Published : 03 Feb 2021 11:43 AM
Last Updated : 03 Feb 2021 11:43 AM

சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 23: ஊர் கூடி நடத்திய திருமணங்கள்!

கல்யாணி நித்யானந்தன்

சில நாட்களுக்கு முன் நெருங்கிய உறவினர் குடும்பத்தில் ‘கரோனா’ திருமணம் நடந்தது. அனுமதிக்கப்பட்ட 50 பேரில் என்னைச் சேர்க்க வேண்டாம் என்று நான் முதல் நாள் மாலை நடந்த நிச்சயத்துக்குப் போனேன். 500 நாற்காலிகளில் நெருங்கிய உறவினர்களான நாங்கள் 20 பேர் அமர்ந்திருந்தோம். பிறகு நடந்த விருந்து, வீட்டில் குடும்பத்தினரோடு சாப்பிடுவதுபோல இருந்தது.

கரோனா பக்கவிளைவாகச் சில திருமணங்கள் தள்ளிப் போடப்பட்டன. சில நின்றே போயின. மணமகனோ, பெற்றோர்களோ வெளிநாட்டில் மாட்டிக்கொண்டதால் குறித்த நேரத்தில் திருமணமோ நிச்சயதார்த்தமோ நடைபெறவில்லை. நல்ல பக்க விளைவு என்னவென்றால் நடந்த திருமணங்கள் குறைந்த செலவில், அனாவசிய ஆடம்பரங்கள் இன்றி நடந்தன. சில நல்ல உள்ளங்கள், திருமணச் செலவுக்கு வைத்திருந்த பணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உதவியைச் செய்தார்கள்.

கடந்த நூற்றாண்டின் 20-30-களில் நடந்த திருமணங்களைப் பற்றி என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். என் இளம்பருவத்தில் நான் கண்ட கிராமத்துத் திருமணங்களின் நினைவுகள் வந்தன. உணவுக்கும் பஞ்சமில்லை, உறவுக்கும் பஞ்சமில்லை. ஒரு வீட்டில் திருமணம் என்றால் அது தங்களைச் சார்ந்ததாகவே கருதி ஈடுபாட்டுடன் கலந்துகொண்டார்கள். ஐந்து நாள் திருமணம், சடங்குகளைத் தவிர நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. இன்று பலர் அவற்றைக் கேள்விப்பட்டுக்கூட இருக்க மாட்டார்கள்.

நிச்சயம் செய்வது என்பதை ‘லக்ன பத்திரிகை’ வாசிப்பது என்பார்கள். குடும்ப சம்பிரதாயப்படி பெண் வீட்டிலோ, பிள்ளை வீட்டிலோ நடைபெறும். இன்று அடுக்குமாடிக் குடியிருப்பில் இடம் இல்லாததாலே மண்டபங்களில் (ஆடம்பரமோ?)

நடக்கிறது. அன்று நெருங்கிய உறவுகளான மாமா, மாமி, அத்தை, அவர் கணவர், தாத்தா, பாட்டி ஆகியோர்தான் இருப்பார்கள். பெண்ணும் பிள்ளையும் முக்கியமில்லை. அருகில் அமர்வதோ மாலையோ கிடையாது. முகூர்த்த தேதி, நேரம், இடமெல்லாம் லக்ன பத்திரிகையில் கூறப்பட்டிருக்கும். இன்றோ திருமண மண்டபத்தைத் தேடிப் பிடித்து அச்சாரம் கொடுத்த பிறகே முகூர்த்தம் தீர்மானிக்கப்படுகிறது.

அந்தக் காலத்தி அழைப்பிதழ் ‘பளபள’ காகிதத்தில் அச்சடிக்கப்படும். வெளியே ரோஸ் நிறம், உள்ளே மஞ்சள் நிறம். குடும்பத்தின் மூத்தவர் பேரில்தான் அழைப்பு இருக்கும். உள்ளூர் உறவினர்களை நேரில் போய் அழைப்பார்கள். சில முக்கிய உறவுகளை வெளியூருக்குப் போய் நேரில் அழைப்பார்கள். ஒரு ‘கை கடுதாசி’ போடப்படும். பின்னே அச்சடித்த அழைப்பிதழுடன் கையால் எழுதிய ஒரு கடிதம் வைப்பார்கள். அதுவும் மறைந்து இப்போது தொலைபேசி அழைப்பாயிற்று. இந்தக் கணினி யுகத்தில் அழைப்பே இணையம்வழியில்தான். என் வயதுக்காரர்களுக்கு வீட்டிலுள்ளோர் மின்னஞ்சலில் வாசித்துத் தெரிவித்தால்தான் விவரம் தெரிகிறது. திருமணமும் ஐந்து நாட்களில் இருந்து அரை நாள் ஆகிவிட்டது.

கிராமத்தில் கல்யாணத்துக்கு ஒரு மாதம் முன்பே தினம் வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு கல்யாண வீட்டில் கூடுவார்கள். அப்பளம் இடுவது, வடாம் பிழிவது, மாவு திரிப்பது, மிளகாய்ப் பொடி இடிப்பது, வேப்பிலைக்கட்டி இடிப்பது, ஊறுகாய் போடுவது என்று கூடி உழைப்பார்கள். சீர் பட்சணம் செய்யத் தொடங்குவார்கள். கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னதாக இட்லிக்குத் தேவையான அரிசியை வீடு வீடாகப் பகிர்ந்து கொடுத்து விடுவார்கள். அதை ஊற வைத்துப் பதமாக அரைத்து உப்பு போடாமல் கல்யாண வீட்டில் கொடுத்துவிடுவார்கள். இரவு பரிசாரகர்கள் ஊற வைத்த உளுந்தை அரைத்து உப்போடு அரிசி மாவில் கலந்துவிடுவார்கள். மறுநாள் காலை அது பொங்கியிருக்கும். பூப்போல இட்லியாகும். ஈரத்துணி கட்டிய பெரிய இட்லித் தட்டில் அது வெந்ததும், கவிழ்க்கும்போது ஒட்டாமல் விழும் அழகே அழகு!

இரண்டு நாள் முன்னதாக மணப்பெண்ணுக்கும் தோழிகளுக்கும் மருதாணி இடுவார்கள். ‘மெஹந்தி’ அல்ல. இலைகளைப் பறித்து, களிப்பாக்குடன் அம்மியில் மையாக அரைப்பார்கள். அத்தையோ பெரியக்காவோ இடுவார்கள். உள்ளங்கைகளில் ஒரு வட்டம். நான்கு மூலைகளில் பொட்டு, விரல் நுனிகளில் ‘தொப்பி’, காலிலும் இடுவார்கள். பசி வேளையில் இவர்களுக்குக் குழம்பு சாதம் உருண்டை, உருண்டையாக ஊட்டப்படும். ருசியோ ருசி!

அன்று அழைப்பிதழில் ‘இஷ்ட மித்ர பந்து ஜனங்களுடன் நான்கு நாட்கள் முன்னதாகவே வந்து’ என்று கூறப்பட்டிருக்கும். இன்று அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. பந்து ஜனங்களும் வந்திருப்பார்கள். ஜமக்காளங்களும் தலையணைகளும் நிறைய இருக்கும். ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்குகளின் ‘உஸ்ஸ்’ என்ற சப்தம். ஓரமாகச் சீட்டாடும் குழு. வெற்றிலை பாக்குத் தட்டுகள்.

‘உக்ராண உள்’ளில் சாமான்கள் அடுக்கப்பட்டிருக்கும். தேவைக்கேற்ப சாமான்களை எடுத்துக் கொடுத்து கவனித்துக்கொள்ள ஒரு மருமானோ பெரியப்பா மகனோ சாவியும் கையுமாக இருப்பார்.

பிள்ளை வீட்டார் வேறொரு வீட்டில் தங்க வைக்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்படுவார்கள். பெண் வீட்டில் ஒரு அறையில் கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள், பெண்கள் அணிந்த புடவைகள், புதுப் பூ, சற்று கசங்கிய பூ என்று கலவையான வாசனையுடன் இருக்கும். அதைக் காவலிருக்க ஒரு அத்திம்பேரோ, சித்தியோ இருப்பார். வாயிற்படியில் உட்கார்ந்துகொண்டு கூடத்தில், பந்தலில் நடப்பதை எட்டி எட்டிப் பார்த்தவாறு இருப்பார். அநேகமாக கைம்பெண்ணாக இருப்பார். அதுதான் வேதனையானது.

மாங்கல்ய தாரணம் முடிந்து, ஹோமம் நடக்கும்போது ஒரு புறத்தில் உறவுகளுக்கான துணிகள் கொடுக்கப்படும். பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்தும், சிறிய வயதுக்காரர்களானால் ஆசியுடனும் அளிப்பார்கள்.

சந்திப்போம்... சிந்திப்போம்...
கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x