Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

மகாத்மாவும் பிறருக்கு அதிகாரமளித்தலும்

ரமீன் ஜஹான்பிக்லூ

மகாத்மா காந்தியின் நினைவுநாள் வேண்டுமானால் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், அது வெறுமனே அவருடைய வாழ்க்கையையும் அவருடைய செய்தியையும் கொண்டாடுவதற்கான தருணம் மட்டுமல்ல. நம்மிடையே இருந்துகொண்டு இந்த உலகத்தின் மேம்பாட்டுக்காகப் பங்களிக்கும் மேன்மையான ஆத்மாவாக காந்தியை நாம் கருத வேண்டும்.

ஆகவே, நம் முன் உள்ள பணியானது தனித்தனியாகவும் கூட்டாகவும் நாமெல்லோரும் இன்றைய உலகில் காந்திய ஆன்மாவின் மேன்மையை எப்படிப் புரிந்துகொண்டு முன்னெடுத்துச் செல்லப்போகிறோம் என்பதில் இருக்கிறது. ஒரே ஒரு கருத்தாக்கத்துக்காக காந்தி நினைவுகூரவும் அடையாளம் காணப்படவும் வேண்டுமென்றால், அது ‘பிறருக்கான’ அதிகாரமளிப்பு என்ற கருத்தாக்கத்துக்காகத்தான்.

கருத்து மாறுபடுவதற்கான உரிமை

காந்தியின் அரசியல் தத்துவத்தின் சாரம் என்பது சந்தேகத்துக்கிடமின்றி பிறருக்கான அதிகாரமளிப்பு என்ற கருத்தாக்கம்தான். இதில் பாலினம், இனம், வர்க்கம், மதங்கள் என்ற வேற்றுமை கிடையாது. எனவேதான், சுதந்திரமாகப் பேசுவதற்கும் வேறுபட்ட வகையில் நடந்துகொள்வதற்குமான உரிமையை நிலைநாட்டுவதன் மூலம் பிறருக்கு அதிகாரமளிக்க முயற்சிக்கும் சமூக-அரசியல் நிறுவனமாக ஜனநாயகத்தைக் காந்தி புரிந்துகொண்டார். உள்ளபடியே, பெரும்பான்மையினரின் எண்ணத்தைவிட மாறுபட்ட எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கும் தங்கள் கருத்து பொதுவெளியில் தடையில்லாமலும் வெளிப்படையாகவும் கேட்கப்படுவதற்குமான உரிமையாகப் பிறருக்கான அதிகாரமளித்தலை காந்தி கருதினார். அதுபோன்ற ஒரு கருத்து காந்தியின் ஒரு கூற்றில் இடம்பெற்றிருக்கிறது: “ஜனநாயகத்தின் ஆன்மா என்பது வடிவங்களை ஒழித்துக்கட்டுவதன் மூலம் சரிசெய்யப்படக் கூடிய இயந்திரம் போன்ற விஷயம் கிடையாது. அதற்கு மனமாற்றம் தேவைப்படுகிறது… சகோதரத்துவத்தின் ஆன்மாவைப் பற்றி போதிக்கப்படுவது ஜனநாயகத்தின் ஆன்மாவுக்கு அவசியம்… ஜனநாயகம் என்பது மக்களெல்லாம் ஆட்டுமந்தைகள் போல் நடந்துகொள்ளும் ஒரு நிலை அல்ல. ஜனநாயகத்தின் கீழே கருத்து வெளிப்பாட்டுக்கும் செயல்பாட்டுக்குமான தனிநபரின் சுதந்திரமானது தீவிரமாகப் பாதுகாக்கப்படுகிறது.”

பிறரின் பிறர்மையைக் காப்பதற்கான தனது தேடலில் காந்தி தனிநபர்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் முகவர்களாக ஆவதன் மூலம் தங்களின் பலவீனமான இயல்புகளை எதிர்த்து ஆள்வதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். கருத்து வெளிப்பாடு, செயல்பாடு ஆகியவற்றுக்கான உரிமையை ஒவ்வொருவருக்கும் உத்தரவாதப்படுத்தும் குடிமைத்துவக் கலாச்சாரத்தை உருவாக்கி வளர்த்தெடுக்கவும் அவர் முயன்றார். பிறருக்கான அதிகாரமளிப்பு என்பது உருவாக்கப்பட்டு, பொன்போல் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒரு விழுமியம் ஆகும். வேறு சொற்களில் சொல்வதென்றால் அதிகாரமளிப்பது என்பது காந்தியைப் பொறுத்தவரை பரிவுக்கும் உறவுக்குமான ஒரு செயலே ஆகும். ஆகவே, மாற்றம் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக, ஒவ்வொரு குடிநபருக்கும் அதிகாரமளித்தல் என்பது அறத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான ஒத்திசைவின் அடிப்படையாக இருக்கும் மனசாட்சி என்ற அனுபவமாகும்.

அறம் சார்ந்து காந்தியம் கொடுக்கும் அறைகூவல் என்பது உண்மையில் நவீன அரசியலை போர், மேலாதிக்கம், வன்முறை போன்றவற்றின் பாதைகளைக் குறுக்கிவிடுவதன் மூலம் அதன் உள்ளிருந்தே பண்படுத்தும் ஒரு வழிமுறையாகும். பிறரின் பிறர்தன்மை குறித்த கேள்விக்கு விடைகாண முயல்வதன் மூலமாக அறம்சார்ந்த குடிமைத்துவத்துக்கும் பரிவுடன் கூடிய நட்புக்குமான தனிநபரின் திறனை வளர்த்தெடுக்க காந்தி முயன்றுகொண்டிருந்தார். காந்தியின் பார்வையைப் பொறுத்தவரை அகிம்சையானது ஒரு விழிப்புணர்வைத் தூண்டியது. அந்த விழிப்புணர்வு தனிநபர்களை ஒற்றைத்தன்மை கொண்ட அகந்தையிலிருந்து நகர்த்தி பன்மைத்தன்மை கொண்டதும் துயரங்களைப் பகிர்ந்துகொள்வதுமான நிலைக்கு நகர்த்தியது.

மேலும், இந்த விழிப்புணர்வானது மனித குலத்துக்குப் பொது எல்லை தேவை என்று அறைகூவியது. இது பிறரின் பிறர்மையைப் பற்றிச் சிந்திக்கும் வழிமுறையை வலுப்படுத்தியது. அரசியலை காந்தி அணுகிய விதத்தில் மிகவும் ஆர்வமூட்டுவதும், பொருத்தப்பாடு கொண்டதும் எது என்றால், சுதந்திரத்தை உருவாக்கும் நாகரிகத்தின் நடைமுறையை, பிறரைப் பிறராகவே உள்ளடக்கும் செயலாக அவர் புரிந்துகொண்டதுதான்.

அவருடைய பிரகடனம்

காந்தியின் மிக முக்கியப் படைப்பான ‘இந்திய சுயராஜ்ஜியம்’ நூலைப் பிறரின் பிறர்மைக்கான பிரகடனமாகப் படித்துப் புரிந்துகொள்ளலாம். இதில் காந்தி ஒரு புதிய வகை நாகரிகத்தை அவரது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இது மனித குலத்தை உயர்ந்த தார்மிக நிலைக்கு எடுத்துச்செல்கிறது. பிறரின் பிறர்மையை நிராகரிக்கும் பொய்யான வாழ்க்கை நிலையாகப் பயன்பாட்டியத்தைச் (utilitarianism) சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், தார்மிகரீதியில் ஒருவருக்கொருவர் பிணைந்திருக்கும் நிலையையும் பரிவார்ந்த பன்மைத்துவத்தையும் குறித்த தனது கருத்தாக்கத்தை முன்வைக்கிறார். காந்தியைப் பொறுத்தவரை, அர்த்தமின்மை, வன்முறை ஆகிய போக்குகளை உருவாக்குவதைவிட நாகரிகமானது மனித குலத்தின் அறம்சார்ந்த முன்னேற்றத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார். உண்மையில், நாகரிகத்தைப் பற்றிய காந்தியின் பார்வை ஏன் பொருத்தப்பாடு கொண்டதாக இருக்கிறது என்றால், லௌகீகத்தைப் புறந்தள்ளிவிட்டு அறத்துக்கே முன்னுரிமை கொடுப்பதன் மூலம் நல்வழி, பரிவுணர்வு ஆகியவற்றின் பாதையை மனித குலம் தேர்ந்தெடுக்க நாகரிகமானது உதவ வேண்டும் என்ற அவரின் உறுதியான நம்பிக்கையால்தான். சமூகத்தில் நிலவும் மாறுபாடுகளாலும் வேற்றுமைகளாலும் கருத்துகள், விழுமியங்கள் ஆகியவற்றில் இருந்த பன்மைத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து காந்தி உணர்ந்திருந்தார்.

பிறர் பேசுவதைக் கேட்கும் கலை வாய்க்கப்பெற்றிருக்கும் மக்கள் உள்ள ஓர் அரசியல் சமூகத்தில்தான் பிறருக்கு அதிகாரமளித்தல் குறித்த காந்தியின் கருத்தாக்கம் செல்லுபடியாகும் என்பதில் வியப்பேதும் இல்லை. வேறு சொற்களில் கூறுவதானால், பிறர் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கும் கலையானது, பேச்சு சுதந்திரத்தைப் போலவே கொடுங்கோன்மையின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துப் பிறரின் பிறர்மைக்கு முக்கியத்துவம் தருவதற்கான வழிவகையாகும். ஆகவே, பேச்சுரிமையையும் கேட்பதற்கான அவகாசத்தையும் வெளியையும் பிறருக்கு வழங்க மறுக்கும் ஒரு தனிநபரை அல்லது ஒரு சமூகத்தைக் கொடுமையானவர்கள் என்று நாம் கருதலாம். பரிவுணர்வின் எதிரி கொடுங்கோன்மை என்றால், பிறர் மேல் ஆதிக்கம் செலுத்துவது, பிறரை அடக்கியாள்வது ஆகியவற்றின் தர்க்கத்தை மறுக்கும் ஒரு உணர்வின் வடிவத்தைப் பிறரின் பிறர்மை மீது அக்கறை காட்டும் செயல்திட்டம் பரிந்துரைக்கிறது எனலாம். ஒருவரை மற்றொருவர் அடக்கியாள்வதன் ஆபத்துகளை மனித நாகரிகம் குறித்த வாசிப்பினூடாக காந்தி நன்றாகவே புரிந்துவைத்திருந்தார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால்தான், சகிப்பின்மையும் விலக்கலும் நிலவும் சூழலில் பிறரின் பிறர்மையை ஒதுக்கித்தள்ளுவதற்கு அவர் மறுக்கிறார். சமூகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், ஏன் மதரீதியாகவும்கூட விளிம்புநிலையை அவர் ஒரு சாபமாகக் கருதவில்லை. மாறாக, பிறர்மையின் எந்த வடிவத்துடனும் உரையாடலில் ஈடுபட்டுக்கொண்டு எல்லா சிந்தனை மரபுகளுடனும் போதுமான அளவுக்கு இடைவெளியைத் தனிநபர் பராமரிக்க உதவும் ஆக்கபூர்வமான சொத்தாகவே அதனைக் கருதினார்.

மறுக்க முடியாத வகையில், காந்தி மெய்மையின் நேர்க்கோட்டு, ஒற்றைத்தன்மையுடைய மொழியாடலை நாகரிகம், அரசியல் வாழ்க்கை குறித்த தனது உரையாடல்ரீதியிலான உள்ளநோக்கத்தால் மாற்றீடு செய்தார். இப்படியாக, நவீன நாகரிகத்தின் அசிங்கத்திலிருந்து அழகை வெளிப்படச் செய்ததன் மூலம் பிறருடைய பிறர்மையின் இருப்புக்கான ஒரு கருவியாகப் புதுவகையிலான ஒற்றுமையின் வடிவத்தை அவர் வார்த்தெடுத்தார். சத்தியத்துடனான காந்தியின் பரிசோதனைகள் அவரைப் பிறருடனான தனது ஒற்றுமைகளைப் பற்றி மட்டுமல்ல பிறருடனான தனது வேற்றுமைகள், மாறுபாடுகள் குறித்தும் பிரக்ஞை கொள்ள வைத்தன. அவருடைய இறப்புக்கு 73 ஆண்டுகளுக்குப் பிறகும், மகாத்மா காந்தி நம் எல்லோருக்கும் எதைத் தொடர்ந்து போதிக்கிறார் என்றால், வாழ்க்கையின் எல்லா அம்சங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதையும், பிறரின் பிறர்மையை, இயற்கை உலகு உட்பட, உதாசீனப்படுத்தும் மனித ஆன்மாவில் மேன்மை ஏதும் இல்லை என்பதையும்தான்.

- ரமீன் ஜஹான்பிக்லூ, இயக்குநர், அகிம்சைக்கும் சமாதானம் பற்றிய ஆய்வுகளுக்குமான மகாத்மா காந்தி மையம், ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம்.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x