Published : 22 Nov 2015 02:09 PM
Last Updated : 22 Nov 2015 02:09 PM

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்..? - கால் நூற்றாண்டாக நிறைவேறாத கனவுத் திட்டம்

தமிழகத்தின் தென்கோடியான குமரியையும், வடக்கிலுள்ள தலைநகர் சென்னையையும் இணைக்கக்கூடிய வழித்தடத்தின் மத்தியில் அமைந்துள்ளது திருச்சி.ஆன்மிகம், தொழில் துறை, கல்வி, மருத்துவம், சுற்றுலா என அனைத்து துறைகளிலும் அசுரவளர்ச்சி அடைந்துவரும் இம்மாநக ரம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைவதற் காக கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் காத்திருக்கிறது.

மாநிலத்தின் எந்த ஒரு பகுதிக்கும் சில மணி நேரங்களில் பயணித்துவிட முடியும் என்பதால் அரசுப் போக்குவரத்து கழகம், தனியார் நிறுவனங்கள் சார்பில் திருச்சிக்கு அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இவற்றை நிறுத்தி எடுத்துச் செல் வதற்காக திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் 6.60 ஏக்கர் பரப்பளவில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல்...

மாநகராட்சியின் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, நாள்தோறும் சுமார் 3,100 பேருந்துகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இங்கு வந்து செல்வதாகவும், 1.50 லட்சம் பயணிகள் இதனை பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், இவ்வளவு பேருந்துகள், பயணிகளை சமாளிக்கும் வகையில் உட்கட்டமைப்பு, அடிப் படை வசதிகள், சர்வீஸ் ரோடு போன்றவை இல்லாததால், மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதுதான் இப்பிரச்சி னைக்குத் தீர்வுகாண ஒரே வழி என்பது தெரிந் திருந்தும், அதற்கான பணிகளைத் தொடங்கு வதில் இன்னமும் இழுபறி நீடித்து வருகிறது. இடத்தை தேர்வு செய்வதில் நிலவும் குழப்பமே இதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

தேவதானம் திட்டம் தோல்வி

1990-ம் ஆண்டிலிருந்தே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான கோரிக்கை பொது மக்களிடம் இருந்துவந்தது. 1994-ல் திருச்சி மாநகராட்சியான நிலையில், சத்திரம் பேருந்து நிலையத்தையொட்டி கரூர் பைபாஸ் சாலையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் 2004-ல் சாருபாலா தொண் டைமான் மேயராக இருந்தபோது, சென்னை பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள தேவதானம் பகுதியில் தனி நபர்களிடமிருந்து சுமார் 40 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்டார். அதில் அப்போதைய அதிமுக அரசுக்கு விருப்பமில்லை. மேலும், காவிரிக் கரையிலிருந்து 200 மீட்டருக்குள் அமைந் திருந்ததால், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் காரணம்காட்டி அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்தது. எனவே, தேவதானம் திட்டமும் தோல்வியில் முடிந்தது.

திமுக அரசு தேர்ந்தெடுத்த 244 ஏக்கர்

அதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. பேருந்து நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்ய அரசு சார்பில் மாநகராட்சி, மாவட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள், திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர், மதுரை சாலையில் பஞ்சப்பூர், மன்னார்புரத்திலுள்ள ராணுவ பயிற்சி மையம், புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு, தஞ்சாவூர் சாலையில் அரிய மங்கலம் உரக்கிடங்கு ஆகிய இடங்களைப் பரிந்துரைத்தனர். இதில், பஞ்சப்பூர் தேர்வானது. அங்கு 244.28 ஏக்கர் பரப்பளவில், பேருந்து நிலையம் அமைக்க திமுக அரசு முடிவு செய்தது. அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டா லின் அதற்கான இடத்தைப் பார்வையிட்டுச் சென்றார். ஆனால், அந்தசமயத்தில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

நம்பிக்கை தந்த ஸ்ரீரங்கம் தொகுதி!

2011-ம் ஆண்டு அதிமுக அரசு அமைந்தது. திருச்சி மாநகருக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் தொகுதி யிலிருந்து, ஜெயலலிதா எம்எல்ஏவாக தேர்வான தால், இம்முறை ஒருங்கிணைந்த பேருந்து நிலை யம் அமைக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கை திருச்சி மக்களிடம் அதிகரித்தது. அதை உறுதிபடுத்தும் வகையில், அரசு அதிகாரிகளும் இப்பணியில் வேகம்காட்டினர். திமுக கொண்டுவந்த பஞ்சப்பூர் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அதிமுக நிர்வாகிகள் உதவியுடன் அதிகாரிகள் புதிதாக இடம் தேடினர்.

அதன்பேரில், பிராட்டியூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் எதிர்புறத் திலுள்ள காலியிடம், பொன்மலைப்பட்டி செல்லும் சாலையிலுள்ள சிறைத் துறைக்குச் சொந்தமான இடம், ஜி-கார்னர் மைதானத்துக்கு எதிரே மாடு வதைக்கூடத்துக்கு அருகிலுள்ள நிலம் உட்பட சிலவற்றைப் பட்டியலிட்டனர். இவற்றில் எந்த இடத்துக்கும் அரசிடமிருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, திருச்சியின் கனவுத் திட்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது, கனவாகவே தொடர்கிறது.

தடைக்கு காரணம் ரியல் எஸ்டேட்?

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் க.சுரேஷ் கூறும்போது, “ஒருங்கிணைந்த பேருந்து நிலை யத் திட்டம் நிறைவேறாததற்கு அதிமுக, திமுக வினரின் சுயநலம்தான் காரணம். இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது தங்களுக்கு விருப்ப மான இடங்களில், இத்திட்டத்தை நிறைவேற்றி, அதனருகிலுள்ள நிலங்கள் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் சம்பாதிக்க நினைக் கின்றனர். இதில் ஏற்படும் பிரச்சினையால் திட்டமே தடைபடுகிறது. மக்களுக்குத் தேவை யான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இரு கட்சியினருக்கும் இல்லை. இவர்களால் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டி யுள்ளது” என்றார். இதேபோல மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள விடுதிகளின் உரிமை யாளர்கள் தலையீடும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தாமதமாவதற்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

மறக்கப்படும் தேர்தல் வாக்குறுதி

தமிழ்தேசிய பேரியக்க மாநகரச் செயலாளர் கவித்துவன் கூறும்போது, “ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் அகிலாண் டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட பல முக்கிய கோயில்களும், பெல், ஓ.எஃப்.டி, எச்ஏபிபி, பொன்மலை ரயில்வே பணிமனை உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களும், அவை சார்ந்த நூற்றுக் கணக்கான தொழிற்சாலைகளும் உள்ளன. இதுதவிர என்.ஐ.டி, ஐ.ஐ.எம், தேசிய சட்டப்பள்ளி உட்பட ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சுற்றுலாத் தலங்கள் இருப்பதால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் திருச்சிக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால், சென்னை கோயம்பேடு, மதுரை மாட்டுத்தாவணிபோல, திருச்சியில் ஒருங் கிணைந்த பேருந்து நிலையம் இல்லாததால், மாநகரில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை சமாளிப்பதற்காக தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் ஆங் காங்கே சாலையோரங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைக்கின்றனர். அவற்றால் பயணிகள் படும் துயரங்களுக்கு அளவே இல்லை. அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையாக விளங்கும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திட்டத்தை, ஆட்சிக்கு வந்தபின் மறந்துவிடுவதும், கிடப்பில் போடுவதும், காலம் தாழ்த்துவதும் பொறுப் பற்ற செயல். மக்கள் மீது அரசுக்கு அக்கறையில்லை என்பதையே இச்செயல் காட்டு கிறது. இனியாவது இத்திட்டத்தை உடனே செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இருமடங்கு நிறுத்தப்படும் பேருந்துகள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்க (சிஐடியு) திருச்சி மண்டல பொதுச் செயலாளர் எஸ்.சிவானந்தம் கூறும் போது, “மத்திய பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 77 பேருந்துகளை மட்டுமே நிறுத்தமுடி யும். ஆனால், வேறுவழியின்றி தற்போது 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன. அத்துடன் பேருந்து நிலைய சாலை களில் ஆம்னி பேருந்துகளை நிறுத்திக்கொள்வ தாலும், கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பாலும் இப்பகுதியில் தினமும் நெரிசல் ஏற்படுகிறது. இரவில் பேருந்தை இயக்கவே முடியவில்லை.” என்றார்.

காலம் கனியும் நாள் எதுவோ?

மாநிலத்தின் மையப் பகுதியாக இருப்பதால் திருச்சியை தமிழகத்தின் 2-வது தலைநகராக்க 1983-ம் ஆண்டே முயற்சி செய்தார் அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அதேபோல, தன்னை முதன்முதலில் சட்டப்பேரவைக்கு அனுப்பிய மாவட்டம் (குளித்தலை தொகுதியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திருச்சி மாவட் டம்) என்றும், திருப்புமுனையை ஏற்படுத் தும் இடம் திருச்சி என்றும் பெருமையாகச் சொல்லும் திமுக தலைவர் கருணாநிதி, ரங்கம் எனது பூர்வீகம் என்று கூறி அத்தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்வரான ஜெய லலிதா என தமிழகத்தின் அண்மைக்கால அரசியல் ஆளுமைகளின் ஆழ்மனதில் நீங்கா இடம் பிடித்த திருச்சியின், கால் நூற்றாண்டு கோரிக்கை நனவாகப் போகும் நாள் எந்நாளோ?

அரசு நடவடிக்கை எடுக்கவில்லை…

முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என 1990-ம் ஆண்டு முதலே பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த கோரிக்கை அடுத்த கட்டத்தை எட்டாததால், முதல்கட்டமாக தற்போதுள்ள மத்திய பேருந்து நிலையத்தையே விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கென பேருந்து நிலையத்தையொட்டியிருந்த ரயில்வேக்கு சொந்தமான நிலத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நேரத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ்குமார் திருச்சிக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்து, இந்த கோரிக்கையை முன் வைத்தோம். தொடர்ந்து நான் டெல்லிக்கு சென்று ரயில்வே அமைச்சக அதிகாரிகளை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். இதையடுத்து, நிதிஷ்குமார் மற்றும் அதன் பிறகு ரயில்வே இணையமைச்சராக இருந்த ஆர்.வேலு ஆகியோரின் ஒத்துழைப்பால் 2.77 ஏக்கர் ரயில்வே இடம் ரூ.5.66 கோடிக்கு வாங்கப்பட்டது. 2001- 06 அதிமுக ஆட்சியில் பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு, 2006 ஜூன் மாதத்தில் திமுக ஆட்சியில் விரிவாக்கப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது, பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2008-ல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதன்பிறகு பேருந்து நிலையத்தில் ஓரளவுக்கு நெருக்கடி குறைந்தது. ஆனாலும், திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது மிகவும் அவசியமானது. திருச்சி மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் தேவையான இத்திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சியோ, மாவட்ட நிர்வாகங்கமோ, அரசோ முழுமையான அக்கறையுடன் நடவடிக்கை எடுக்கவில்லை.

6 இடங்கள் அரசின் பரிசீலனையில்...

திருச்சி மாநகர மேயர் அ.ஜெயா

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க நகரை ஒட்டிய பகுதிகளில் 6 இடங்களைத் தேர்வு செய்து அரசுக்கு திட்ட கருத்துருக்களை அனுப்பியுள்ளோம். இவை அரசின் பரிசீலனையில் உள்ளன. உரிய இடத்தில் பேருந்து நிலையத்தை அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் விரைவில் வெளியிடுவார். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுவது உறுதி.

முடிவு தமிழக அரசின் கையில்...

மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென கடந்த திமுக ஆட்சியின்போதும், தற்போதைய அதிமுக ஆட்சியிலும் மாநகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பிலும் சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இறுதி முடிவை தமிழக அரசுதான் அறிவிக்க வேண்டும்.

பஞ்சப்பூர்தான் ஏற்ற இடம்

விமான, ரயில், சாலை பயணிப்போர் கூட்டமைப்பின் தலைவர் எம்.சேகரன்

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை இதுவரையில் எந்த ஆட்சியாளர்களும் செய்யவில்லை. ஒரு இடத்தை தேர்வு செய்வதும், அதை மற்றவர் எதிர்ப்பதுமாகவே அரசியல் கட்சிகள் இத்திட்டத்தை முடக்கி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இந்த பேருந்து நிலையம் திருச்சி மக்களுக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதிலுமிருந்து திருச்சிக்கும், திருச்சி வழியாக செல்லும் மக்களுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. புறநகர் பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமையும்போது மாநகரில் தேவையில்லாத வாகன நெரிசல் குறையும்.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க பஞ்சப்பூர்தான் ஏற்ற இடம். ஏனெனில் அனைத்து திசைகளிலிருந்துவரும் பேருந்துகளை இங்குதான் ஒருங்கிணைக்க முடியும். இதை ஆட்சியாளர்கள் விரைந்து செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு.

ஸ்வரண்சிங் தேர்வும் பஞ்சப்பூர்தான்

தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்புக் குழு செயலாளர் எஸ்.புஷ்பவனம்

திருச்சியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்துள்ளனர். அதற்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மிகவும் அவசியமானது. பல ஆண்டுகளாகப் பேசப்பட்டுவரும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வராததற்கு முக்கிய காரணம் இரு பெரும் அரசியல் கட்சிகளில் செல்வாக்குடையவர்கள் அந்த பகுதிகளில் பெரிய அளவில் இடம் வாங்கிப் போட்டிருப்பதுதான். மதுரை சாலையில் உள்ள பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையத்தை அமைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த ஸ்வரண்சிங் அண்மையில் திருச்சிக்கு வந்திருந்தபோது கூட, “இந்த இடத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலை யத்தை அமைத்து, மீதமுள்ள இடத்தில் ஒரு குட்டி நகரத்தையே உருவாக்கலாம்” என்று கூறினார்.

அனைத்து அடிப்படை மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக இந்த பேருந்து நிலையம் அமைய வேண்டும். அதற்கான பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருச்சிக்கு தயாரான முன்மாதிரி திட்டம்!

“பேருந்துகளை நிறுத்தி எடுத்துச் செல்லும் இடமாக மட்டுமின்றி, பயணிகளுக்கு உரிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, பஞ்சப்பூரில் சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் தங்கும் விடுதிகள், ஷாப்பிங் மால், உணவகங்கள், அடுக்குமாடி வாகன காப்பகம், தீயணைப்பு நிலையம், துணைமின் நிலையம், மருத்துவமனை, திரையரங்கம், அஞ்சல் அலுவலகம், ரயில்வே முன்பதிவு மையம், ஆம்னி பேருந்து நிலையம், கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவை அமைக்கப்பட வேண்டும் என திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இதை செயல்படுத்தி இருந்தால் தமிழகத்துக்கே முன்மாதிரியாக அத்திட்டம் இருந்திருக்கும். புதிதாகத் தேர்வு செய்யப்பட உள்ள இடத்தில் என்னென்ன வசதிகள் அமைய உள்ளன என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 ஆண்டுகளில் அதிமுக செய்திருக்கலாமே?

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு

அதிமுக, திமுக என இரு ஆட்சியிலும் ஏற்கெனவே 3 முறை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றதால், பணிகளை மேற்கொண்டு செய்ய முடியவில்லை.

கடந்த திமுக ஆட்சியின்போது, எப்படியாவது திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைத்துவிட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டோம். சென்னை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர் ஆகிய முக்கிய நெடுஞ்சாலைகள், சுற்றுச்சாலைகளை இணைக்கும் வகையிலும், நகருக்கு சற்று வெளியே விமானநிலையம், ரயில் நிலையங்களுக்கு அருகிலும் அமைந்திருந்ததால் பஞ்சப்பூரைத் தேர்வு செய்தோம். பஞ்சப்பூரில் மாநகராட்சிக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. தனியார் நிலங்களும் உள்ளன. எனவே, பல புதிய திட்டங்களுடன், நாட்டிலேயே முன்மாதிரி பேருந்து நிலையத்தை அங்கு அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கியது. அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு ஒப்புதல் அளித்ததுடன், நேரில் வந்தும் ஆய்வு செய்தார். அந்த சமயத்தில் ஆட்சி மாறியதால், திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் உருவாகியிருந்தால், திருச்சி இன்னும் விரிவடைந்திருக்கும். மாநகரில் நெரிசல் குறைந்திருக்கும். பஞ்சப்பூரைச் சுற்றி புதிய நகரம் உருவாகியிருக்கும். ஆனால், நாங்கள் தேர்வு செய்தோம் என்ற காரணத் துக்காக அங்கு பேருந்து நிலையம் அமைப்பதை அதிமுகவினர் நிறுத்திவிட்டனர்.

ஆட்சி மாறிய பிறகு, அதிமுகவினர் 5 ஆண்டுகளில் வேறு ஏதேனும் இடத்தையாவது தேர்வுசெய்து, அங்கு பேருந்து நிலையத்தை அமைத்திருக்க வேண்டியதுதானே? நாங்கள் ஒன்றும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே? மக்க ளின் நலனுக்காக தொலைநோக்குப் பார்வை யுடன், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை, அதற்குத் தகுதியான எந்த இடத்தில் அமைத்தாலும் அதை வரவேற்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x