாலும், ஜெகனின் சம்மதத்தோடுதான் இவ்வளவும் நடக்கிறது என்பதற்கு அந்த விளம்பரங்கள் கட்சிப் பத்திரிகையில் வெளிவருவதே போதுமானது.

கட்சி சந்தித்த முதல் தேர்தல்

ராஜசேகர ரெட்டியின் மறைவை அடுத்து ஜெகன்மோகன் நடத்திய நடைப்பயணங்களும், ஆரம்பித்த புதிய கட்சியும் மக்களிடம் ஆதரவைப் பெற்றன. ஆனால், அக்கட்சி முதன்முதலாகத் தேர்தலைச் சந்தித்தபோது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக சிபிஐ தொடுத்த வழக்கில் விசாரணைக் கைதியாகச் சிறையில் இருந்தார் ஜெகன். 2012-ல் இடைத்தேர்தலின்போது தனது தாயார் விஜயாவுடன் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஷர்மிளா. ஏறக்குறைய 3,000 கிமீ தொலைவில் 14 மாவட்டங்களை நடைப்பயணமாகவே சுற்றிவந்தார் அப்போது. தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் 15 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலிலும் வெற்றி.

2019 சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ‘பை பை பாபு’ என்ற முழக்கத்தோடு 11 நாட்கள் பேருந்துப் பிரச்சாரம் நடத்தினார் ஷர்மிளா. மக்கள் வெள்ளத்தில் நீந்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணுக்கு எட்டியவரை கூட்டம். அவரது உணர்ச்சிகரமான பேச்சு, அக்கட்சிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுத்தது. ஷர்மிளாவின் கணவர் அனில் குமார், கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர். கணவருடன் பங்கேற்ற அனுபவம் அரசியல் களத்தில் ஷர்மிளாவுக்கு நன்றாகவே கைகொடுக்கிறது. எவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தையும் ஷர்மிளா தன் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுத்தி வைக்கிறார்.

தனக்கென்று தனிக் கட்சி

அண்ணனுக்கு ஆதரவாகப் பிரச்சாரக் களத்தில் நின்ற ஷர்மிளா, இப்போது தானே தலைவராக மாறியிருக்கிறார். அண்ணனுக்கு ஆந்திரம், தங்கைக்கு தெலங்கானா என்ற கணக்கு. ஆந்திரத்தில், கட்சி தொடங்கிய வேகத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராகி இப்போது முதல்வராகவும் ஆகிவிட்டார் ஜெகன். ஷர்மிளாவுக்கு அது சாத்தியமா? நிச்சயமாக இல்லை. தெலங்கானாவைப் பொறுத்தவரை சந்திரசேகர ராவ் மட்டும்தான் தற்போதைக்கு செல்வாக்குப் பெற்ற ஒரே தலைவர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒவைஸியின் மஜ்லீஸ் கட்சிக்குச் செல்வாக்கு அதிகரித்துவருகிறது, பாஜகவுக்கும் தெலங்கானாவின் மீது ஒரு கண் இருக்கிறது என்றாலும்கூட தெலங்கானா பிரிவினைக்கு முக்கிய காரணகர்த்தா என்பதால் சந்திரசேகர ராவின் இடம் அவ்வளவு எளிதில் அசைக்க முடியாதது.

தெலங்கானாவில் தனது ஆதரவாளர்களைக் கொண்டு ஜெகன் அரசியல் செய்ய நினைத்தால், ஆந்திரத்தில் உள்ள சந்திரசேகர ராவின் ஆதரவாளர்களும் ஆந்திரத்தில் அப்படியொரு முயற்சியைத் தொடங்கக்கூடும். ஏற்கெனவே சந்திரபாபு நாயுடுவுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் ஜெகன், கூடுதலாக இன்னொரு போட்டியையும் சமாளிக்க வேண்டியிருக்கும். சஜ்ஜல ராமகிருஷ்ணாவின் எச்சரிக்கை அதைத்தான் சொல்கிறது.

சந்தேகமும் எதிர்ப்பும்

ஆந்திர அரசியல் கட்சிகள் தெலங்கானாவைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன என்று இப்போதே எதிர்ப்புகளும் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. ஆந்திர பிரதேச அரசியல் கட்சிகள் தெலங்கானாவின் நீருக்கும் மின்சாரத்துக்கும் ஒரு கண் வைத்திருக்கின்றன, அவற்றை உள்ளே அனுமதித்தால் ஆந்திரத்துடன் மீண்டும் தெலங்கானா இணைந்துவிடக் கூடும் என்று காரணங்களையும் கற்பிக்கின்றன. சற்றே அதிகப்படியான கற்பனையாகத்தான் தெரிகிறது.

மாநிலப் பிரிவினைக்கு முன்பாக இன்றைய தெலங்கானா பகுதிகளிலும் ராஜசேகர ரெட்டிக்குத் தீவிர ஆதரவாளர்கள் இருந்தார்கள். அவர்கள் காங்கிரஸ், பாஜக, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்று எந்தக் கட்சியின் பின்னாலும் போகாமல் இன்னும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்கிறார்கள். எனினும், பிரிவினையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், அக்கட்சிக்கு அங்கு அரசியலில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது. அரசியலில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க விரும்பும் ஒய்எஸ்ஆர் ஆதரவாளர்களுக்குப் புதிதாக ஒரு தலைவரும் கட்சியும் தேவை. தலைவர் பொறுப்பேற்க ஷர்மிளா தயாராகிவிட்டார். கட்சியின் பெயர் மட்டுமே இன்னும் அறிவிக்கப்பட வேண்டியது. கட்சிப் பெயரில் ஒய்எஸ்ஆர் என்பதோடு தெலங்கானா என்ற வார்த்தையும் இடம்பெறக் கூடும். ஆந்திரத்தில் ஜெகன் ஏற்படுத்திய சூறாவளியை தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஷர்மிளா ஏற்படுத்துவாரா என்ற கேள்விதான் தெலங்கானாவில் இப்போது பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. பார்க்கலாம்!ஒய்.எஸ்.ஷர்மிளாதெலங்கானாஅரசியல் புயல்YS sharmila

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

chief-minister

யார் முதல்வர்?

கருத்துப் பேழை
arakkonam-murders

அரசே, தன்னிலை உணர்!

கருத்துப் பேழை

More From this Author

x