Published : 03 Feb 2021 03:15 AM
Last Updated : 03 Feb 2021 03:15 AM

முன்களப் பணியாளர்களின் ஊதியக் கோரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளுமா அரசு?

ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளையும் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற்றுக்கொள்வதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மக்களுக்காகப் பணியாற்றும் அரசு ஊழியர்களின் குரல்கள் கனிவோடு அணுகப்பட வேண்டும்; போராட்டத்தில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதே நாம் அரசிடம் எதிர்பார்ப்பது. முதல்வரின் அறிவிப்புக்கு இரண்டு நாட்கள் முன்னதாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் அடையாள ஈர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. அது தொடர்பிலும் அரசும் முதல்வரும் கவனம் செலுத்த வேண்டும்.

சுகாதாரத்தில் நாட்டின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக இன்று தமிழகம் திகழ்கிறது என்றால், அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் இத்துறைக்கு அளித்த தொடர் கவனமும், அர்ப்பணிப்பு மிக்க ஊழியர் படையுமே அதற்கான காரணம். ‘மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம், கரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்களுக்கு இழப்பீடு மற்றும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு, ஆறாண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் செவிலியர்களுக்குப் பணிநிரந்தரம், மத்திய அரசு செவிலியர்களைப் போலவே ஐந்து கட்டக் காலமுறைப் பணி உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்களின் எண்ணிக்கையை உயர்த்துதல்’ ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தே மேற்கண்ட போராட்டம் செவிலியர்களால் நடத்தப்பட்டது. இரண்டாண்டு காலத்தில் பணி நிரந்தரம் ஆக்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ரூ.7,000 ஊதியத்தில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அதைக் குறித்து முடிவெடுப்பதை அரசு தள்ளிவைப்பதில் நியாயம் இல்லை. இந்தப் போராட்டம் நடத்தப்பட்ட அடுத்த நாளே, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக மாநில அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, அரசு மருத்துவர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு மருத்துவர்களுக்கான ஊதியம் குறித்து தமிழக அரசு 2009-ல் பிறப்பித்த அரசாணையை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு இவ்வழக்கு பிப்ரவரி 3-க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதுமே ஒரேவிதமான பணியைச் செய்யும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் வெவ்வேறு விதமான ஊதிய நிர்ணயம் என்பது தவிர்க்கப்பட வேண்டியது. அமைப்புசாரா ஊழியர்களுக்கும்கூட சமூகப் பாதுகாப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்கின்றன. உயிர் காக்கும் மருத்துவத் துறையிலோ இன்னும் நம்மால் தொகுப்பூதியத்தின் பெயரிலான உழைப்புச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை. அரசே அதை முன்னின்று நடத்துகிறது. கரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு ஒருபுறம் என்றால், பொது சிகிச்சைப் பிரிவுகளிலும் அவசர சிகிச்சைகளிலும் தொற்றுக்கான அபாயத்தோடு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பு இன்னொரு பக்கம். அவர்களுக்கு நாம் நன்றிக்குரியவர்களாக இருக்கிறோமா என்பதுதான் கேள்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x