Last Updated : 01 Nov, 2015 12:25 PM

 

Published : 01 Nov 2015 12:25 PM
Last Updated : 01 Nov 2015 12:25 PM

கலாம் நினைவுகூர்வார் மோடி

அப்துல் கலாமின் ‘எண்:10, ராஜாஜி மார்க் வீடு’ காலிசெய்யப்பட்டு, ராமேசுவரத்துக்கு அவருடைய மூட்டை முடிச்சுகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் புதுடெல்லியில் இருந்தேன்.

முன்னாள் குடியரசுத் தலைவர் என்கிற வகையில் கலாமுக்கு இந்திய அரசு ஒதுக்கிய அந்த வீட்டுக்கெனச் சில முக்கியத்துவங்கள் உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் புது டெல்லி நகரத்தையும் இன்றைய குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் முதல் நம்முடைய ஆட்சியாளர்கள் பிடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மாளிகையையும் நிர்மாணித்த பிரிட்டீஷ் பொறியாளர் எட்வின் லூட்டியன்ஸ், தான் வசிப்பதற்கு என்று திட்டமிட்டு கட்டிய வீடு அது.

கிட்டத்தட்ட 79,297 சதுர அடி நிலத்தில் இரு தளங்களாக 11,775 சதுர அடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வீடு. கலாமின் மறைவுக்குப் பின் அந்த வீட்டை, அவருடைய நினைவகமாக மாற்றக் கோரி மக்கள் மத்தியில் கையெழுத்து இயக்கங்கள் தீவிரமான சமயத்தில்தான் கலாமின் உடைமைகளை ஏறக்கட்டிவிட்டு, தன்னுடைய உலகப் புகழ்பெற்ற கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு அதை ஒதுக்கியிருக்கிறது நரேந்திர மோடி அரசு.

முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரான மகேஷ் சர்மா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாயைத் திறந்தால் கழிவுகளாகக் கொட்டும் வார்த்தைகளுக்காகவே கவனம் பெற்றவர். இந்தியக் கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்துவது தமது அரசின் தலையாயப் பணி என நம்புபவர். “மேற்கத்தியமயமாக்கப்பட்ட எல்லா விஷயங்களையும் நாங்கள் தூய்மைப்படுத்துவோம்; அது வரலாறானாலும் சரி, நிறுவனங்களானாலும் சரி” என்று வெளிப்படையாக அறிவித்தவர்.

“ராமாயணம், கீதையைப் போல பைபிளோ, குர் ஆனோ இந்தியாவின் ஆன்மாவின் மையத்தில் இருப்பவை அல்ல” என்பதைத் தன்னுடைய மறுவாசிப்பின் மூலமாக வெளிக்கொணர்ந்த மாமேதை. “பெண்கள் இரவில் வெளியில் செல்வது என்பது இந்தியக் கலாச்சாரம் அல்ல” என்று பெண்களுக்குப் புதிய கலாச்சார வழி காட்டிய கண்ணியவான். கேவலம் மாட்டிறைச்சி வைத்திருந்தார் எனும் வதந்தியின் பெயரால் தாத்ரியில் முதியவர் இக்லாக் அடித்துக் கொல்லப்பட்டபோது, “அது ஒரு விபத்து” என்றும் “சம்பவம் நடந்த வீட்டில் 17 வயது இளம்பெண் ஒருவரும் இருந்தார்; அவரை யாரும் தொடவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூசாமல் கூறிய பெருந்தகை.

அப்துல் கலாமைப் பற்றியும் அன்னார் கருத்து தெரிவித்திருக்கிறார். “முஸ்லிமாக இருந்தாலும்கூட ஒரு தேசபக்தராக இருந்தவர் கலாம்” என்ற ஒரே வரிச் சான்றிதழ் மூலம் அப்துல் கலாம் வரலாற்றையும் இந்திய முஸ்லிம்களின் வரலாற்றையும் ஒருசேரக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பியவர். மகேஷ் சர்மா இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு உரியவர் என்றாலும், கலாம் இருந்த வீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது டெல்லியில் பாஜகவினரின் புருவங்களையும்கூட உயர்த்தியிருக்கிறது.

பொதுவாக, அரசு அதிகாரத்தில் உச்ச நிலையில் இருப்பவர்களுக்கே இப்படியான இரு தள வீடு ஒதுக்கப்படுவது மரபு. அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி போன்ற மூத்த அமைச்சர்களின் வீடுகளே இதைவிடவும் சிறியவை (சிங்கின் வீடு 4,144 சதுர அடி; ஜேட்லியின் வீடு 7,825 சதுர அடி). எல்லாமே ஒரே தள வீடுகள். எல்லாவற்றுக்கும் மேலாக, வழிகாட்டு விதிகளின்படி, அந்த வீடு மகேஷ் சர்மாவின் பதவிக்கு உரியது அல்ல.

இத்தனையையும் தாண்டிதான் ஒரு இளைய அமைச்சருக்கு, அதுவும் ஒரு இணையமைச்சருக்கு கலாம் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் தேசத்துக்கு மகேஷ் சர்மா ஆற்றிய அளப்பரிய சேவைக்கு பிரதமர் மோடி அளித்திருக்கும் அங்கீகாரமாகவும் பரிசாகவும் இதை நாம் கருதலாம். தன்னுடைய ஒவ்வொரு அசைவின் மூலமாகவும் ஒவ்வொரு செய்தியை அனுப்புபவர் அல்லவா மோடி!

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் முதல் கூடங்குளம் அணு உலை வரை பல விவகாரங்களில் அப்துல் கலாமின் பார்வைகள், கருத்துகள் விமர்சனத்துக்குரியவை. குஜராத் படுகொலைகள், ஈழப் படுகொலைகள் உள்ளிட்ட அரசியல் கொந்தளிப்பு மிகுந்த பல தருணங்களில் அவரிடமிருந்து வெளிப்பட்ட அசாத்திய மவுனம் எந்த வகையிலும் நியாயப்படுத்தக் கூடியது அல்ல. இப்படி பல விஷயங்களைக் கூறலாம். ஆனால், எல்லாவற்றையும் தாண்டியும் நம் காலத்தின் மிகச் செல்வாக்கு மிக்க ஆளுமையாகத் திகழ்ந்தவர் அவர்.

நம்முடைய குடியரசுத் தலைவர்களிலேயே மக்கள் தலைவராகத் திகழ்ந்தவரும்கூட. தனிப்பட்ட வாழ்வில் அவர் கடைப்பிடித்த எளிமையும் பொதுவாழ்வில் அவர் வெளிப்படுத்திய நேர்மையும் நம்முடைய சமகாலத் தலைவர்கள் மத்தியில் இன்றைக்கெல்லாம் மிக மிக அரிதானவை. இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்கு இந்தியக் குழந்தைகளுக்கு ஆதர்ச வழிகாட்டியாகத் திகழக்கூடிய பல பண்புகள் அவருடைய வரலாற்றில் கொட்டிக் கிடக்கின்றன.

அப்துல் கலாமின் பேரன் சலீமிடம் பேசிக்கொண்டிருந்தேன். “கலாமின் உடைமைகள் என்று டெல்லியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 204 பெட்டிகளில் ஆகப் பெரும்பாலானவை புத்தகங்கள்; கிட்டத்தட்ட 6,000 புத்தகங்கள்” என்றார். இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. புத்தகங்கள் நீங்கலாக தான் சம்பாதித்த பணத்தைக்கூடத் தனக்கெனச் செலவிட்டுக்கொள்ள எப்போதும் தயங்கியவர் கலாம். அவர் செய்த பல பொதுக் காரியங்கள் வெளியே பரவலான கவனத்துக்கு வராதவை. தன் சொந்த ஊரான ராமேசுவரத்துக்கு மட்டும் கலாம் செய்ததைச் சொன்னாலே பெரும் பட்டியல் நீளும் என்று சொன்னார் நமது ராமேசுவரம் செய்தியாளர் முஹம்மது ராஃபி.

ராமேசுவரம் கிளை நூலகம் விரிவாக்கத்துக்காக ரூ. 25 லட்சம் வழங்கியிருக்கிறார் கலாம். அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் ராமேசுவரம் அரசு மருத்துவமனை விரிவாக்கப்பட்டபோது, தன்னுடைய பங்களிப்பாக 10 மாதச் சம்பளத்தை அப்படியே அனுப்பிவைத்திருக்கிறார். ராமேசுவரம் தீவின் முழுத் தேவைக்குமான மின்சாரத்தைச் சூரிய சக்தியின் மூலம் சுயமாக உருவாக்கிக்கொள்ளும் கட்டமைப்பை உருவாக்கித்தர வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார்.

இதற்கென ‘ராமேசுவரம் சோலார் மிஷன்’ என்ற திட்டத்தைத் தன்னுடைய பூர்வீக வீட்டிலிருந்து தொடங்கியவர், கம்பிப்பாடு, ராமகிருஷ்ணபுரம், பாம்பன், முந்தல்முனை என்று சுற்று வட்டாரக் கிராமங்கள் பலவற்றிற்குச் சூரிய மின்னுற்பத்தித் திட்டத்தை எடுத்துச் சென்றிருக்கிறார். தன்னுடைய நண்பர் விஜயராகவனுடன் சேர்ந்து 1,200 கடலோடிகளின் வீடுகளுக்குச் சூரிய மின்னுற்பத்திக் கலன்களை அளித்திருக்கிறார். ஒவ்வொரு கலனும் ரூ.5,500 மதிப்புடையது. சகா சிவதாணு பிள்ளையுடன் சேர்ந்து மின் இணைப்பே இல்லாத தனுஷ்கோடியில் 5 கிலோ வாட் சூரிய மின்னுற்பத்தி அமைப்பைச் சொந்த செலவில் உருவாக்கித் தந்திருக்கிறார்.

ராமேசுவரம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 22 அரசுப் பள்ளிகளில் தலா 3 கிலோ வாட் என 66 கிலோ வாட் சூரிய மின்னுற்பத்தி அமைப்புகளை உருவாக்கித் தரும் பணியைத் தொடங்கியிருக்கிறார். இன்னும் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிப்புக்கு, மர வளர்ப்புக்கு என்று நீளமாகச் சொல்லிக்கொண்டிருந்தார் ராஃபி.

நாட்டின் எந்த ஒரு பகுதியிலிருந்து கல்வி உதவி எனக் கேட்டு எந்த மாணவரிடமிருந்து கடிதம் வந்தாலும், உதவுவதைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்திருக்கிறார் கலாம். அவரிடம் சொந்த கார் கிடையாது. ஆனால், ஆதரவற்றவர்களின் சடலங்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதை ஒரு சேவையாகச் செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி உதவி கேட்டு வந்தபோது, சடலத்தை எடுத்துச் செல்ல உதவியாக இனோவா கார் ஒன்றை வாங்கி அனுப்பியிருக்கிறார். இன்னும் எவ்வளவோ அடுக்கலாம்.

இத்தனைக்கும் கலாம் குடும்பம் இன்னும் அவர் பிறந்த வறுமைச் சூழலிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடவில்லை. கலாமின் ஒரு அண்ணன் மகன் பாம்பன் கடற்கரையில், மீன் கடை ஒன்றில் கணக்கு எழுதிக்கொண்டிருக்கிறார். இன்னொரு அண்ணன் மகன் செல்பேசி அட்டைகள் விற்கும் சின்ன கடை வைத்திருக்கிறார். அவருடைய ஒரு அண்ணன் மகள் வசிக்கும் வீட்டை ராஃபி எனக்குக் காட்டினார். சுற்றிலும் இரும்புத் தகரத்தால் அடைக்கப்பட்ட, மண் தரையைக் கொண்ட கூரை வீடு அது. குடும்பத்துக்கு கலாம் செய்யாமல் இல்லை.

ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீட்டை தனது அண்ணன் முத்துமீராவுக்கு அவர் விட்டுக்கொடுத்தார். கலாமின் ஓய்வூதியம், அவர் எழுதிய புத்தகங்களுக்கான ராயல்டியும்கூட அவருக்குத்தான் செல்கிறது. ஏனைய சகோதர, சகோதரிகளின் குடும்பத்தினருக்கும் திருமணம், கல்வி, மருத்துவத் தேவைகள் என வந்தபோதெல்லாம் உதவியிருக்கிறார். “ஆனால், தாத்தா தன்னுடைய பதவிகளின் வாயிலாகச் சின்ன அளவில்கூட அதிகார துஷ்பிரயோகம் செய்துவிடக் கூடாது என்பதில் எப்போதும் கறாராக இருப்பார்” என்று கூறினார் சலீம். “மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறாயா, வா, எப்படிப் படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறேன்.

ஆனால், படித்து இடம் பிடிப்பது உன் பொறுப்பு. வழிதான் நான் காட்டுவேன்; பயணம் உன் கால் வாயிலாகவே இருக்க வேண்டும் என்பார். எங்கள் குடும்பங்களும் அப்படிதான் இருந்தன. அவரைத் தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதில் எல்லோருமே கவனமாக இருப்போம்” என்றார் சலீம்.

இன்றைக்கெல்லாம் எத்தனை பேர் இப்படி இருப்பார்கள்? ஆவணப்படுத்தப்பட வேண்டியது கலாமின் வாழ்க்கை!

யாகூப் மேமன் தூக்குத் தண்டனையின் பின்னணியில், அப்துல் கலாம் மரணத்துக்கு மோடி அரசு கொடுத்த முக்கியத்துவம் உருவாக்கிய ‘நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்’ விவாதம் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. தனது சிறுபான்மையின விரோதப் போக்கை மறைத்துக்கொள்ள கலாமைத் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டது பாஜக.

ஆனால், அப்படிப்பட்ட பாவனை அரசியலைக்கூட அவர்களால் கொஞ்ச காலத்துக்கு மேல் தொடர முடியாத அளவுக்கு அவர்கள் மோசமாகிவிட்டதையே ‘அப்துல் கலாமின் டெல்லி வீடு நினைவில்லமாக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை பாஜக நிராகரித்திருப்பது காட்டுகிறது.

வாஜ்பாய் காலத்தில் அறிவிக்கப்பட்டதுபோல, புது டெல்லியில் இனி தலைவர்கள் வசித்த வீடுகளை நினைவில்லமாக மாற்றுவதில்லை என்று கடந்த ஆண்டு மோடி அரசு அறிவித்தது (எனினும், மாற்ற முடியாத முடிவு அல்ல இது). கூடவே, காந்தி தவிர, ஏனைய தலைவர்கள் பிறந்த நாள் நினைவு நாட்களில் அரசு அஞ்சலி செலுத்தும் மரபையும் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்தது. காங்கிரஸ் தலைவர்கள் மீதான காழ்ப்புணர்வைக் கக்கும் மறைமுக முயற்சியே இது. காந்தி நீங்கலாக புது டெல்லியில் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, பாபு ஜெகஜீவன் ராம் ஆகியோர் வசித்த வீடுகளே நினைவில்லங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன.

மக்களின் குடியரசுத் தலைவர், குழந்தைகள் உலகுக்கு மிக நெருக்கமாக இருந்தவர், அடித்தட்டிலிருந்து மேலே வந்தவர், அறிவியலாளர், எளியவர், நேர்மையாளர், மதச்சார்பின்மைக்கும் மத நல்லிணக்கத்துக்கும் உதாரணர் என்பன போன்ற காரணங்களைத் தாண்டி கலாமுக்கு ஏன் தலைநகர் புது டெல்லியில் நினைவில்லம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு இரு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. 1. இந்திய வரலாற்றுக்குச் சிறுபான்மைச் சமூகம் அளித்திருக்கும் அரிய பங்களிப்புக்கான குறைந்தபட்ச அங்கீகாரப் பிரதிநிதித்துவமாக அது இருக்கும். 2. விளிம்புப் பங்களிப்பின் பிரதிநிதித்துவம்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத், கான் அப்துல் கஃபார் கான் தொடங்கி சுதந்திர நவீன இந்தியாவின் உருவாக்கத்துக்கு இதுவரை எத்தனையோ சிறுபான்மையினத் தலைவர்கள் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். அதையெல்லாம் நினைவுகூரும் வகையில், தலைநகரில் அவர்களுக்கு நினைவில்லம் அமைக்கும் வாய்ப்பு அப்போது நமக்குக் கிடைக்கவில்லை. இப்போது அப்துல் கலாம் ஒரு அற்புதமான வாய்ப்பு. இந்த தேசத்துக்கு எப்படியெல்லாம் சிறுபான்மைச் சமூகங்கள் பங்களித்திருக்கின்றன என்பதை எதிர்கால மகேஷ் சர்மாக்கள் உணர ஒரு வாய்ப்பு.

அதேபோல, தெற்கிலிருந்து தலைநகரை நோக்கிச் சென்றவர்களில் எல்லைகளைக் கடந்து எல்லோர் மனதிலும் ஒட்டிக்கொண்டவர் கலாம். இந்தியா என்பது புது டெல்லியில் மட்டும் இல்லை; வடக்கில் மட்டும் இல்லை; அதன் எல்லையின் விளிம்பிலிருந்தும் அது முகிழ்கிறது என்பதை உணர்த்த ஒரு வாய்ப்பு. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு நாளும் தலைநகரம் நோக்கிச் சுற்றுலா வரும் பல நூற்றுக்கணக்கான மக்களிடம் இந்தச் செய்திகளையெல்லாம் கொண்டுசெல்ல ஒரு வாய்ப்பு.

ஆனால், விளிம்பிலிருந்து தலைநகரம் நோக்கி வந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவரின் நினைவுகளை மீண்டும் அவர் பிறந்த ஊர் நோக்கியே திருப்பியனுப்புவது விளிம்பை நோக்கி அவரைத் திருப்பியடிப்பதாகவே அமையும். கிட்டத்தட்ட 26 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்து கிடக்கும் ‘லூட்டியன்’ஸ் மாளிகைகள் பிரதேச’த்தில் கலாமின் நினைவுக்காக ஒரு வீட்டை ஒதுக்க நம்மால் முடியவில்லை என்றால், இனி யாருக்கு ஒதுக்கப்போகிறோம்?

நினைவுகள் அழிந்துவிடும் என்று அரசாங்கம் நினைக்கலாம். அப்துல் கலாம் நினைவுகளை மட்டும் அல்ல; கூடவே மகேஷ் சர்மா, நரேந்திர மோடி நினைவுகளையும் என்றென்றைக்கும் சொல்லும் நினைவுச்சின்னமாக இருக்கும் எண்: 10, ராஜாஜி மார்க்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x