Published : 02 Nov 2015 08:34 AM
Last Updated : 02 Nov 2015 08:34 AM

குமரி சுதந்திரப் போராட்டம்!

குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து நேற்றுடன் 59 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. மாபெரும் போராட்டங்கள், தியாகங்கள், உயிரிழப்புகள், கண்ணீர்க் கதைகள் நிறைந்த வரலாறு அது. அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த குமரி மாவட்டத்தில், தமிழர்கள் அனுபவித்த இன்னல்களுக்கு முடிவுகட்டிய நிகழ்வு. தேர்ந்த அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி மட்டும் சிந்திப்பார்; நல்ல தலைவரால்தான் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்க முடியும். அந்த வகையில், குமரித் தந்தை மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட திருத்தமிழர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி அது. 1956 நவம்பர் 1-ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இன்றைக்குக் குமரி மாவட்ட மக்களால் கொண்டாடப்படும் அந்த நிகழ்வைப் பற்றிய பதிவு இது!

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த காலத்தில் பாடசாலைகளில் தமிழ் மொழிக்கு அனுமதியில்லை. மலையாளம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. சாதியரீதியாக மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர். அதற்கும் முந்தைய காலத்தில் குறிப்பிட்ட சமூகங்களின் ஆண்கள் தலைப்பாகையும், பெண்கள் மேலாடையும் அணியக் கூடாது என்றுகூட இருந்தது. தலைவரி, தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி என வகை வகையாய் வரிகள் வசூலிக்கப்பட்டன. பனை மரத்தில் ஏறப் பயன்படுத்தும் ஏணிக்கு ஏணி காணம், பனை ஏற காலில் அணிந்திருக்கும் வளையத்துக்குத் தளை காணம் என்ற வரியும், குடிசைகளுக்கு குப்ப கச்சா என்ற வீட்டு வரியும், கூரை மாற்றும்போது மனை மேய்ப்பான் கொள்ளுமிறை என்ற வரியும் வசூலிக்கப்பட்டது. சொந்த நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களுக்கும்கூட வரி கொடுக்க வேண்டும்.

நாஞ்சில் என்ற சொல்லுக்குக் கலப்பை என்று பொருள். தமிழகத்துக்கு தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என்பதுபோல், திருவிதாங்கூர் அரசின் நெற்களஞ்சியம் நாஞ்சில் நாடு. அப்போது நிலம் முழுவதும் மன்னருக்கே சொந்தம். சமஸ்தானத்திடம் பணம் கட்டி நிலத்தைக் குத்தகைக்கு எடுக்க வேண்டும். இது மாராயப் பணம் என வசூல் செய்யப்பட்டது.

கவிதை மூலம் போராட்டம்

தண்ணீர் வரியும் உண்டு. அறுவடை முடிந்ததும் விவசாயத்தை விட்டுவிட்டால் மாராயப் பணம் திரும்பக் கிடைக்கும். புயல், மழை, வெள்ளம் என இயற்கைச் சீற்றங்களால் பயிர் பாதித்திருந்தாலும் வரி விதிப்பில் சலுகை கிடையாது. பேச்சிப்பாறை அணை நீரைப் பயன்படுத்துவோருக்கு பேச்சிப்பாறை ‘சானல்’ (வாய்க்கால்) பயன்பாட்டு வரி. நாஞ்சில் நாட்டு விவசாயிகளுக்கு மணியங்கரம். இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் வரி என்னும் பெயரில் தமிழர்கள் வாட்டி எடுக்கப்பட்டனர். பொறுப்பது வரை பொறுத்திருந்த தமிழ்ச் சமூகம் ஒன்று கூடியது. இந்தியா விடுதலை பெற்ற பின்பு மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. அப்போது கன்னியாகுமரி, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. திருத்தமிழர் போராட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் பங்களிப்பு மிகப் பெரியது. தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கும் வேட்கையோடு குமரிக்கு வந்து களம் கண்டார். கவிமணியும் கவிதை மூலம் போராட்டத்துக்கு வலு சேர்த்தார்.

1945 டிசம்பர் 16-ல் நாகர்கோவிலில் ‘அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்’ தொடங்கப்பட்டது. அதன் தலைவராக சாம் நத்தானியல், செயலாளராக ஆர்.கே.ராமும் செயல்பட்டார்கள். 1946 ஜூன் 30-ல் அந்தக் கட்சிக்கு ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1947 செப்டம்பர் 8-ல் ஆலன் நினைவு அரங்குக் கூட்டத்தில் மார்ஷல் நேசமணி தன்னை திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.

விடுதலைத் தீ

1948-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 18 இடங்களில் போட்டியிட்டு 14 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அமைச்சரவை யிலும் இடம் கிடைத்தது. சிதம்பரநாதன் வருவாய்த் துறை அமைச்சரானார். திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை, அகஸ்தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரை, சிற்றூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கக்கோரி போராட்டம் தீவிரப்பட்டது. போராட்டத்தை நசுக்க வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனைக் கண்டித்து சிதம்பரநாதன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார். மார்ஷல் நேசமணியின் தொடர்ச்சியான, திட்டமிட்ட செயல்பாடுகளால் விடுதலைத் தீ வேகமாகப் பரவியது.

1948-ல் குமரி மாவட்டம் மங்காடு பகுதியில் குமரி உரிமை மீட்புப் போராட்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கேரளக் காவலர்கள் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மங்காடு தேவசகாயம், பைங்குளம் செல்லையன் பலியானார்கள். பீர்மேடு, மூணாறு, தேவிகுளம் என தமிழர்கள் வாழும் பகுதியெல்லாம் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. நேசமணி தலைமையில் பீர்மேட்டுக்கே சென்ற போராட்டக்காரர்கள் தமிழர் பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்க கோஷமிட்டனர். மூணாறு பகுதியில் எஸ்.எஸ். சர்மா, குப்புசாமி, தேவியப்பன் தலைமையில் போராட்டம் தீவிரமடைந்தது. 1954 ஜூலை மாதம் மூணாறில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. நேசமணி, அப்துல் ரசாக், சிதம்பரநாதன் எனப் பலரும் மூணாறுக்குச் சென்று தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர். 1954 ஆகஸ்ட் 11 தினத்தை விடுதலை தினமாக அறிவித்தது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். அன்றைய தினம் மார்த்தாண்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி எம்.பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதே போல் புதுக்கடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் காரணமே தெரியாமல், சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வேகமெடுத்த போராட்டத்தால் ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானமும் கிடுகிடுத்தது. தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு என நான்கு தாலுகாக்களையும் சேர்த்து குமரி மாவட்டம் உதயமானது. 1956 நவம்பர் 1-ல் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது. திருத்தமிழர் போராட்டத்தில் பங்கெடுத்த தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா கூறும்போது, “ 1947 ஏப்ரல் 1-ம் தேதி சித்திரைத் திருநாள் பாலராம வர்மா மகாராஜா திருவிதாங்கூர் தனி நாடு எனப் பிரகடனப்படுத்தினார். 9 தாலுகாக்களைத் தமிழகத்துடன் இணைக்கக்கோரிப் போராட்டம் நடந்தது. அதில் செங்கோட்டை தாலுகாவின் ஒரு பகுதி என நான்கரை தாலுகாக்கள்தான் கிடைத்தன” என்கிறார்.

தொடரும் சோகம்!

பக்கத்திலேயே கேரள மாநிலத் தலைநகரம். ஒன்றரை மணி நேரத்தில் சென்று விடக்கூடிய தூரத்தில் அதன் தலைமைச் செயலகம். அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு, தமிழின்பால், தமிழகத்தின்பால் உள்ள நம்பிக்கையால் போராடி இணைந்த மாவட்டம் குமரி. இப்போதும் அதன் வளர்ச்சி எதிர்பார்ப்பாகவே நீடிப்பது தான் பரிதாபம்.

கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர விவசாயிகளும், கேரள மாநில பாறசாலை பகுதி விவசாயிகளும் பயன்படும் வகையில் இரு மாநிலங்கள் சார்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, நெய்யாறு இடதுகரைக் கால்வாய் வெட்டப்பட்டது. தமிழகத்தின் ரிசர்வ் வனப் பகுதிகளில் சேரும் தண்ணீர்தான், கேரளத்துக்குச் சென்று இந்த அணைக்கு நீராதாரமாக உள்ளது. காமராஜர் ஆட்சியில் இந்தக் கால்வாய் திறக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிச்சையாக இங்கு வந்த தண்ணீரை நிறுத்திவிட்டது கேரளம். விளவங்கோடு வட்ட விவசாயம் இதனால் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயிகள் அதிகம். ரப்பர் விலை வீழ்ச்சியில் வாடும் இவர்களது நிலை கவனத்தில் கொள்ளப்படுவதே இல்லை.

குமரியில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் கிடக்கிறது. குமரி மாவட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமான மீனவர் வாக்குகளே உள்ளன. இதுவரை இங்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமானவர்களின் எண்ணிக்கை மட்டும் 170-க்கும் மேல். மீனவர்களைத் தேட ஹெலிகாப்டர் வசதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது. மற்ற மாவட்டங்களில் ஓடி உருக்குலைந்த பேருந்துகளே இங்கு ஓடிக்கொண்டிருக்கின்றன. சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

கேரளத்திலிருந்து பிரிந்து 60 ஆண்டுகள் ஆகியுள்ள இந்த நிலையிலும், குமரி மாவட்ட ரயில்வே நிர்வாகம் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ்தான் உள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் வரும் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஒரு ஏடிஎம் வசதிகூட இல்லாததன் காரணம்கூட இதுதான். குமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தளங்கள் அதிகம் இருந்தும் அதில் போதிய வளர்ச்சிப் பணிகள் இல்லை. தமிழக அளவில் கல்வியில் முதலிடத்தில் இருந்தாலும், இங்கு போதிய தொழில் வாய்ப்புகள் இல்லை. குமரியில் ரப்பர் ஆராய்ச்சி மையம், தேன் ஆராய்ச்சி மையம் என கோரிக்கைகள் நீண்டுகொண்டே செல்கின்றன.

கேரள மாநிலத்தில் குளங்களில் தாமரைப் பூ வளர்க்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு கடுமையாய் பின்பற்றப்படுகின்றது. கேரளத் தேவைக்காக குமரி நீராதாரங்களைப் பாழ்படுத்துகின்றனர். கேரள ரியல் எஸ்டேட் முதலாளிகளால் குமரி விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன. குமரியின் இயற்கை வளங்களான மலைத்தொடர்கள் கேரளத்தின் தேவைக்காகவே குவாரிகளாய் உருமாறி நிற்கின்றது. கேரளத்தில் அவ்வளவு எளிதில் குவாரிகளுக்கு அனுமதியும் கொடுத்துவிடுவதில்லை.

சொல்லாமல் செய்த காமராஜர்

59 ஆண்டுகளுக்கு முன்னால், குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்ததும் இணைப்பு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் காமராஜர். ‘‘நீங்கள் கேரளத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். கல்வியிலும், பொருளாதாரத்திலும் வளர்ந்திருக்கிறீர்கள். ஆரலுக்கு (ஆரல்வாய்மொழி) கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை அடைய இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்துகொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடன் சேர்வதற்கு நான் ஒழுங்கு செய்யலாம்” என்றார்.

அப்படிச் சொன்ன காமராஜர்தான் பேச்சிப்பாறை விரிவாக்கத் திட்டம், சிற்றாறு பட்டணங்கால் திட்டம், குமரியில் அரசு ரப்பர் கழகம், கோதையாறு மின்திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய் ராணித்தோட்டம் அரசுப் பணிமனை, கோணத்தில் அரசு ஜடிஜ, பாலிடெக்னிக் கல்லூரிகள், மாத்தூர் தொட்டில் பாலம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைத் தந்தார்.

9 தாலுகாக்களை இணைக்கோரி நடைபெற்றதுதான் இந்த திருத்தமிழர் போராட்டம். அதில் கேட்டபடி தேவிகுளமும், பீர்மேடும் இணைக்கப்பட்டிருந்தால் இப்போது முல்லைப் பெரியாறு போராட்டம் நடந்திருக்காது. அந்த வகையில் பார்த்தால் இது ஒரு தீர்க்க தரிசனப் போராட்டம்தான்!

தொடர்புக்கு: swaminathan.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x