Last Updated : 10 Feb, 2021 03:14 AM

 

Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

சசிகலாவுக்கு அவ்வளவு கூட்டம் கூடியது எப்படி?

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் தண்டனை முடிந்து, பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய சசிகலாவுக்கு வழியெங்கும் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு தமிழகத்தைத் தாண்டியும் அரசியல் வட்டாரத்தில் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. சரியாகச் சொல்லப்போனால் ‘ஊழல் வழக்கில் சிறை சென்று திரும்புபவருக்கா இவ்வளவு பெரிய வரவேற்பு?’ என்கிற கேள்வியை நாட்டு மக்கள் இரண்டாவது முறையாகக் கேட்டார்கள். முதல் முறை இந்தக் கேள்வி ஜெயலலிதா சிறையிலிருந்து திரும்பியபோது எழுப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சிகள் உங்களுக்கு நினைவில் இருந்தால் நாடு முழுக்க இப்போது எழுப்பப்படும் கேள்விக்கான பதிலை நீங்களாகவே ஊகித்துவிடலாம். இது திட்டமிட்ட அரங்கேற்றம். ஆனால், கதாபாத்திரங்கள் அத்தனையுமே திட்டமிடப்பட்டவை அல்ல.

பேரணிக்கான திட்டமிடல்

எந்த அரசியல் கட்சிக்கும், பெரிய தலைவருக்கும் இன்று கூடும் கூட்டங்கள், பெரும் பேரணிகள் எல்லாமே முன்கூட்டித் திட்டமிடப்படுபவைதான். தமிழ்நாட்டில் இதில் கைதேர்ந்தவர்கள் அதிமுகவினர். மக்களின் பெரும் திரள் சமூகத்தில் உண்டாக்கும் பிரமிப்பைத் தமிழ்நாட்டில் எந்தத் தலைவரைக் காட்டிலும் பெரிய உளவியல் ஆயுதமாகக் கையாண்டவர் ஜெயலலிதா. அவருடைய முதலாவது ஆட்சிக் காலகட்டம் கட்-அவுட்களுக்கு இணையாக மிக நீண்ட கார் பேரணிகளுக்கும் பேர்போனது. செல்லும் எல்லா இடங்களிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது இயல்பானது மக்கள் இடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியபோது மிக நீண்ட கார் பவனியை விசேஷமான தருணங்களுக்கானதாக மட்டும் ஆக்கிக்கொண்டார் ஜெயலலிதா.

ஒரு பயணத்தை மேற்கொள்கையில் புறப்படும் இடத்துக்கும் அடையும் இடத்துக்கும் இடையில் உள்ள மாவட்டத் தலைநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் எல்லாவற்றையும் அந்தந்த ஊர்களின் மக்கள்தொகையுடன் கணக்கிட்டு, அதற்கேற்ப நிறுத்தங்களைப் பிரித்து, ஒவ்வொரு நிர்வாகிக்கும் இத்தனை நிறுத்தங்கள் பிரித்து, ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் வழிநெடுக இத்தனை பேர் கூடியிருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, மாநில நிர்வாகிகள் தொடங்கி ஒன்றிய நிர்வாகிகள் வரை இதற்கான பொறுப்பை ஒப்படைத்துப் பணியாற்றுவது அதிமுகவில் ஒரு கலாச்சாரம்.

கட்சித் தலைமைக்குக் கீழே உள்ள நிர்வாகிகள் தங்களுடைய சொந்த செல்வாக்கையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்த கிடைக்கும் ஒரு வாய்ப்பும் இது என்பதால், கட்சிக்குள் இதற்கு ஏகப்பட்ட போட்டி நிலவும். ஜெயலலிதாவின் கடைசித் தேர்தல் பயணத்தில் ஜெயலலிதா வண்டி நிற்க வேண்டிய இடத்துக்கு அடையாளம் காட்டும் பணியைக் கையில் ஒரு பதாகையுடன் அன்றைக்கு மக்களவை துணை சபாநாயகராகப் பணியாற்றிய தம்பிதுரை சிரமேற்று செய்ததை இங்கே நினைவுகூரலாம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இன்னொரு ஜெயலலிதாவாக சசிகலாவை முன்னிறுத்த ஏற்பாடுகள் நடந்தபோது அதில் முன்னின்றவர்களும் இன்று அதிமுக ஆட்சியில் முன்னிற்பவர்களும் வெவ்வேறானவர்கள் இல்லை அல்லவா? ஆகையாலே, சிறையிலிருந்து வீடு திரும்பும் சசிகலாவுக்கு எப்படிப்பட்ட வரவேற்புக்குத் திட்டமிடப்படும் என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள். அதனால்தான், சசிகலாவின் திட்டத்துக்கான எல்லா வாயில்களையும் அடைக்கும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.

ஜெயலலிதா நினைவிடம் மூடல், காரில் அதிமுக கொடி கட்டத் தடை, சசிகலா உறவினர்களின் இருபத்தைந்துக்கும் அதிகமான சொத்துகளை அரசுடமையாக்கும் நடவடிக்கைகள் என்று வெவ்வேறு அஸ்திரங்களும் இந்தப் பின்னணியிலேயே பிரயோகிக்கப்பட்டன.

தினகரன் திட்டம்

இவ்வளவும் நடக்கும் என்பதை சசிகலாவின் பக்கம் உள்ள முன்னாள் - இந்நாள் அதிமுகவினரும் உணர்ந்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகவே டி.டி.வி.தினகரன் இதற்கான காய்களை நகர்த்திவந்தார். சென்ற வாரத்தில் அவர் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மதுரை வந்திருந்தபோதுகூட அந்த நிகழ்ச்சியிலும் வெளிப்படையான திட்டமிடல் வெளிப்பட்டது. “அந்தந்த மாவட்ட அமமுகவினர் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பாயின்டிற்குச் சென்று வரவேற்க வேண்டும். காரின் பின்னாலேயே ஊர்வலமாக அணிவகுத்து அவருக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடக் கூடாது” என்றெல்லாம் அவர் பேசியதைக் கேட்ட நான் பிற்பாடு அவருடைய கட்சிக்காரர்களிடம் இதுபற்றி பேசியபோது இத்தகு திட்டங்கள் எவ்வளவு நுட்பமாக வகுக்கப்படுகின்றன என்பதை அறிந்துகொண்டேன். உதாரணமாக, சில முக்கியமான நிறுத்தங்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்குமாகச் சேர்த்து ஒதுக்கப்பட்டிருந்தன.

கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி, ஒசூர் மாரியம்மன் கோயில், ஒசூர் ஆனந்தபவன் உணவகம், சூளகிரி ஆகிய நிறுத்தங்களில் கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் மத்திய மாவட்ட அமமுகவினர் வரவேற்க வேண்டும் என்று ஒதுக்கப்பட்டிருந்தாலும், தஞ்சாவூர் மாவட்டத்தினரையும் அங்கே பார்க்க முடிந்தது. அதேபோல, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள நிறுத்தங்களில் சசிகலாவுக்கு பெரும் ஆதரவு உள்ள மதுரை மாவட்டத்தினரைப் பார்க்க முடிந்தது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள எட்டு நிறுத்தங்களில் நின்றவர்களில் ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட அமமுகவினரும் அடக்கம்.

கூட்டப்பட்ட கூட்டமா?

அப்படியென்றால், சசிகலாவுக்குத் திரண்டது அத்தனையுமே இப்படி முன்கூட்டி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமா? எல்லோருமே அமமுகவினரா? கிடையாது.

மொத்தம் 71 நிறுத்தங்கள் மட்டுமே இப்படித் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சசிகலாவின் வருகையை ஒட்டி அதிமுகவுக்குள் சில நாட்களாக உண்டான அதிர்வுகள் பல அதிமுகவினரை இயல்பாக இந்தக் கூட்டம் நோக்கி ஈர்த்தது. மேலும், தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வழி சசிகலாவுக்குத் திரண்ட கூட்டச் செய்தியை அறிந்த பலர் வேடிக்கை பார்ப்பதற்காகவும் திரண்டனர். ஆக, திட்டமிட்ட ஒரு கூட்டம் திட்டமிடாத ஒரு கூட்டத்தையும் திரட்டியது. இதை சசிகலா நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்.

எட்டு மணி நேரத்தில் வந்தடையும் சாத்தியம் உள்ள சென்னை – பெங்களூரு சாலை வழிப் பயணத்தை அவர் 22 மணி நேரப் பயணமாக ஆக்கிக்கொண்டார். நேரம் ஆகஆகக் கூட்டமும் அதிகமானது. கூட்டம் அதிகம் ஆகஆக அதிமுகவுக்குள் அதிர்வுகளும் அதிகம் ஆயின.

அதேபோல முன்பே வந்தவர்கள் எல்லோரையுமே காசுக்காக வந்தவர்கள் என்றும் ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. வாடகை வாகனங்களுக்கு அன்றைய தினம் அறிவிக்கப்படாத ஒரு தடையை ஆட்சியாளர்கள் மாநிலம் எங்கும் உருவாக்கியிருந்தார்கள். ஆகையால், சசிகலாவை வரவேற்க வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த வாகனங்களிலேயே வந்திருந்தார்கள். இவர்களில் கணிசமானோர் சொந்த செலவிலேயே ஆட்களைக் கூட்டி வந்திருந்தனர்.

சசிகலா என்ன செய்வார்?

ஜெயலலிதாவுக்குப் பின்னின்று செயல்பட்ட நிழல் அதிகாரமான சசிகலா நேரடி அதிகாரமாக ஆக முடியுமா? இதற்கான பதில் அவருக்கு சாதகமாக இருக்காது. ஏனென்றால், ஜெயலலிதா தனக்கான பலத்தை பிரம்மாண்டமான மக்கள் செல்வாக்கிலிருந்து பெற்றார். அதன் வாயிலாகக் கட்சியைத் தன் கையில் வைத்திருந்தார். சசிகலாவுக்கு அந்தப் பலம் கிடையாது. ஆனால், இந்தப் பலம் சசிகலாவை இன்று எதிர்ப்பவர்களிடமும் கிடையாது என்பதுதான் அதிமுகவுக்குள் உருவாகியிருக்கும் பதற்றத்துக்குக் காரணமாக இருக்கிறது.

மக்களைப் பேச வைப்பதுதான் கூட்டம் கூட்டியதன் பின்னணி. கூடிய கூட்டம் அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x