Last Updated : 05 Feb, 2021 03:16 AM

 

Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

மியான்மரின் ராணுவம் ஏன் ஆட்சியைக் கவிழ்த்தது?

மியான்மரில் கடந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே தேர்தல் முடிவுகளைப் பற்றி அந்நாட்டின் ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலாய்ங் சந்தேகத்தை எழுப்பினார். “தேர்தல் முடிவுகளைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்” என்று நவம்பர் 8 அன்று நடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பு உள்நாட்டு ஊடகங்களிடம் அவர் கூறினார். ஆங் சான் சூச்சியின் என்.எல்.டி. கட்சி, பதிவானதில் கிட்டத்தட்ட 80% வாக்குகளைப் பெற்றுப் பெருவெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற யூ.எஸ்.டி.பி. கட்சி படுதோல்வியடைந்தது. தேர்தல் முடிவுகளை யூ.எஸ்.டி.பி. கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எந்த ஆதாரமும் இன்றி யூ.எஸ்.டி.பி. கட்சி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு ராணுவம் ஆதரவு கொடுத்தது.

மியான்மரின் ஒன்றியத் தேர்தல் ஆணையர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, தேர்தல் முடிவுகள் சரியானவையே என்று உறுதிப்படுத்தினார். திங்கள்கிழமை நாடாளுமன்றம் கூடுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு ராணுவம் நடவடிக்கையில் இறங்கியது. அரசின் ஆலோசகர் சூச்சி, அதிபர் வின் மியின்ட் போன்றோரையும் என்.எல்.டி. கட்சியின் பிற தலைவர்களையும் ராணுவம் கைதுசெய்தது. ஓராண்டுக்கு நெருக்கடிநிலையை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அதிகாரத்தை ராணுவம் தன் கையில் எடுத்துக்கொண்டது. மூர்க்கமான ராணுவ சர்வாதிகாரத்திடமிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு மெதுமெதுவாக ஜனநாயகத்துக்கு மாற ஆரம்பித்த மியான்மர் தற்போது மீண்டும் ராணுவத்தின் கைக்குச் சென்றுவிட்டிருக்கிறது.

ஜனநாயக மாற்றம் ஏன் தோல்வியுற்றது?

ராணுவத்தால் ஆளப்பட்ட மியான்மரின் அரசியல் சூழல் 2010 வாக்கில் மாற ஆரம்பித்தது; எந்த மாற்றம் ஏற்பட்டாலும் ராணுவத் தளபதிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் விதத்தில் ராணுவமானது புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. 1992-லிருந்து அந்த நாட்டை ஆண்டுவந்தவரான தான் ஷ்வே அதிகாரக் கட்டமைப்பை மாற்றியமைத்து தனக்கு விசுவாசமாக இருந்த இளம் ராணுவ வீரர்களை அதிகாரத்தின் படிநிலையில் மேலே ஏற்றினார். புதிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தேர்தல்களையும் நடத்தினார். அந்த அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சூச்சியின் என்.எல்.டி. கட்சி 2010 தேர்தலைப் புறக்கணித்தது. அந்தத் தேர்தலில் யூ.எஸ்.டி.பி. கட்சி வெற்றி பெற்றது. அடுத்த 5 ஆண்டுகளில் ராணுவமானது அரசின் மீதும் சமூகத்தின் மீதும் தான் கொண்டிருந்த பிடியைத் தளர்த்திக்கொண்டது. சூச்சி உள்ளிட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஊடகத் தணிக்கை தளர்த்தப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா 2012-ல் மியான்மருக்குச் சென்றது அமெரிக்காவுக்கும் மியான்மருக்கும் இடையில் உருவான நட்பை உணர்த்தியது. சூச்சியின் கட்சியும் தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ராணுவத்தால் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. முதன்முறையாக அந்த நாட்டில் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் நடத்தப்பட்டதும், பல கட்சிகள் போட்டியிட்டதுமான 2015 தேர்தலில் என்.எல்.டி. கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைத்தது; அந்த நாடு ஜனநாயகத்தை நோக்கிய முழு மாற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை உயர்த்தியது.

ஆனால், 2008 அரசமைப்புச் சட்டமானது அப்படிப்பட்ட ஒரு மாற்றத்தைத் தடுப்பதற்குத் தேவையான கூறுகளைக் கொண்டிருக்கிறது. அந்த அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை அந்நாட்டின் அதிபருக்கு ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அவரோ அவருடைய கணவரோ மனைவியோ குழந்தைகளோ வெளிநாட்டுக் குடிநபராக இருக்கக் கூடாது. தனது இரண்டு மகன்களும் பிரிட்டிஷ் குடிமகன்களாக இருப்பதால் சூச்சியால் அதிபராக ஆக முடியாது. பாதுகாப்புத் துறையும் உள்துறையும் ராணுவத்தின் வசமே இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் வரையறை செய்திருக்கிறது. மேலும், அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் 25% (664 உறுப்பினர்களில் 166) ராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தும் எந்த முயற்சியையும் ரத்துசெய்யும் அதிகாரம் ராணுவத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசிடம் அதிகாரத்தைத் தருவதற்கு ராணுவம் இசைந்தாலும் பாதுகாப்புத் துறை, உள்நாட்டுப் பாதுகாப்புக் கொள்கைகள் வகுப்பது போன்றவற்றைத் தன்வசத்திலேயே வைத்திருக்கும், ராணுவத்தின் அரசியல் வாகனமான யூ.எஸ்.டி.பி.க்கென்று நாடாளுமன்றத்தில் இத்தனை உறுப்பினர்கள் என்று ஒதுக்கப்பட்டிருக்க, தேர்தல்களிலும் அதற்கு அனுகூலம் அதிகம். இப்படியெல்லாம் இருந்தும் தளபதிகளுக்கு இன்னும் நிறைய வேண்டியிருந்திருக்கிறது.

ராணுவத்துக்கு என்ன வேண்டும்?

ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகத் தேர்ந்தெடுத்த நேரத்தைப் பற்றி விளக்கவே அவசியமில்லை. புதிய நாடாளுமன்ற அவை கூடுவதற்குக் குறிக்கப்பட்டிருந்த நேரத்துக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. நாடாளுமன்றம் கூடியிருந்தால் தேர்தல் முடிவுகளுக்கு அரசமைப்புச் சட்டரீதியிலான அங்கீகாரம் கிடைத்திருக்கும். நவம்பர் தேர்தலிலிருந்தே என்.எல்.டி. கட்சிக்கும் ராணுவத்துக்கும் இடையே பதற்றம் நிலவிவந்தது. 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள் சூச்சியின் புகழ் மக்களிடையே அதிகரித்துவருவதையும் ராணுவத்தின் செல்வாக்கு மக்களிடையே மங்கிக்கொண்டுவருவதையும் உணர்த்தின. மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போரிடுகிறோம் என்ற பெயரில் அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ஒடுக்குமுறையை ராணுவம் கட்டவிழ்த்துவிட, அதனால் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குத் தப்பியோடினார்கள். அதற்குப் பிறகுதான் 2020 தேர்தல் நடைபெற்றது. தலைமைத் தளபதி ஆங் ஹிலாய்ங்கை நாட்டின் பாதுகாப்புக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கடுமையான போர்வீரரைப் போல ராணுவம் சித்தரித்துக்கொண்டிருந்தது. அவர் தனது நடவடிக்கைகளைப் பிரபலப்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினார். (ரோஹிங்கியாக்கள் மீதான ஒடுக்குமுறைக்குப் பிறகு அவரது ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது).

போரோ, மக்கள் தொடர்பு உத்திகளோ ராணுவ ஆதரவு பெற்ற அரசியலர்கள் தேர்தலில் வெற்றிபெற உதவவில்லை. ராணுவத்துக்கென்று 166 உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருக்க, ஆட்சியமைக்கவும் அடுத்த அதிபரை நியமிக்கவும் யூ.எஸ்.டி.பி.க்கு மேலும் 167 உறுப்பினர்கள் தேவைப்பட்டார்கள். என்.எல்.டி. கட்சிக்கோ ஆட்சியமைக்க 333 இடங்கள் தேவைப்பட்டன. அந்தக் கட்சிக்கு வாக்காளர்கள் 396 இடங்களை வழங்க யூ.எஸ்.டி.பி.யால் வெறும் 33 தொகுதிகளில்தான் வெற்றிபெற முடிந்தது. இது மியான்மரின் ராணுவத் தலைமையகமான டட்மடாவ் வளாகத்தில் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது. மக்களிடையே சூச்சி மிகவும் செல்வாக்கு கொண்டிருக்க, எல்லைக்குட்பட்ட ஜனநாயகப் பரிசோதனையானது ராணுவத்தின் மாற்றிக்கொள்ள முடியாத நலன்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஆபத்து விளைவித்துக்கொண்டிருக்கிறது என்பதை ராணுவத் தளபதிகள் உணர்ந்திருக்க வேண்டும். தனது முதல் பதவிக் காலத்தில் சூச்சி ராணுவத் தளபதிகளுடன் சமாதானமாக இருக்க முயன்றார். குறிப்பாக, ரோஹிங்கியா விஷயத்தில். ‘இனப்படுகொலை நோக்க’த்தில் மேற்கொள்ளப்பட்டது என்று ஐநாவின் விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்ட ரோஹிங்கியாக்கள் மீதான ஒடுக்குமுறையில் சூச்சி ராணுவத்துக்கு ஆதரவாகப் பேசினார். எனினும், அதனாலெல்லாம் தளபதிகள் திருப்தியடைந்துவிடவில்லை.

அடுத்தது என்ன?

வாக்காளர்கள் விஷயத்தில் முறைகேடு நடைபெற்றதாகத் தாங்கள் அளித்த புகார்களுக்கு என்.எல்.டி. அரசு நடவடிக்கை எடுக்காததால் நெருக்கடிநிலையை அறிவித்ததாக ராணுவம் கூறுகிறது. காலக்கெடு எதனையும் குறிப்பிடாமல், தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவம் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆனால், என்.எல்.டி. இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதிபர் ஒபாமா காலத்தில் மியான்மரில் ஜனநாயகத்தை நோக்கிய மாற்றத்துக்கு உதவிய அமெரிக்கா தற்போது கடுமையாக எதிர்வினை ஆற்றியிருக்கிறது. இந்தியா தனது ‘ஆழ்ந்த கவலை’யை வெளிப்படுத்தியிருக்கிறது. சீனாவின் எதிர்வினையைப் பார்த்தால், தளபதிகள் சீனாவிலிருந்து எந்த எதிர்ப்பையும் சந்திக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது. ஏற்கெனவே மியான்மரில் பெருமளவு முதலீடுகள் செய்துகொண்டிருக்கும் சீனாவுக்கு நெருக்கமாகச் செல்வதன் மூலம் அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட அழுத்தங்களை மியான்மரால் தவிர்க்க முடியும் என்பதையே இது உணர்த்துகிறது. ஆனால், சூச்சியின் செல்வாக்கும், ஆட்சியில் 5 ஆண்டுகள் இருந்ததும் புத்துணர்ச்சி பெற்றதுமான என்.எல்.டி. கட்சியும் ராணுவத்துக்கு முட்டுக்கட்டையாக இருப்பார்கள். கூடவே, ராணுவத்தின் அவப்பெயரும் ஒரு சுமையாக இருக்கும்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x