Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

பழைய விளக்குகளும் புதிய வெளிச்சங்களும்

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

இருபதாம் நூற்றாண்டு இயற்பியல், நியூட்டனின் இறுதி ஊர்வலத்தில் பிறந்தது. இயற்பியலின் பொற்கால முப்பதாண்டுகள் எனச் சொல்லப்படும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பப் பத்தாண்டுகளில் இயற்பியல் இரு பெரும் தடங்களில் தன்னைப் பகுதியாகப் பிரித்துக்கொண்டது. ஒன்று, ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு; மற்றொன்று, குவாண்டம் இயக்கவியல். ஒன்றுக்கொன்று இணைப்பில்லாமல் பயணிக்கும் இவை இரண்டையும் இணைத்துக் குவாண்டம் ஈர்ப்புவிசை எனும் கோட்பாட்டை உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது. இந்தப் பின்புலத்தில், ஆனந்த் எழுதி 03.01.21 அன்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான ‘பிரக்ஞையின் புதிய வெளிச்சங்கள்’ கட்டுரையை அணுகுதல் நலம். ஏனெனில், அவர் குறிப்பிடும் எர்வின் ஷ்ரோடிங்கர், வெர்னர் ஹெய்சென்பெர்க், நீல்ஸ் போர் ஆகியோர் அணு இயற்பியலின் கெளபாய்கள்; குவாண்டம் இயற்பியலை (இயந்திரவியலை) வரவேற்றவர்கள். அதிலும் குறிப்பாக, ஹெய்சென்பெர்க். ‘இயற்பியலும் தத்துவமும்’ எனும் நூலில் குவாண்டம் இயற்பியலின் முடிவுகள் அடிப்படையில் மேற்கத்தியத் தத்துவம், இயற்பியலின் வளர்ச்சியை அணுகுகிறார். பல கோட்பாடுகளை மறுக்கவும் செய்கிறார். மேலும், ஆனந்த் முன்வைக்கும் வாதங்களுக்குப் பக்கபலமாக இருப்பது ‘(உயிர்) வாழ்க்கை என்றால் என்ன?’ எனும் ஷ்ரோடிங்கரின் புத்தகமும்கூட. அந்தப் புத்தகத்தில்தான் அவரது இரண்டாம் சமன்பாடு எனக் குறிப்பிடப்படும் ஆத்மா = பிரம்மம் எனும் வேதாந்தக் கருத்தைப் பேசுகிறார்.

ஆனந்த்தின் நல்ல நோக்கத்தோடு, அதாவது மதங்கள் அனைத்துமே உண்மையைப் போதித்தாலும் உலகம் ஏன் வன்முறையில் மூழ்கியிருக்கிறது எனக் கவலையுறுவதில் நாம் முரண்படுவதில்லை. ஆனால் ரொம்பவே மேலோட்டமாக, மதக் கருத்துகளை அறிவியல் உண்மை என நிரூபித்துவிட்டது என்றும், நமது புராண இதிகாசங்களை அறிவியல், உளவியல், ஆன்மீகத்தின் கூட்டு வெளிச்சத்தில் மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்றும் சொல்வதில்தான் முரண்படுகிறோம்.

பின்னணியின் வரலாறு

முதலில் ஆனந்த் குறிப்பிடும் மூவரும், கூடவே அமெரிக்க அணுகுண்டுப் பரிசோதனையில் முன்னின்ற ராபர்ட் ஓபன்ஹெமரும் இந்தியத் தத்துவங்களின்பால் ஈடுபாடும் பற்றும் உடையவர்கள்தான் என்றாலும், ஒருபோதும் இந்தத் தத்துவங்களை அவர்கள் பரிசோதித்து நிரூபிக்கவில்லை. மாறாக, அவர்கள் பரிசோதித்துச் சொன்னவற்றோடு இந்தக் கருத்துகள் ஒத்துப்போயின. ஆனந்தின் வாதம் இங்கேதான் பிழைகொள்கிறது.

இந்திய வேதாந்தமும் உபநிடதக் கருத்துகளும் அறிவியல் கோட்பாடுகளும் எங்கே இணைகின்றன என்ற பின்னணியைச் சற்று பேசலாம். ஜெர்மானிய இயற்பியலாளரான மாக்ஸ் பிளாங்க் (Max Planck) குவாண்டா எனப்படும் ஆற்றலின் வடிவத்தைக் கண்டுபிடித்ததிலிருந்து அந்தப் பின்னணியின் பயணம் தொடங்குகிறது. அதுவரையிலும் நியூட்டனின், கணித மற்றும் முறைமையில் முன்வைக்கப்பட்ட இயற்பியல் கோட்பாடுகளை பிளாங்கின் கண்டுபிடிப்பு பின்தள்ளியது. ஒளியானது அலை வடிவத்திலும் துகள் வடிவத்திலும் இருக்கிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டதும், நியூட்டனின் அறிவியல் முற்றாக வீழந்தது. அணு ஆராய்ச்சியில் எலக்ட்ரானின் கண்டுபிடிப்பும், போட்டானின் அறிமுகமும் அடுத்த நகர்வின் உந்துவிசைகள்.

நியூட்டன் முதலான அறிவியலாளர்கள் அறிவியல் கோட்பாட்டை முற்றிலுமாகப் புறநிலையாக்கம் (Objectivation) செய்திருந்தனர். எளிமையாகச் சொன்னால், அறிவியலால் நிரூபிக்கப்பட்ட அனைத்துக் கருத்துகளையும் தன்னிலைகளின் (Subject) இடையீடின்றி முழுமுற்றான உண்மையாக வழங்கிவிட முடிந்தது. இதன் மறைமுகப் பொருள் என்னவென்றால், மனிதத் தலையீடு இன்றியே (ஆனந்த் சொல்வதின்படி, பிரக்ஞை) இயற்கைக்கு என்று ஒரு தனித்த இருப்பு இருக்கிறது என்பது. ஒளியின் இரட்டை வடிவம் (Duality) இயற்பியலாளர்களுக்குத் திகைப்பை அளித்ததோடு அதுவரையிலும் பின்பற்றப்பட்டுவந்த அறிவியல் கோட்பாடுகளின் கட்டமைப்பைப் புதிதாக மாற்றியமைக்கவும் வழிவகுத்தது. இதுதான் அறிவியலின் புதிய வெளிச்சம்.

மற்றொரு புறத்தில் காலம், வெளி பற்றிய புரட்சிகரமான கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்தார். காலத்துக்கும் வெளிக்கும் அதற்கு முன்பு வரையிலும் இருந்த நிலைத்தன்மை மாற்றமடைந்து ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள் அடிப்படையில் இவை இரண்டுமே ஒன்றுதான் என்றும், நிலைத்தன்மை அற்றதாலேயே சார்புடையவை என்றும் முன்வைத்தார். வெளியையும் காலத்தையும் பிரித்தறிய முடியாது என்றும், ஏறக்குறைய இரண்டுமே பருப்பொருளின் தன்மையைக் கொண்டிருக்கின்றன எனவும் முடிவுகள் எட்டப்பட்டன. தவிர, காலம் என்பதே எல்லா இடங்களிலும் ஒன்றுபோல இருக்காது என்பதும்.

அதுவரையிலும் மனித மனம் செயல்பட்டுவந்த கட்டமைப்புகளை இவ்விரண்டு கோட்பாடுகளும் முற்றிலுமாக மாற்ற முனைந்தன. என்றாலும், இன்றளவிலும் நம்மால் நமது பழைய மனதிலிருந்து முற்றிலுமாக விலக முடிந்ததில்லை. இங்கே குறிப்பாக, குவாண்டம் இயக்கவியல் முற்றிலும் புதிய கட்டமைப்பை அளித்தது. அதாவது, ஒரு பரிசோதனையின் முடிவு என்பது அந்தப் பரிசோதனையை நடத்துபவரின் அல்லது கருவியின் இடையீட்டாலேதான் சாத்தியம் என்பது. இது இயற்பியலில் தன்னிலைகளின் பங்கை உறுதிசெய்தது. இங்கேதான் வேதாந்தத்தின் கோட்பாடான மாயாவாதம் இந்தப் புதிய கோட்பாடுகளோடு ஒற்றுமையுடையதாக முன்வைக்கப்பட்டது. நாம் புலன்களின் வழியாக அறியக்கூடிய இவ்வுலகம் உண்மையில் ஒரு மாயை, அதற்கென்று தனித்த இருப்பு கிடையாது என்பதோடு குவாண்டம் இயக்கவியலின் கோட்பாடுகள் ஒத்துப்போயின. இதைத்தான் வேதாந்தத்தை உண்மை என்று அறிவியல் நிரூபித்துவிட்டது என்கிறார் ஆனந்த்.

அறிவியலும் மதமும் அறிவியலின் பிரபஞ்சத்தன்மையும்

அறிவியல், மதம் இரண்டும் இயங்கும் முறைகளில் பெரிய வேறுபாடுகள் உண்டு. கணிதம் மற்றும் முறைமையியல் அடிப்படையில் இயங்குவது அறிவியல். மதத்தின் கருத்துகளோ மொழியியல் அடிப்படையில் இயங்குகின்றன. அறிவியல் எவ்வாறு மனிதச் சிந்தனையின் களஞ்சியமான தத்துவத்தோடு உரையாடுகிறதோ அவ்வாறுதான் மதமும் தத்துவத்தோடு உரையாடுகிறது. இங்குள்ள மதங்களின் எல்லாச் சடங்குகளும், புராண, இதிகாசங்களும் நம்பிக்கைகளும் இந்த உலகு கடந்த உண்மையோடு தொடர்புடையவை என்கிற ஒற்றைப் பரிமாணம் மட்டுமே கொண்டவையல்ல. அவற்றுக்கு என்று வேறுபல தோற்றுவாய்களும் தொடர்புகளும், ஏன் சமூகவியல், சூழலியல் காரணங்களும்கூட இருக்கலாம்.

மேலும், வேதாந்தத்தை எடுத்துக்கொள்வோம், அது முற்றிலும் சடங்குகளை மறுப்பது. புறத்தில் வெளிப்படக்கூடிய அனைத்துமே மாயையால், அதாவது அறியாமையால் நிகழ்வது என்கிறது. ஆனந்த் குறிப்பிடும் தன்னுள் ஆழ்ந்து சொல்லப்பட்ட ஆழமான உண்மை என்னவென்றால், அனைத்து வேற்றுமைகளும் பொய்யானவை, மேலோட்டமானவை, அடிப்படையில் நமக்கு (இந்த உலகுக்கு) இவற்றுக்கு அப்பாலும் ஓர் இருப்பு உண்டு என்பதே. அணு இயற்பியலும் அடிப்படையான ஒன்றைக் காண முயன்றதே அதன் தோற்றமும் வளர்ச்சியும்.

அறிவியலுக்கு என்று ஒழுங்குபடுத்தப்பட்ட, கண்காணிக்கப்படும் ஒழுங்காறுகள் உண்டு. மதத்துக்கும் சடங்குகள், வழக்காறுகள் எனத் தனித்துவமான கட்டமைப்புகளும் உண்டு. மதத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று என்னவெனில், அறிவியல் எவ்வாறு தனது கண்டுபிடிப்புகளைத் தொழில்நுட்பமாக மாற்றி, ஒரு கருவியோடு அல்லது இயந்திரத்தோடு பிணைத்துவிடுகிறதோ அவ்வாறே மதம் தனது கண்டுபிடிப்புகளைச் சடங்குகளாகவும் நம்பிக்கைகளாகவும் மாற்றிவிடுகிறது.

‘ஏன் நாம் கண்டறிந்த மாபெரும் உண்மைகளைக் காலந்தோறும் புதுப்பிக்கும் கட்டமைப்புகளை உருவாக்கத் தவறியிருக்கிறோம்? அவை வெறுமனே சடங்குகளாக, வழிபாட்டுத் தலங்களாகத் தேங்கிவிட்டன’ என்கிறார் ஆனந்த். உண்மை என்று முன்வைக்கப்படும் ஒன்றை மதத்தினின்றும், மதக் குறியீடுகளினின்றும், ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தின் பாவிப்புக்கும் அப்பால் அதை வளர்த்தெடுக்கும் சாத்தியத்தை மேற்கத்திய அறிவியல் பெற்றிருக்கிறது. எது மனிதச் சமூகம் முழுமைக்கும் பயன்படத்தக்க வகையில் விரிவடையச் சாத்தியமுள்ளதோ அதற்கே எதையும் வளர்த்தெடுக்கும் சாத்தியமும் உள்ளது. மேற்குலக அறிவியலின் இந்தச் சாத்தியத்தை நாம் ஒப்புக்கொண்டுவிட்டதாலேயே நமது உண்மைகளுக்கு ஒப்பான கருத்துகளை அறிவியலாளர்கள் ஆய்வுக்குட்படுத்தி நிறுவ முயலும்போது குதூகலிக்கிறோம்.

பிரபஞ்சத்தின் இயல்பைப் பற்றிய நமது கருத்துகள் பிராந்திய எல்லைகளைக் கடக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் அது அறிவியலின் வழியாகவே சாத்தியம். அதை முற்றாக ஒதுக்கிவிட்டு, அதன் மீது கொலைப்பழியைச் சுமத்திவிட்டு, நாம் நமது மத நூல்களில் கண்களைப் புதைத்துக்கொள்வது ஒருபோதும் பலனளிக்காது. ஆனால், இயல்பாகவே உண்மைகளுக்குப் பிராந்திய எல்லை என்ற ஒன்று கிடையாது. எனினும், மதம் அவற்றுக்குப் பிராந்திய எல்லைகளை வகுத்துவிடுகிறது.

நான் – பிரபஞ்சம் – தெய்வம்

பிரக்ஞை இரண்டு நிலைகளில் நிகழ்கிறது. ஒன்று, நிகழ்வியப் பிரக்ஞை (Phenomenal Consciousness); மற்றொன்று, தன்னிலைப் பிரக்ஞை (Subjective Consciousness). இவற்றுக்கு அப்பாற்பட்ட உயர்பிரக்ஞையை ஆன்மா என்று சொல்பவர்கள் உண்டு. ஆன்மாவை மறுக்கும் பெளத்தமும் இந்த மண்ணிலே உண்டு. இந்த உயர்பிரக்ஞையானது பிரபஞ்சத்தின் கூறுகளோடு உடையது. அதாவது கால, வெளிச் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டது. அது வன்முறைக்கும் பூசலுக்கும் மட்டுமல்ல அன்புக்கும் ஒற்றுமைக்குமே அப்பாற்பட்டது. ஒரு சமூகத்துக்குத் தன்னிலைப் பிரக்ஞை உண்டு என்று கொண்டால், அது ஒருபோதும் அதன் பிரக்ஞையை அழித்துக்கொள்ள முற்படாது. ஏனெனில், சமூக இருப்பின் அனைத்து வினைகளும் இந்தத் தன்னிலைப் பிரக்ஞையாலேதான் விளைகின்றன. குறைந்தபட்சம், நல்வினைகளை மாத்திரமே செய்ய முனைவதன் மூலமாகச் சமூகத்தில் வன்முறையைக் குறைக்கலாம் என்று சொல்லப்பட்ட தத்துவமும் இங்கே இருக்கிறது. நமது சாத்தியக்கூறுகள் எல்லைகளுக்கு உட்பட்டவை. எல்லைகளுக்கு உட்பட்டு இயங்கும் எவையுமே அவற்றுக்குள் பூசலுக்கு உட்படுபவை. அல்லது ஷ்ரோடிங்கர் விளக்குகிறபடி நமது அணுக்களின் வியக்கத்தக்க ஒழுங்கைப் புறவெளியின் இயக்க விசைகளுக்குக் கடத்த முடியாதவை. ஆனந்த் சொல்வதைப் போல நாம் வகுத்து வைத்திருக்கும் உண்மைகள், இந்த நம்பிக்கை சார்ந்த எல்லைகளைக் கடக்க வேண்டும். ஆனால், அவர் சொல்வதைப் போல நம்மிடையே மத உண்மைகள் உள்ளன; அறிவியல் அவற்றை நிரூபிக்கிறது. ஆகவே, நான் மீண்டும் எனது மத உண்மைகளிடம் வேறொரு வழியில் திரும்புவேன் என்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அவரே சொல்வதைப் போல எனது மத உண்மைகள் இங்கே சடங்குகளாகவும் வேறு பலவாகவும் திரிந்திருக்கின்றன. பெரும் அதிகாரம் கொண்டிருக்கும் இவற்றை ஒதுக்கிவிட்டு, என்னால் உண்மைகளிடம் நெருங்குவது கடினமானது.

மேலும், பிரக்ஞை பற்றிய முற்றுமுதலான முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக, பிரக்ஞை இருப்பதை ஒப்புக்கொண்டாலும் அதை வரையறுப்பது கடினமே. அதே சமயம், பெளத்தத் தத்துவத்தில் ஈடுபாடுகொண்ட ஷோபன்ஹெய்ர், ‘நான்’ என்பதை ஷ்ரோடிங்கரைப் போலவே மறுப்பவர். ஷோபன்ஹெய்ர் சொல்கிறார்: ‘எனது பிறப்புக்கு முன்பாக முடிவற்ற காலம் ஓடிவிட்டது; நான் அப்போது என்னவாக இருந்தேன்? மீபொருண்மையின் அடிப்படையில் பதில் சொல்வதென்றால், நான் எப்போதுமே நானாகவே இருந்தேன்; கால ஓட்டத்தில் யாரெல்லாம் நான் என்று சொன்னார்களோ, உண்மையில் அவர்கள் அனைவருமே நான்.’ இவ்வாறு உணர்வது புற வேற்றுமைகளை அழிக்கிறது. மனித இருப்பை மனோ இருப்பாகக் காண்பதால், நம்மால் இவ்வாறு சொல்ல முடிந்தாலும், ஒரு போர்ச் சூழலில் நிலவறையில் பிணங்களுக்கு நடுவே பசியோடு இருக்கும் குழந்தையிடம் என்ன சொல்வது என்பதை நாம் இன்னுமே அறியாமல் இருக்கிறோம்!

மனிதர்களைப் பொறுத்தவரை இரண்டே சிக்கல்கள்தான் அடிப்படையானவை. ஒன்று, அவர்களுடைய காலம் மற்றும் வெளியால் குறுக்கப்பட்ட வாழ்வு. மற்றொன்று, அவர்களுடைய கால வெளியைக் கடந்து நிரம்பியிருக்கும் ஒன்று. காலம் என்ற ஒன்று இல்லை என்று சொல்லும் இடத்துக்கு அறிவியல் வந்திருக்கிறது. காலமும் வெளியும் மாயை எனச் சொல்கிறது வேதாந்தம். ஆனால் நாமோ, அறிவியல் மற்றும் வேதாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் மனக் கட்டமைப்பை மாற்றும் வழியை எட்ட முடியவில்லை. அப்படியொரு இடத்தை அடைய முடியுமா? ஏனெனில், நாம் உலகை இரட்டைத்தன்மையால் மட்டுமே புரிந்துகொள்கிறோம் (அகம்/புறம், மனம்/உடல், தான்/பிற இவ்வாறு). இது மொழியியலின் சிக்கல். அதனால், ஒருபோதும் ஒருமையை (singularity) விவரிப்பது கடினம். எனினும், அது எவ்வளவுதான் குறைபட்டதாக இருந்தாலும், ஹெய்சன்பெர்க் சொல்வதைப் போல, ‘மொழி என்பது இயற்கையின் அறைகூவலுக்கான மனித எதிர்வினை’யும்கூட.

- பாலசுப்ரமணியன் பொன்ராஜ்,

‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: tweet2bala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x