Last Updated : 12 Feb, 2021 07:45 AM

 

Published : 12 Feb 2021 07:45 AM
Last Updated : 12 Feb 2021 07:45 AM

இது வடசென்னை மெட்ரோ ரயில்!

கூவம் நதி சென்னை நகரை இரண்டாகப் பிரிக்கிறது. நதிக்கு வடபுறம் வடசென்னை, தென்புறம் தென்சென்னை. இந்தப் பிரிவு புவியியல்ரீதியானது மட்டுமில்லை. நகரில் செல்வமும் செல்வாக்கும் உள்ளவர்கள் ஆற்றின் தென்புறம்தான் வசிக்கிறார்கள். பேரங்காடிகளும் வளாகங்களும் சபாக்களும் மேம்பாலங்களும் நகரின் தென்புறமே அமைந்திருக்கின்றன. மெட்ரோ ரயிலின் முதற்கட்டமும் இந்தப் பொதுவிதிக்கு விலக்காக அமையவில்லை.

முதற் கட்டத்தில் இரண்டு தடங்கள், 32 ரயில் நிலையங்கள். இதில் ஆற்றின் வடபுறம் அமைந்தவை மூன்று நிலையங்கள் மட்டுமே-பாரிமுனை (உயர் நீதிமன்றம்), மண்ணடி, பழைய வண்ணாரப்பேட்டை. எனில், பிப்ரவரி 14 அன்று பிரதமர் மோடி கொடியசைத்துத் திறந்து வைக்கப்போகும் தடம்-1-ன் நீட்சி, முற்று முழுதாக வடசென்னையை ஊடறுத்துச் செல்லும். இந்த நீட்சிப்பாதை 9 கிமீ நீளமுடையதாக இருக்கும். வண்ணாரப்பேட்டையில் தொடங்கி விம்கோ நகர் வரை எட்டுப் புதிய நிலையங்களைக் கொண்டிருக்கும்.

செல்வச் செழிப்பில் தென்சென்னை முந்திக் கொண்டிருக்கலாம். ஆனால், வடசென்னை பாரம்பரியச் சிறப்பு மிக்கது. அகில இந்தியாவிலும் முதல் நவீன நகரம் கால் கொண்டது வடசென்னையில்தான். ஆண்டு 1639. நாள்: ஆகஸ்ட் 22. அன்றுதான் விஜயநகர சாம்ராஜ்யத்திடமிருந்து கிழக்கிந்திய கம்பெனி, இப்போதைய வடசென்னையில் மதராசபட்டினம் எனும் கிராமத்தை விலைக்கு வாங்கியது. சமீப காலமாக இந்த நாள் சென்னை நகரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்பட்டுவருகிறது.

சென்னை உருவாக்கத்தில் பங்காற்றிய பாரி, பின்னி, ஆர்பத்நாட் முதலான பெயர்கள் வடசென்னையோடு பிணைந்தவை. சென்னையின் பல பாரம்பரியக் கட்டிடங்கள் வடசென்னையில்தான் உருவாயின. புனித ஜார்ஜ் கோட்டை, உயர் நீதிமன்றம், ஆண்டெர்சன் தேவாலயம், ஒய்.எம்.சி.ஏ, மெட்ராஸ் வங்கி (இப்போது இந்திய ஸ்டேட் வங்கி), அஞ்சலகம் முதலான கட்டிடங்கள் வடசென்னையின் பழம் பெருமையை மௌனமாகப் பறை சாற்றிக்கொண்டிருக்கின்றன.

புதிய நிலையங்கள் எட்டு

புதிய மெட்ரோ ரயில் தடத்தின் வழியாகப் பயணித்தால் வடசென்னை வரலாற்றின் ஒரு கீற்று தெரியவரும். பழைய வண்ணாரப்பேட்டை நிலையத்தைத் தாண்டினால் நீட்டிக்கப்படும் புதிய தடத்தின் முதல் நிலையம் - சர் தியாகராயர் கல்லூரி - வரும். நீதிக் கட்சி நிறுவனர்களுள் ஒருவரும் அதன் முதல் தலைவருமாகிய பிட்டி தியாகராயர் (1852-1925) வடசென்னையில்தான் வசித்தார். அவர் நிறுவிய சர் தியாகராயர் கல்லூரி நூறாண்டுகளைக் கடந்து நிமிர்ந்து நிற்கிறது. கல்லூரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் கல்லூரியின் பெயராலேயே அறியப்படும். அடுத்த நிலையம் தண்டையார்பேட்டை.

மூன்றாவது நிலையம் புது வண்ணாரப்பேட்டை, பிரதானமாக இது ஒரு தொழிற்பேட்டை. நான்காவது நிலையம் சுங்கச்சாவடி, இதைத் திருவொற்றியூர்ப் புறநகரின் நுழைவாயில் எனலாம். ஐந்தாவது நிலையம் காலடிப்பேட்டை. இது காலாட்பேட்டை என்பதன் திரிபு. காலாட் துரை, 1717-லிருந்து நான்காண்டுகள் ஆளுநராக இருந்தவர். இவர்தான் இங்குள்ள வரதராஜப் பெருமாள் ஆலயத்தை நிறுவியவர். ஆறாவது நிலையம் திருவொற்றியூர் தேரடி. காரணப் பெயர்.

ஏழாவது நிலையம் திருவொற்றியூர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்களால் பாடல்பெற்ற தலம். மூலவர் சன்னதி முதலாம் ராஜேந்திர சோழன் (1012-44) காலத்தியது என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன். பட்டினத்தார் தம் கடைசி நாட்களைக் கழித்த தலம் திருவொற்றியூர். கடைசி நிலையம் விம்கோ நகர். வெட்டுப்புலி உள்ளிட்ட பல தீப்பெட்டிகளைத் தயாரிக்கும் விம்கோ தொழிற்சாலை உள்ளதால், அந்த இடத்துக்கும், அங்கு நிறுவப்படும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் அப்பெயரே வந்தது.

இந்த எட்டு நிலையங்களில் முதல் இரண்டு நிலையங்களான சர் தியாகராயர் கல்லூரியும் தண்டையார்பேட்டையும் சுரங்க ரயில் நிலையங்கள். மற்ற ஆறும் மேம்பால நிலையங்கள். மேம்பாலத் தடம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலிருந்து 40 அடி உயரத்தில் அமைந்திருக்கும். மெட்ரோ ரயில் பணிகளின் அங்கமாக இந்தச் சாலையும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. சாலையின் மையத்தில் தூண்களும் தூண்களின் இருபுறமும் கட்டைச் சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சுவர்களுக்கிடையில் பசுஞ்செடிகள் பேணப்படும்.

மெட்ரோ ரயில் நன்று

மெட்ரோ ரயில்கள் உலகெங்கும் நகரமைப்பின் நவீன முகமாக அறியப்படுகின்றன. மெட்ரோ ரயிலை இயக்கக் குறைவான எரிபொருளும் குறைவான மின்சாரமும் போதும். சுற்றுச்சூழலுக்கு உகந்தது. தூய்மையானது. குறிப்பிட்ட காலத்தில் வரும். துரிதமாகச் செல்லும். பயண நேரம் குறையும். சாலையில் வாகன நெரிசலும் குறையும்.
மெட்ரோ ரயில் நிலையங்கள் நகரத்திற்குள் பயணிப்பதற்கானவை. ஆதலால் அவை அருகருகே அமைந்திருக்கும். இரண்டு நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரம் பொதுவாக ஒரு கிமீ என்பதாக இருக்கும். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையிலான தூரத்தின் இடைவெளி எப்படிக் குறைவானதோ, அதே போல அடுத்தடுத்து வரும் ரயில்களுக்கு இடையிலான காலத்தின் இடைவெளியும் குறைவானது.

பணிமனை

முதல் தடத்தின் நீட்சியில் இப்போதைய கடைசி நிலையமான விம்கோ நகரிலிருந்து பொன்னேரி வரை தடத்தை நீட்டிக்கும் வருங்காலத் திட்டமும் இருக்கிறது. விம்கோ நகரில் ஒன்றரை லட்சம் சதுர அடியில் ஒரு பணிமனையும் உருவாகிறது. இங்கு 16 ரயில் தடங்கள் அமைக்கப்படும். இந்தப் பணிமனையில் வருங்காலத்தில் மூன்று தளங்களில் கார் தரிப்பிடங்களும், 20 தளங்களில் வணிக வளாகமும் கட்டப்படும். அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. புதிய 8 நிலையங்கள் உட்பட முதல் கட்டத்துக்கான தேவையை இப்போதைய கோயம்பேடு பணிமனையாலேயே கைக்கொள்ள முடியும். விம்கோ நகர் பணிமனை இரண்டாம் கட்டத் தேவைகளை உள்ளடக்கியது.

இரண்டாம் கட்டம்

இரண்டாம் கட்டம், 3 தடங்களும் 119 கிமீ நீளமும் உடையதாக இருக்கும். மதிப்பீடு: ரூ.63,246 கோடி. இதில் ஒன்றிய அரசு தனது பங்குக்குரிய நல்கையை வழங்குமென்று நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இரண்டாம் கட்டத்துக்கான 15 ஒப்பந்தப் புள்ளிகள் இதுவரை கோரப்பட்டுவிட்டன.

இரண்டாம் கட்டத்தில் 125 நிலையங்கள் இருக்கும். இதில் 30 நிலையங்கள் வடசென்னையில் அமையும். தடம்-3 (மாதவரம்-சிப்காட்) வடசென்னையின் மாதவரம், தபால்பெட்டி, மூலக்கடை, செம்பியம், பெரம்பூர், பட்டாளம், அயனாவரம், கெல்லீஸ் வழியாகச் செல்லும். தடம்-5 (மாதவரம்-சோழிங்கநல்லூர்) வேணுகோபால் நகர், சாஸ்திரி நகர், ரெட்டேரி (இரட்டை ஏரி), கொளத்தூர், வில்லிவாக்கம், நாதமுனி முதலான பகுதிகளின் வழியாகச் செல்லும்.

சென்னை மெட்ரோ ரயில், மக்கள் செறிவாக வசிக்கும் வடசென்னைப் பகுதிகளையும் தொழிலும், வணிகமும் கல்வியும், மிகுந்த தென்சென்னைப் பகுதிகளையும் இணைக்கும். ஆகவே, பணியிடமும் வாழிடமும் அருகருகே அமைய வேண்டுவதில்லை. ஒரு விதத்தில் மெட்ரோ ரயிலானது சமன் செய்யும் கோலாகவும் அமையும். மெட்ரோ ரயிலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.

தொலைதூர ரயில்களும் புறநகர் ரயில்களும் இந்திய ரயில்வேயால் இயக்கப்படுபவை; ஒன்றிய அரசுக்குச் சொந்தமானவை. மெட்ரோ ரயில்கள் அந்தந்த மாநில அரசுகளுக்குச் சொந்தமானவை. சென்னை மெட்ரோ ரயில், இந்த நகரின் சொத்து. இந்தச் சொத்துப் பட்டியலில் வடசென்னையின் எட்டு நிலையங்கள் பிப்ரவரி 14 அன்று சேர்ந்துகொள்ளும். 2026-ல் இரண்டாம் கட்டம் நிறைவுறும்போது, பட்டியலில் மேலும் 125 நிலையங்கள் சேரும். அதில் 25 நிலையங்கள் வடசென்னையில் அமைந்திருக்கும்.

- மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x