Published : 10 Feb 2021 03:14 am

Updated : 10 Feb 2021 07:26 am

 

Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 07:26 AM

தமிழக மின் வாரியம் கடனிலிருந்து மீள வழி

tamilnadu-electricity

தமிழ்நாடு அரசு 2017-ல் ‘உதய்’ எனப்படும் ‘உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் திட்ட’த்தில் இணைந்ததன் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் தோல்வியடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். உதய் திட்டத்தில் சேர்ந்த பிறகு மின் வாரியத்தின் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்து, தற்போது ரூ.90 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. அண்மையில், தமிழக மின் வாரியத்துக்கு ரூ.30,230 கோடி கடனுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. எனினும், மின் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், மின் வாரியத்தின் கடன் மேலும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், தற்போது செயல்பாட்டில் உள்ள 3.1 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நிலக்கரியைக் கொண்டு இயங்கிவரும் பழைய அனல் மின் நிலையங்களை மூடுவது மற்றும் 3.5 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத் திட்டங்களுக்கான நிதியை நிறுத்திவிட்டு எதிர்காலத் தேவைக்காகக் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகமும் ரூ.35 ஆயிரம் கோடி ரூபாயை 5 ஆண்டுகளில் சேமிக்க முடியும் என்று பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘க்ளைமேட் ரிஸ்க் ஹொரைஸான்ஸ்’ என்ற ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. டிசம்பர் 2020-ல் ‘ரெஸிபி ஃபார் ரெகவரி’ என்ற தலைப்பில் ஆஷிஷ் பெர்னாண்டஸ், ஹர்ஷித் ஷர்மா இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தப் பரிந்துரையை முன்வைத்துள்ளனர்.

செலவைக் குறைக்கும் வாய்ப்பு

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் அனல் மின் நிலைய உலைகளை மூடுவதன் மூலமாகச் செலவைக் குறைத்து, சேமிப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகக் கூறுகிறது இந்த ஆய்வு. அனல் மின் நிலையங்களின் பழைய உலைகள் ஆற்றல் குறைந்ததாகவும் சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்துவதாகவும் உள்ளன. மேலும், இவை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் 2015-ல் கொண்டுவந்த மாசுத் தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இதனைச் செயல்படுத்துவதற்கான கால அவகாசம் 2022 வரை இருந்தாலும், அனல் மின் நிலையங்களில் நைட்ரஜன் ஆக்ஸைடைக் குறைப்பதிலும் சல்பர் டை ஆக்ஸைடை நீக்குவதற்கான தொழில்நுட்பத்தை நிறுவுவதிலும் குறைந்த அளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய உலைகளை மூடுவதன் மூலமாக இவற்றில் மாசுத் தடுப்புத் தொழில்நுட்பங்களைப் பொருத்துவதற்குச் செலவாகும் ரூ. 1,670 கோடியை மிச்சப்படுத்த முடியும். இத்தகைய பழைய உலைகள் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை, நெய்வேலி அனல் மின் நிலையங்களில் தற்போது செயல்பட்டுவருகின்றன. இந்த உலைகளை மூடிவிட்டு, அவற்றுக்கு மாற்றாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவினால் ஓராண்டுக்கு மேலும் ரூ.1,459 கோடியைச் சேமிக்கலாம். ஐந்தாண்டுகளில் ஏறக்குறைய ரூ.7,300 கோடி வரை மிச்சமாகும்.

கட்டண உயர்வைத் தவிர்க்கலாம்

அனல் மின் நிலையங்களின் பழைய உலைகளால் 2022-க்குள் காற்று மாசுத் தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதற்கான தொழில்நுட்பத்தை நிச்சயமாக நிறுவ முடியாது. இப்பணிக்காக ரூ.1,670 கோடியைச் செலவிடுவதற்குப் பதில், அவற்றை மூடுவதே பொருளாதாரரீதியில் லாபகரமானதாக இருக்கும். தற்போதைய நிதி நெருக்கடியில் மூலதனச் செலவுகளுக்காகக் கடன் வாங்குவது கடினமானது. எனவே, இந்தச் செலவை மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமாக மட்டுமே திரும்பப் பெற முடியும். ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணமும் உயர்த்தப்பட்டால் அது மக்களை மேலும் பாதிக்கும்.

நாட்டின் தற்போதைய மின் மிகை உற்பத்தியைக் கொண்டும் குறைந்த விலையில் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைக் கொண்டும் அனல் மின் நிலையங்களின் பழைய உலைகளை மூடுவதற்கான வாய்ப்பு மாநில அரசுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்கள் கடந்த மூன்றாண்டுகளாக மொத்த உற்பத்தித் திறனில் இருந்து 60%-க்கும் குறைவான உற்பத்தித் திறனில்தான் இயங்குகின்றன. மேலும் 3 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையங்கள் கட்டுமானப் பணி முடிவடைந்து அடுத்த 12 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ளன. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தேவையைவிட அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படும் நிலை உள்ளது. இதன் காரணமாகப் பழைய அனல் மின் நிலையங்களை மூடும் செயல்பாடு எளிதானதாகும்.

சூழல்கேட்டைத் தடுக்கலாம்

அனல் மின் நிலையங்களின் பழைய உலைகள் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட காற்று மாசுபாடு மற்றும் சாம்பல் கழிவு பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளன. இந்த உலைகளை மூடுவதே சுற்றுச்சூழல்ரீதியில் சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. மேலும், அந்நடவடிக்கையால் பல ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும் முடியும்.

பழைய மற்றும் அதிக மாசு ஏற்படுத்தும் அனல் மின் நிலைய உலைகள் மூடப்படும் எனக் கடந்த நிதிநிலை அறிவிப்பில் கூறப்பட்டது. 1,260 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 15 அலகுகள் மூடப்பட்டுள்ளதாக இந்த ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மட்டும் போதாது. ஏனெனில், நிலக்கரியைக் கொண்டு இயங்கும் அனல் மின் உற்பத்தியின் காலமே இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. தமிழக அரசு தொடர்ந்து புதிய அனல் மின் நிலையங்களை நிறுவுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 3.5 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட உப்பூர், உடன்குடி மற்றும் எண்ணூர் விரிவாக்க அனல் மின் நிலையத் திட்டங்களைக் கைவிடுவதால் ரூ.26 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்த முடியும்.

இரண்டு வாய்ப்புகள்

மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக செலவாகும் உலைகளைக் கைவிட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதால் மின்சாரம் வாங்குவதற்கான செலவும் சராசரி வருவாய்த் தேவையும் குறையும். ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.4-க்கு மேல் செலவாகும் உலைகளுக்குப் பதிலாகப் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்துவது அல்லது யூனிட் மின்சாரத்துக்கு ரூ.3 அல்லது அதற்கும் குறைவாகச் செலவாகும் நல்ல உற்பத்தித் திறன் கொண்ட உலைகளைப் பயன்படுத்துவது என்ற இரண்டு வாய்ப்புகளின் மூலமாக ஆண்டுக்கு ரூ.6,000 கோடி மிச்சப்படுத்தலாம்.

மின்சாரம் வாங்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தின் இறுதிக் கட்டத்தில் மேற்கொண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்காமலோ அல்லது இருதரப்பும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தைத் தொடக்க நிலையிலேயே ரத்துசெய்வதன் மூலமாகவோ அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைத் தடுக்கலாம். அதிக மின் தேவை இருக்கும் காலங்களில் மட்டும் மின்சாரத்தை வாங்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றுவதன் மூலமும் பெரிய அளவில் சேமிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கை பரிந்துரைக்கிறது. சுற்றுச்சூழல் நோக்கிலான இந்த ஆய்வுகளின் பரிந்துரைகளைத் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

- கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள், தொடர்புக்கு: info@poovulagu.org
தமிழகம்மின் வாரியம்மின் வாரியம் கடன்கடனிலிருந்து மீள வழிTamilnadu electricityமின்சாரம் உற்பத்திஅனல் மின் நிலையங்கள்உதய்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x