Last Updated : 16 Feb, 2021 03:12 AM

 

Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

தடுப்பூசி போட்ட பின்னும் நான் முகக்கவசம் அணிகிறேன், ஏன்?

என்னிடம் சிகிச்சைக்கு வந்த பெரியவர் ஒருவர், “நீங்கள் ஏற்கெனவே கரோனாவுக்குத் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்கள். பிறகு ஏன் முகக்கவசம் அணிகிறீர்கள்?” என்று எதார்த்தமாகக் கேட்டார். இந்தச் சந்தேகம் அந்த முதியவரைப் போல அநேகருக்கும் இருக்கலாம். அதனால், அவருக்கு நான் சொன்ன பதிலை இங்கு பதிவுசெய்கிறேன்.

என்ன காரணம்?

உலக அளவில் இப்போது அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி பெற்று முன் களப் பணியாளர்களுக்கும் முதியவர்களுக்கும் செலுத்தப்படும் எல்லாத் தடுப்பூசிகளும் 100% பாதுகாப்பானவை என்பதும், அவை கரோனாவைத் தடுக்கும் என்பதும் உறுதிசெய்யப்பட்ட உண்மைகள். அதே நேரம் அவை எந்த அளவுக்கு கரோனாவைத் தடுக்கும் என்பதற்கான ‘ஆற்றல்’ (Efficacy) அளவு ஒன்றுபோல் இல்லை. உதாரணமாக, சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ 84%; ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ 91.6%; மாடர்னா தடுப்பூசி 94%; பைசர் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசி 95% என்ற வரிசையில் அவற்றின் ஆற்றல் அளவுகள் உள்ளன. இதன் பொருள் என்ன? எந்தத் தடுப்பூசியும் 100% ஆற்றல் உள்ளதாக இல்லை; அதேவேளையில் கரோனா தடுப்பூசிக்கு 50% ஆற்றல் இருந்தாலே போதும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதால் இந்தத் தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி பெற்றுவிட்டன. நான் போட்டுக்கொண்ட ‘கோவிஷீல்டு’க்கு 84% ஆற்றல் உள்ளது என்றால், மீதி 16% பேருக்கு அந்த ஆற்றல் இருப்பது உறுதிசெய்யப்படவில்லை என்றுதானே பொருள்? அந்த 16% பேரில் நானும் இருந்துவிடக் கூடாதல்லவா? அதனால்தான் இன்னும் நான் முகக்கவசம் அணிகிறேன். எனக்கு எதிரில் இருப்பவர்களுக்கு அறிகுறிகளற்ற கரோனா தொற்று இருந்தால், அவர்களிடமிருந்து எனக்குப் பரவுவதைத் தடுப்பதற்கும் நான் முகக்கவசம் அணிகிறேன்.

தடுப்பூசியின் ஆயுள் என்ன?

தடுப்பூசியின் ‘ஆற்றல்’ என்பது அது ஆய்வுக் கட்டங்களில் உள்ளபோது கணிக்கப்படுவது. அதன் ‘ஆயுள்’ (Effectiveness) என்பது அது பொதுப் புழக்கத்துக்கு வந்த பிறகு கணிக்கப்படுவது. பொதுப்புழக்கத்துக்கு வரும் தடுப்பூசியானது பயனாளியின் உணவூட்டம், நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு, சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற துணை நோய்கள் காரணமாகத் தன் ஆற்றலைப் படிப்படியாக இழந்துவிடுகிறது. அப்போது அதன் ஆயுள் குறைந்துவிடுகிறது.

இதை அறிவதற்குப் புதிய தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து கண்காணித்துவர வேண்டும். உதாரணமாக, தட்டம்மைத் தடுப்பூசி நம் ஆயுளுக்கும் பலன் தருவதாகவும், நிமோனியா தடுப்பூசி 5 ஆண்டுகளுக்கே பலன் தருகிறது என்றும் இந்த அடிப்படையில்தான் அறிவிக்கப்பட்டது. கரோனா தடுப்பூசிகளின் ஆயுளைக் கணிக்க இப்போது நேரம் இல்லை என்பதால், அவற்றின் ஆயுளைத் தெரிவிக்க முடியவில்லை. ஆறு மாதங்களிலிருந்து ஓராண்டு வரைக்கும் ஆயுள் இருக்கலாம் என அனுமானித்துள்ளனர். அதற்குப் பிறகு ‘ஊக்கத் தடுப்பூசி’ (Booster dose) தேவைப்படலாம். அந்த ஓராண்டுக்குள் பொதுமக்களில் 70% பேருக்காவது கரோனா தடுப்பூசியைப் போட்டுவிட்டோமானால் நாம் முகக்கவசம் அணியத் தேவையில்லை. ஆனால், அப்படிப் போடப்பட வாய்ப்பில்லை. ஆகவேதான் நான் இன்னும் முகக்கவசம் அணிகிறேன்.

இரண்டாம் தவணை முக்கியம்

பொதுவாக, கரோனா தடுப்பூசிகளை 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டாவது தவணை போட்டுக்கொண்ட பிறகு இரண்டிலிருந்து நான்கு வாரங்கள் கழித்துத்தான் கரோனாவுக்கு எதிரான முழுமையான தடுப்பாற்றல் பயனாளிகளுக்குக் கிடைக்கும். நான் இரண்டாம் தவணையைப் போட்டுக்கொள்ள நாள் இருக்கிறது. அதனாலும், நான் முகக்கவசம் அணிகிறேன்.

அடுத்ததாக, ஒரு தடுப்பூசி இரண்டு வழிகளில் நோயைத் தடுக்க வேண்டும். ஒன்று, அந்தத் தடுப்பூசி எந்த நோய்க்கு எதிராகப் போடப்படுகிறதோ, அந்த நோய் பயனாளிக்கு ஏற்படக் கூடாது. மற்றொன்று, அந்த நோய் அவரிடமிருந்து அடுத்தவர்களுக்குப் பரவுவதையும் அது தடுக்க வேண்டும். இதற்குச் சிறந்த உதாரணமாக 97% ஆற்றல் உள்ள எம்.எம்.ஆர். தடுப்பூசியைச் சொல்லலாம். இது நோயையும் தடுக்கும்; நோய் பரவாமலும் தடுக்கும். கரோனா தடுப்பூசிகளைப் பொறுத்த அளவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் கரோனாவால் நோய் வராது என்பதுதான் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்களுக்கு அறிகுறிகளற்ற கரோனா தொற்று இருந்தால், அடுத்தவர்களுக்குப் பரவாது என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆகவேதான், நான் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் முகக்கவசம் அணிகிறேன்.

இன்னும் சொல்லப்போனால், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனா கிருமிகள் உடலுக்குள் புகுந்த பிறகுதான் அதற்கு ‘எதிரணுக்கள்’ உருவாகும். அந்த எதிரணுக்கள் கரோனா நோய் வராமல் தடுக்கும். கரோனா கிருமிகள் உடலுக்குள் புகுவதற்கு முன்பு, அவற்றின் நுழைவு வாசலான மூக்கில் இருக்கும்போது தும்மல், இருமல் மூலம் அவை வெளியேறி அருகில் இருப்பவர்களைத் தொற்றுமல்லவா? அதைத் தடுப்பதற்காகவும் நான் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியமாகிறது.

கரோனா வைரஸ் கடந்த ஓராண்டில் மட்டும் 4,000 புதிய மாற்றங்களைக் கண்டுள்ளது. அந்தத் திடீர் மாற்ற விளைவை ‘வேற்றுருவம்’ (Variant) என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணத்துக்கு, அண்மையில் பிரிட்டனில் பரவி வரும் ‘VUI–202012/01’ எனும் கரோனா வைரஸ். இனிமேலும் பல வேற்றுருவங்களில் கரோனா தொற்று பரவலாம். இவை வேகமாகப் பரவும் தன்மையுள்ளவை. இப்போதுள்ள தடுப்பூசிகள் இவற்றைத் தடுக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். ஆகவே, இதேபோன்ற வைரஸ்கள் எனக்குப் பரவாமல் தடுக்கவும் நான் முகக்கவசம் அணிகிறேன்.

“தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முகக்கவசம் அணிய வேண்டுமென்றால், தடுப்பூசியால் என்ன பலன்?” - அந்த முதியவர் கேட்ட அடுத்த கேள்வி இது. அதற்கு நான் சொன்னது: “தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனா உண்டாக்கும் ‘கோவிட்-19’ வராது; அப்படியே வந்தாலும் நோய் மிதமாக இருந்துவிட்டு மறைந்துவிடும்; மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு அது தீவிரம் காட்டாது; உயிருக்கு ஆபத்து ஏற்படாது.”

எப்போது முகக்கவசத்திலிருந்து விடுதலை?

எல்லோரும் பதில் தேடும் முக்கியமான கேள்வி இது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் 70% மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டால் ‘சமூக எதிர்ப்பு சக்தி’ கிடைத்துவிடும். ஒருவரிடமிருந்து அடுத்தவருக்கு நோய் பரவும் ‘சமூகப் பரவல்’ நின்றுவிடும். அப்போது உலக சுகாதார நிறுவனம் ‘கரோனா பெருந்தொற்று ஒழிந்தது’ என அறிவிக்கும். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அன்றுதான் முகக்கவசத்திலிருந்து விடுதலை கிடைக்கும். அந்த நிலைமை ஏற்படுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அதுவரை நாம் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்து கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

- கு. கணேசன், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x